Wednesday, May 31, 2006

இலாபம் தரும் பதவி

சட்டப்படி தவறு என்றால் அச்சட்டத்தையே மாற்றுவோம் என்கின்ற அவலம் இப்பொழுதெல்லாம் மிகச் சாதாரணமாக நடக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இலாபம் தரும் பதவியில் இருப்போர் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் போட்டியிடக்கூடாது என்று மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இது தெரிந்தும் இப்படிப்பட்ட பதவியில் இருக்கும் பெருந்தலைவர்கள் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டதே தவறு. இப்படி சட்டத்திற்கு புறம்பாக போட்டியிட்டு வென்றதோடு மட்டுமில்லாமல் மத்திய அரசில் மிகப் பெரும் பதவிகளில் வேறு இருக்கிறார்கள்.

இப்படி சட்டத்திற்கு புறம்பாக போட்டியிட்டு வென்ற 40க்கும் மேலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி நிச்சயம் பறிக்கப் பட வேண்டியது தான். இவர்கள் நிச்சயம் சட்ட விரோதமாகத்தான் பெரும் பதவிகளில் இருக்கிறார்கள். ஆனால் இவ்விஷயம் வெளியில் தெரிந்த பின் மத்திய அரசு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இப்பொழுது அவசரமாகச் சட்டம் இயற்றுகிறது. இவர்களுக்கு தேவையான வகையில், பாதகம் நேராத வகையில் இலாபம் தரும் பதவிகளில் இருந்து சில பதவிகளுக்கு விலக்கு அளிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. அதாவது சட்ட விரோதமாக பதவியில் இருக்கும் அந்த 40க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளைக் காப்பற்ற மத்திய அரசு இச்சட்டத்தை இயற்றுகிறது.

நமது மதிப்புக்குரிய குடியரசுத்தலைவர் இச்சட்டத்தை நன்றாக புரிந்து கொண்டு, இச்சட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு, இச்சட்டத்தில் 'இலாபம் தரும் பதவி' யில் இருந்து நீக்கப்பட்ட சில பதவிகளை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால் கொடுமை என்னவென்றால் மத்திய சட்ட அமைச்சகம் இச்சட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யாமல் மறுபடியும் குடியரசுத்தலைவருக்கு அனுப்பவுள்ளது. ஏனெனில் குடியரசுத்தலைவரின் பரிந்துரைகளை செயல்படுத்தினால், சில தலைவர்களின் பதிவிகளை அவர்களால் காப்பாற்ற இயலாது. மத்திய அரசு இவ்வாறு இரண்டாம் முறை அனுப்பினால், குடியரசுத்தலைவருக்கு அதை மறுக்கும் அதிகாரமில்லை. எனவே அவர் இச்சட்டத்தை அங்கீகரிப்பதைத் தவிர வேறுவழியில்லை.

இந்த அரசியல்வாதிகளால் 33% மகளிர் சட்டத்தை இயற்ற இயலாது, தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த எத்தனையோ நல்ல சீர்த்திருத்தங்களை சட்டமியற்றயிலாது. ஆனால் இவர்களுக்கு பாதகமென்றால் உடனே சட்டத்திருத்தம் கொண்டு வந்துவிடுவார்கள். ஆளும் அரசு என்ன நினைத்தாலும் சட்டமியற்றி சாதித்துக் கொள்ள முடியும் என்கிற வகையில் தான் நம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளதா? ஆம் என்றால் எங்கோ தவறு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

3 comments:

Anonymous said...

Its our fate to have them as our leaders

VSK said...

அரசியல் என்பது எப்போது மக்களுக்குச் சேவை செய்யும் நிலையினின்று, பதவிக்கென முதலீடு செய்யப்பட்ட வியாபாரமாக மாற்றப்பட்டதோ, அப்போதே இதிலெல்லாம் நம்பிக்கையை இழந்துவிட்டேன் நான்!

தான் தன்சுகம் என ஒரு வழக்கு உண்டு!
அந்த சுயநலவாதிகளிலும் கேடு கெட்டவர்கள் இந்த அரசியல்வாதிகள்!

மீண்டும் ஒரு "நெற்றிக்கண்" திறந்தால்தான் உய்வு!

Nakkiran said...

SK,

வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி