Thursday, June 01, 2006

மென்பொருள் நிறுவனங்களின் தொழிலாளர் வைப்புநிதி மோசடி

இப்பொழுதெல்லாம் இந்தியாவிலுள்ள மிகப்பெரும் மென்பொருள் நிறுவனங்கள் தம் தொழிலாளர்களுக்கான வைப்புநிதியை நேரடியாக அரசாங்கத்தில் செலுத்துவதில்லை. இவர்களே தொழிலாளர் வைப்புநிதி ட்ரஸ்ட் என்று ஒன்றை ஆரம்பித்து, அதில் வைப்புநிதியை செலுத்தி வருகிறார்கள். அந்த ட்ரஸ்ட் அந்நிறுவனத்தின் மேற்பார்வையில்தான் இயங்கும் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. இதை நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது போலும். எனக்கு அவ்வளவாக அதைப் பற்றித் தெரியவில்லை.

ஆனால் இப்படி வைப்புநிதி அரசாங்கத்திடம் இல்லாமல், ஒரு நிறுவனத்தின் பிடியிலுள்ள ட்ரஸ்டில் உள்ளதால், அந்நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளிக்கு இது நிச்சயம் பாதகமாகத்தான் உள்ளது. அதுவும் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறியவரினால், அவ்வைப்புநிதியை தன்னுடைய புதிய நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளவோ, அல்லது பணமாகப் பெற்றிடவோ போராட வேண்டியுள்ளது. இந்த வைப்புநிதி ட்ரஸ்ட், நிறுவனத்தின் அனுமதியின்று ஒரு துரும்பையும் நகர்த்தாது. முடிவில் அந்நிறுவனம் நினைத்தாலன்றி அப்பணத்தைப் பெற இயலாது.

என் நண்பர் ஒருவர் ஒரு இந்திய மென்பொருள் நிறுவனத்தின் மூலம் அமெரிக்கா வந்தார். மொத்தம் மூன்று ஆண்டுகள் இங்கு அந்நிறுவனத்திற்காக பணி புரிந்தார். பின்னர் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறி ஒரு புதிய நிறுவனத்தில் சேர்ந்தார். சேர்ந்த புதிய அமெரிக்க நிறுவனத்தில் வைப்புநிதி வாய்ப்பு இல்லாததால், தன் வைப்புநிதி கணக்கை மூடிவிட்டு அதிலுள்ள பணத்தைக் கோரி தன் பழைய இந்திய நிறுவனத்தை அணுகினார். ஆனால் அந்த இந்திய நிறுவனமோ ஏதோ பல நியாயமற்ற விதிமுறைகளை காட்டி, அவர் இன்னும் 10 ஆயிரம் அமெரிக்க டாலர் கட்டினால் தான் No-Dues கொடுக்க முடியும் என்று கூறிவிட்டது. அந்நிறுவன வைப்புநிதி ட்ரஸ்டோ, நிறுவனத்திடமிருந்து clearance சான்றிதழ் பெற்றுத்தந்தாலொழிய வைப்புநிதியைத் தர இயலாது என்று சொல்லிவிட்டது. எனது நண்பர் சில இலட்சம் ரூபாய்களை இழந்ததுடன் மிகுந்த மன உளச்சலுக்குள்ளானார்.

இந்திய அரசாங்கம், தொழிலாளர் நலனுக்காக ஏற்படுத்திய இந்த வைப்புநிதி திட்டம் , இதைப் போன்ற நிறுவனங்களால் மிகத்தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. தன்னுடைய பணத்தைப்/அடிப்படை உரிமையைப் பெறவே ஒரு தொழிலாளி போராட வேண்டியுள்ளது. இது ஒரு நியாயமற்ற மனிதாபிமானமற்ற செயல். ஒவ்வொரு மென்பொருள்பொறியாளர்கள் மூலம் அந்நிறுவனங்கள் அடையும் இலாபம் ஏராளம். ஒரு சராசரி மென்பொருள்பொறியாளர் ஒருநாளைக்கு சராசரியாக 10-12 மணி நேரம் வேலை செய்கிறான். எடுத்தக் கொண்ட ப்ராஜெக்டை எப்பாடுபட்டாவது சொன்ன தேதியில் முடித்துக் கொடுக்கிறான். தன் நிறுவனத்திற்கு அயல்நாடுகளில் பெருமை சேர்க்கிறான்.

அப்படி நிறுவனத்தில் இருக்கும் வரை அவனுடய உழைப்பின் மூலம் இலாபமடைந்தபின், அவன் நிறுவனத்தை விட்டு விலகினால், அவனை அலைக்கழிப்பதில் என்ன நியாயம்? அவனுக்குரிய பணத்தை தர மறுப்பது என்ன நியாயம்? நம் அரசாங்கம் இந்த சட்டவிரோதப் போக்கை கண்காணிக்க வேண்டும். முடிந்தால் வைப்புநிதியை அரசின் நேரடிப் பார்வையின் கீழ் கொண்டு வரவேண்டும். தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய நிறுவனம் இல்லை மனிதர்களானாலும் சட்டத்திற்கு முன் நிறுத்தி தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைத்திட வழிசெய்ய வேண்டும்.

21 comments:

நெல்லைக் கிறுக்கன் said...

நீங்க சொல்லுதது நூத்துக்கு நூறு உண்மயய்யா. நானும் வைப்பு நிதிய தனி டிரஸ்ட் வச்சு ஏமாத்துற ஒரு நிறுவனத்துல இருந்து 2 மாசத்துக்கு முன்ன தான் வெளிய வந்தேன். எனக்கு எப்போ எல்லாக் கணக்கயும் முடிச்சு பணத்தக் குடுப்பானுவளோ தெரியல.... நீங்க சொல்லுத மாதிரி வேலய விட்டுப் போற பாதி பேருக்கு பட்ட நாமம் போட்டு அனுப்பிருதானுவ...

பொன்ஸ்~~Poorna said...

அரசாங்க ட்ரஸ்டுகளில் இருப்பதும் equally மோசம் தான்.. நான் என் முதல் கம்பனியை விட்டு வந்து ரெண்டு வருடமாகி விட்டது.. இன்னும் வரவில்லை என் வைப்பு நிதி :(..

சில நிறுவனங்கள் சீக்கிரமே தந்து விடுவதையும் மறுப்பதற்கில்லை

Karthik Jayanth said...

நக்கீரன்,

நீங்கள் சொல்வது உண்மை என்றே நினைக்கிறேன்.ஆனால் நான் இந்தியாவில் வேலை பார்த்த கடையில் அரசாங்க வைப்பு நிதியில்தான் கணக்கு இருந்தது, இன்னும் பணம் தராமல் இழுத்தடிக்கிறார்கள்.

இத்தனைக்கும் இவர்கள் செய்ய வேண்டியது சர்டிபிகேட்டில் ஒரு சீல் அதன் மேல் கோழி கிறுக்கியது போல் ஒரு கையெழுத்து.. கேட்டால் HR Dept இல் இருந்து இன்னும் clearance வரவில்லை என்று சொல்லுறாங்க.. நான் அந்த கடைய விட்டு வந்து 3 வருடங்கள் ஆகிவிட்டது.. இப்படி இருக்கு இவங்க கடமை உணர்வு..

இதுக்காக அந்த கடையில் இருக்கும் போது அப்படி Code அடிச்சேன், இத்தனை மணி நேரம் உழைச்சேன் என்றெல்லாம் பழைய சோக கதைய அவுத்துவிட மாட்டேன்.. எதோ உங்க பதிவை படிச்சதும் சொல்லணூம்ன்னு தோணிச்சி.. சொல்லிட்டேன்..

Nakkiran said...

நெல்லைகிறுக்கன், பொன்ஸ் மற்றும் Karthik Jayanth அவர்களுக்கு,

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

சீனு said...

//என் நண்பர் ஒருவர் ஒரு இந்திய மென்பொருள் நிறுவனத்தின் மூலம் அமெரிக்கா வந்தார். //

TCS?

Nakkiran said...

சீனு,
இல்லை.. சூரியகாந்திப்பூ நிறுவனம்...

Karthik Jayanth said...

அடடே,

TCS? சூரியகாந்திப்பூ நிறுவனம்...

welcome to the Gang ! :-)

Nakkiran said...

பொன்ஸ் மற்றும் கார்த்திக் அவர்களுக்கும்,
அரசாங்கத்திடம் இருந்தால், குறைந்தபட்சம் இன்றல்ல என்றாவது கிடைக்கும் என்று நம்பிக்கையிருக்கும். உங்கள் பணத்தை தரமுடியாது என்று யாரும் சொல்லப் போவதில்லை.

ஆனால் இந்த ட்ரஸ்ட் நிறுவனங்களோ, பணத்தைத் தர இயலாது என்றல்லவா சொல்கின்றன. அது தான் கொடுமை

குமரன் (Kumaran) said...

நக்கீரன். நானும் இதனை என் நண்பர்கள் பலரிடம் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் சொல்வது உண்மையும் கூட. நானும் அண்மையில் அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தில் இருந்து தான் டாட்டா காட்டிவிட்டு வந்தேன். எனக்கும் முதலில் கொஞ்சம் சங்கடம் கொடுத்தார்கள். ஆனால் போக வேண்டிய ஆட்களிடம் எல்லாம் போய் கொஞ்சம் சத்தம் போட்டேன். எச்.ஆர். மானேஜரிடம் போய் நான் அந்த நிறுவனத்தில் இருந்த போது என் தனிப்பட்ட உழைப்பாலும் நான் கொண்டு வந்த ப்ராஜக்டுக்களாலும் நிறுவனத்திற்கு எவ்வளவு நிதி வந்தது என்ற புள்ளிவிவரங்களை எல்லாம் சொல்லி என்னை அலைய விட வேண்டாம் என்று கொஞ்சம் சத்தம் போட்டேன். என் நல்ல நேரமோ என்னவோ உடனே கையெழுத்து போட வேண்டிய இடத்தில் எல்லாம் போட்டுவிட்டார்கள்; கொடுக்கவேண்டிய பணமும் வந்துவிட்டது (ஒரு ஆறு மாதத்தில்).

ஆனால் அது எல்லாருக்கும் நடப்பதில்லை; கொஞ்சம் டென்சன் ஆகாமல் நம் நிலையில் நிலையாக நின்று வாதிட்டால் அவர்கள் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். பயப்படுபவர்களைத் தான் ரொம்ப மிரட்டிப் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். இது தனியார் நிறுவனங்களில் தான் நடக்கும். அரசாங்க அலுவலகம் என்றால் வரும் போது வரட்டும் என்று இருக்கவேண்டியது தான். யாரும் மதிக்க மாட்டார்கள். :-)

Anonymous said...

நண்பரே,

சூரியகாந்திப்பூ நிறுவனம் வெளிநாடு செல்வதற்கு முன்பே உங்கள் நண்பரிடம் ஒரு உறுதிப்பத்திரத்தில் ஒப்பம் வாங்கியிருக்குமே...
"வேலை மாறினால் 2 மாதம் நோட்டீஸ் அல்லது 10,000 டாலர் கட்ட வேண்டும்" என்று?

நாம இங்க வரும்போது இதயெல்லாம் யோசிக்காம கையெழுத்து போட்டிடறோம். இப்ப, ரெண்டு மாசம்லாம் எந்த எம்ப்ளாயர் காத்திட்டு இருப்பான்? ஒரு வாரத்துல சொல்லாம கம்பி நீட்ட வேண்டியதுதான்னு நெனைக்கிறோம்.

ரெண்டு மாசம் சரியா நோட்டீஸ் கொடுத்த என்னுடைய சகாவுக்கு, எந்த பாக்கியுமில்லாம உடனடி க்ளியரன்ஸ் நான் கொடுத்திருக்கேன்.

Nakkiran said...

அனானி நண்பருக்கு.
//ரெண்டு மாசம் சரியா நோட்டீஸ் கொடுத்த என்னுடைய சகாவுக்கு, எந்த பாக்கியுமில்லாம உடனடி க்ளியரன்ஸ் நான் கொடுத்திருக்கேன். //

நீங்கள் சொன்ன வாதத்தை ஒப்புக் கொள்கிறேன்.

என் நண்பரின் உண்மை நிலவரம் மோசமானது.

அவர் மூன்று வாரம் notice கொடுத்தார். ஒரு H1-B தொழிலாளியை அமெரிக்காவில் சம்பளம் இல்லாமல் வைக்க இயலாது என்பதால் pay stub generate செய்த பின் அந்த மூன்று வார சம்பளத்தை அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு, 3 நாட்கள் கழித்து அவரின் அனுமதியில்லாமலே திருப்பி எடுத்துள்ளனர்.

direct deposit செய்தால், 5 நாட்களுக்குள் திருப்பிக் கொள்ள வ்ழி இருப்பதாக வங்கி சொல்கிறது. இது சட்ட விரோதமில்லையா?...அமெரிக்க சட்டப்படி வேலையை விட்டு நிற்க ஒருநாள் notice கூட கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
அப்படி என் நண்பர் சென்றிருந்தால் அந்த 3 வாரத்திற்கு, அவருடைய புதிய நிறுவனத்திலாவது சம்பளம் கிடைத்திருக்கும். அவரோ ethics பார்த்தார். இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு ethics என்னவென்றே தெரியாது.

என் நண்பரை கோர்ட்டிற்கு போகச்சொன்னேன். எனக்குத் தெரிந்தவரையில், இந்த உறுதிப்பத்திரம் எல்லாம் இங்கே செல்லுபடியாகாது. ஆனால், அவரும் ஒரு நல்ல வழக்கறிஞசரை விசாரிக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்.

2 மாதம் நோட்டீஸ் கொடுத்த இன்னொரு தோழியை இந்தியா வந்தால் தான் clearance கொடுப்பேன் என்றார்கள். கொஞ்ச நாள் போக முடியாது என்று போராடினார் அவர். சரி டிக்கெட் எடுத்து கொடுங்கள் வருகிறேன் என்ற போது, சரி நீங்கள் வர வேண்டாம் (டிக்கெட் செலவு அவர்களுக்கு வீண் செலவு தானே).
இது போல எடுத்துக்காட்டுகள் ஏராளம் உண்டு.

இவர்களுடைய எண்ணம் எனக்கு நன்றாக புரிகிறது. நிறுவனத்தை விட்டுப்போனவன் எவ்வளவு ந்ல்லவன், வல்லவனாலும் சரி, எத்தனை வருடம் உண்மையாய் உழைத்திருந்தாலும் சரி, இனி நமக்கு உதவப்போவதில்லை. இப்படி போகிறவன் நிம்மதியாய் போகக்கூடாது. அவ்வள்வு தான். எவ்வளவு தொல்லைகள் தடங்கல்கள் கொடுக்கமுடியுமோ அவ்வளவையும் கொடுக்கிறார்கள்.

அய்யா, எது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். எனக்குத்தெரிந்த வரையில், ஒரு தொழிலாளியின் வைப்புநிதியில் யாராலும் கை வைக்க முடியாது.. கூடாது. அப்படிதான் சட்டம் உள்ளது. நீங்கள் கடனாளியாக இருந்தாலும், கோர்ட் கூட உங்கள் வைப்புநிதியிலிருந்து கடனை அடைக்க உத்தரவிட முடியாது. ஏன் அத்தொழிலாளியே நினைத்தால் கூட, சட்டப்படி சொல்லப்பட்டுள்ள காரணங்கள் இல்லையெனில் அதை பயன்படித்த முடியாது. இப்படி தொழிலாளியின் பிற்கால வாழ்க்கை ந்லனை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டுள்ள இந்த அமைப்பை இப்படி குறுக்கு வழியில் சட்டவிரோதமாக பயன்படுத்தலாமா என்பதே என் கேள்வி

Anonymous said...

உங்கள் நண்பர் கண்டிப்பாக அதிக சம்பளம் தரும் வேலைக்குத்தான் மாறியிருப்பார் என் நம்புகிறேன்.

என்ன, 2/3 மாச சம்பளம் போச்சுன்னு நெனச்சுக்க வேண்டியதுதான்.

உங்கள் நண்பரின் நிலை புரிகிறது.
ஆன்சைட் சம்பள விடயம் வருத்தமானதே.

எத்தர்களுக்கு எத்தர்கள் இவ்வுலகில் உண்டு என்று 'மட்டும்' கூறிக்கொள்கிறேன். :))

PF சமாச்சாரத்தைப் பொறுத்தவரையில், உங்கள் நண்பர் அரசாங்க PF அலுவலகத்தை அணுகுவதே சிறந்தது என் எண்ணுகிறேன்.

இந்த மாதிரி, "சாஃட்வேர் தொழில விட்டுட்டு நான் ஊருப்பக்கம் விவசாயம் பாக்கப் போறேன். என்னக்கு வேற PF அக்கவுன்ட் இல்ல. என்னோட பணத்த கொடுங்க" அப்படின்னு லெட்டர் கொடுத்தா PF அலுவலம் பணத்த கொடுத்திருவாங்கன்னு என் நண்பர் சொல்கிறார்.

Anonymous said...

நக்கீரன் அவர்கள் சொன்னது போல் இந்த அக்ரிமென்ட் எல்லாம் செல்லுபடியாகாது. நம் நாட்டிலேயே அதற்கு எதிரான சட்டம் இருக்கிறது. ஆனாலும் நம் சாப்ட்வேர் கம்பெனிகள் இன்னும் இதனைச் செய்து கொண்டு தான் இருக்கின்றன. எங்காவது இந்த அக்ரிமென்டை எடுத்துக் கொண்டு ஏதாவது ஒரு நிறுவனம் கோர்டுக்குச் சென்றிருக்கிறதா? சென்றால் தெரியும் இந்த அக்ரிமென்டின் வண்டவாளம்.

நான் வெளிநாடு செல்கிறேன். அதனால் எனக்கு என்னோட பணத்தை கொடுங்க என்று லெட்டர் கொடுத்தாலும் PF அலுவலகம் பணத்தைத் திருப்பிக் கொடுத்திருவாங்க. ஆனா நக்கீரன் சொல்ற மாதிரி அந்த நிறுவனமே ட்ரஸ்ட் என்று ஒன்றை வைத்துக் கொண்டிருந்தால் நிறுவனம் அலைக்கழிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

Anonymous said...

//உங்கள் நண்பர் கண்டிப்பாக அதிக சம்பளம் தரும் வேலைக்குத்தான் மாறியிருப்பார் என் நம்புகிறேன்.

என்ன, 2/3 மாச சம்பளம் போச்சுன்னு நெனச்சுக்க வேண்டியதுதான்.
//

இந்த வாதம் முறையில்லாதது. அதிக சம்பளம் தரும் வேலைக்குச் செல்வதால் பழைய கம்பெனியில் இருக்கும் நம் சொந்தப் பணத்தை விட்டுவிட்டு செல்ல வேண்டுமா? இது என்ன அநியாயம்? பழைய கம்பெனியினரே அந்த அதிக சம்பளம் தந்தால் ஏன் இவர் வேறு இடம் போகிறார்? நான் குறைவாகத் தான் தருவேன். நீ வேறு இடம் போனால் உன் பணத்தை நான் தரமாட்டேன் என்பது எந்த வகையைச் சேர்ந்தது?

Nakkiran said...

கருத்து சொன்ன அனைத்து அனானி நண்பர்களுக்கும் நன்றி

Santhosh said...

பல பேர் ethics அப்படி இப்படின்னு வாய்கிழிய பேசுறீங்க. உங்க நண்பர் இங்க வ்ரும்பொழுது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தானே வந்து இருப்பார்? அதாவது நான் அமெரிக்கவில் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளரிடம் பணிபுரிந்துவிட்டு/கற்றுக்கொண்டு திரும்பவும் இந்தியாவில் உள்ள உங்கள் நிறுவனத்தில் சில காலம் பணி புரிந்து நான் கற்றுக்கொண்டவற்றை சக தொழிலாளியிடம் பகிர்ந்து கொள்வேன் அப்படின்னு போட்டு இருக்கும் இல்ல. அதை படிச்சிட்டு தானே கையெழுத்து இட்டு இருப்பிங்க. அந்த பத்திரம் செல்லாது அது அடுத்த விஷயம் நமக்கு ethics இருக்கு இல்ல? அது எங்க போச்சி அடுத்த கம்பெனிக்கு தாவும் பொழுது? கம்பெனிகளுக்கு மட்டுமா ethics நம்க்கு இல்லையா?
நீங்க வந்து இருப்பது கம்பெனியின் H1 கோட்டாவில் அவங்க செலவு செய்து வாங்கித்தரும் விசாவில். அவங்க எடுத்து குடுக்கும் டிக்கெட்ல் அப்படி இங்கு இருக்கும் கம்பெனியில் சேர வேண்டுமானால் சொந்தமாக விசா எடுத்துக்கொண்டு வரவேண்டியது தானே?
நல்லா விசாரிச்சி பாருங்க பெரும்பாலான கம்பெனிகளில் நல்ல முறையில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு செல்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. மத்தபடி உழைக்கிறீங்க சும்மாவா சம்பளத்திற்கு தானே உழைக்கிறீங்க? நிறைய பேருக்கு ஒரு பழக்கம் ஒரு கம்பெனியில் இருந்து கொண்டு அதைப்பத்தி தாறுமாறா பேச வேண்டியது. பிடிக்கவில்லை எனில் போக வேண்டியது தானே யாராவது புடிச்சி வச்சி இருக்காங்களா என்ன?
அப்புறம் கம்பெனி இலாபம் அடைவதாக சொல்லி இருக்கிங்க அவங்க என்ன உங்க கண்ணை கட்டி கொள்ளை அடித்த மாதிரியும் இல்லை பைனாஸ் கம்பெனி மாதிரி ஓடி போனதுமாதிரி இல்ல சொல்லி இருக்கிங்க உங்களுக்கு நீங்க கேட்ட/ஒப்புக்கொண்ட சம்பளத்தை கொடுத்தாங்க இல்ல? அப்புறம் என்ன இலாபம் அடைவதற்கு தானே அவங்க கம்பெனி நடத்துறாங்க.
அப்புறம் வைப்பு நிதி பற்றி ஒரு சிறு தகவல் இப்படி தொழிலாளிக்கு போயி சேராத பணம் கம்பெனி உபயோகிக்க முடியாது அது அப்படியே நிதியில் இருக்கும் அல்லது சில காலம் கழித்து அரசாங்கத்திடம் போயிவிடும். அப்புறம் இது போன்ற நிதி அரசாங்கத்திடம் இருந்தாலும் அந்த கம்பெனியின் ஒப்புதல் இல்லாமல் தொழிலாளி எடுக்க முடியாது.

Nakkiran said...

சந்தோஷ்

உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. H1-Bக்கு செலவு செய்வது, டிக்கெட் எடுத்துக் கொடுப்பதெல்லாம் ஏதோ தொழிலாளியின் நலனுக்காக செய்வது போல் சொல்கிறீர்கள். இதெல்லாம் அவர்கள் பணம் சம்பாதிக்க செய்கிறார்கள். அவர்களுடைய விசா, டிச்கெட் என்று சொல்வது அபத்தம்.

இன்னும் விரிவாக பதிலளிக்க விரும்புகிறேன். இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு கொஞ்சம் வேலையுள்ளது. காலம் கிடைக்கும் போது பதிலளிக்கிறேன். அதற்குள் நம் வலைப் பதிவு நண்பர்களும் விரிவான பதிலளிப்பார்கள் என நம்புகிறேன்.

Anonymous said...

சந்தோஷ்.

வைப்பு நிதி தொழிலாளிக்குப் போய் சேராவிட்டால் அது நிறுவனத்திற்கும் போய் சேராது என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அந்த நிறுவனங்கள் அந்தப் பணத்தை தொழிலாளியிடமிருந்து வாங்கிக் கொள்வதற்காகப் பேரம் பேசுகின்றன; அப்படிப் பேரம் பேச உதவியாகத் தான் இந்த மாதிரி ஒப்பந்தத்தை எல்லாம் போடுகின்றன.

கையெழுத்து போடும் தொழிலாளி பின்னர் அந்த ஒப்பந்தத்தை மீறுவது எதிக்ஸாகுமா என்று கேட்கிறீர்கள். மிக நல்ல கேள்வி. ஆனால் ஒன்று நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனை பேர் அந்த ஒப்பந்தத்தைப் படிக்கிறார்கள்? எத்தனை பேருக்கு அப்படிப் படிக்க அவகாசம் தரப்படுகிறது? வியாழன் சொல்லி வெள்ளிக்கிழமை எல்லா ஒப்பந்தத்திலும் கையெழுத்து இட்டு சனிக்கிழமை விமானம் ஏறுபவர்கள் தானே பெரும்பாலும்? தகுந்த அவகாசம் கொடுக்காதது நிறுவனத்தின் குற்றமாகச் சொல்லவில்லை; அவர்களின் தொழில் அப்படிப்பட்டது. ஒருவர் வேண்டுமென்று புதன் கிழமை தெரிந்து வியாழன் உங்களிடம் கேட்டு திங்கள் நீங்கள் வெளிநாட்டு அலுவலகத்தில் இருக்கவேண்டும். அப்படிப் பட்ட நேரத்தில் கிடைத்த வாய்ப்பிற்காக படிக்காமல் கையெழுத்து போடுபவர்களே அதிகம். இந்த ஒப்பந்தம் உண்மையிலேயே செல்லுபடி ஆகும் என்றால் அந்த நிறுவனம் நேரடியாக நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டியது தானே? ஏன் முன்னாள் தொழிலாளியிடம் பேரம் பேசுகிறார்கள்?

முறையாக ராஜினாமா செய்தவர்களிடமும் பேரம் நடக்கிறது என்பது தான் உண்மை. பேரமும் நடக்கிறது; பேரமே இல்லாமல் கொடுக்க வேண்டியவற்றை எல்லாம் கொடுப்பதும் நடக்கிறது. இரண்டுமே நடக்கிறது.

குமரன் (Kumaran) said...

சந்தோஷ், நான் முறையாக ராஜினாமா செய்துவிட்டு வந்தவன் தான்; ஆனால் பணத்தை பெற கொஞ்சம் சத்தம் போட வேண்டியதும் புள்ளி விவரம் தர வேண்டியதும் தேவைப்பட்டது. அப்புறம் தான் கையெழுத்து போட்டார்கள். பின்னர் நம் நாட்டுல் வழக்கமாய் ஒரு செயல் ந்டக்க எடுத்துக் கொண்ட நேரம் எடுத்துக்கொண்டது எனக்கு வைப்பு நிதி வந்து சேர.

Anonymous said...

I hope people can benefit from this discussion
Have linked this in Desipundit

http://www.desipundit.com/2006/06/05/nakkiran/

Nakkiran said...

என் நண்பருக்கு 3 மாத போராட்டத்திற்கு பின் ஒரு வழியாக வைப்பு நிதி பணம் கிடைத்து விட்டது.

கடைசி மாத ஆன்சைட் சம்பளம் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை.. அவர் இன்னும் போராடிக் கொண்டு தான் இருக்கிறார். பார்ப்போம்