Wednesday, May 31, 2006

இலாபம் தரும் பதவி

சட்டப்படி தவறு என்றால் அச்சட்டத்தையே மாற்றுவோம் என்கின்ற அவலம் இப்பொழுதெல்லாம் மிகச் சாதாரணமாக நடக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இலாபம் தரும் பதவியில் இருப்போர் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் போட்டியிடக்கூடாது என்று மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இது தெரிந்தும் இப்படிப்பட்ட பதவியில் இருக்கும் பெருந்தலைவர்கள் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டதே தவறு. இப்படி சட்டத்திற்கு புறம்பாக போட்டியிட்டு வென்றதோடு மட்டுமில்லாமல் மத்திய அரசில் மிகப் பெரும் பதவிகளில் வேறு இருக்கிறார்கள்.

இப்படி சட்டத்திற்கு புறம்பாக போட்டியிட்டு வென்ற 40க்கும் மேலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி நிச்சயம் பறிக்கப் பட வேண்டியது தான். இவர்கள் நிச்சயம் சட்ட விரோதமாகத்தான் பெரும் பதவிகளில் இருக்கிறார்கள். ஆனால் இவ்விஷயம் வெளியில் தெரிந்த பின் மத்திய அரசு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இப்பொழுது அவசரமாகச் சட்டம் இயற்றுகிறது. இவர்களுக்கு தேவையான வகையில், பாதகம் நேராத வகையில் இலாபம் தரும் பதவிகளில் இருந்து சில பதவிகளுக்கு விலக்கு அளிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. அதாவது சட்ட விரோதமாக பதவியில் இருக்கும் அந்த 40க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளைக் காப்பற்ற மத்திய அரசு இச்சட்டத்தை இயற்றுகிறது.

நமது மதிப்புக்குரிய குடியரசுத்தலைவர் இச்சட்டத்தை நன்றாக புரிந்து கொண்டு, இச்சட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு, இச்சட்டத்தில் 'இலாபம் தரும் பதவி' யில் இருந்து நீக்கப்பட்ட சில பதவிகளை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால் கொடுமை என்னவென்றால் மத்திய சட்ட அமைச்சகம் இச்சட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யாமல் மறுபடியும் குடியரசுத்தலைவருக்கு அனுப்பவுள்ளது. ஏனெனில் குடியரசுத்தலைவரின் பரிந்துரைகளை செயல்படுத்தினால், சில தலைவர்களின் பதிவிகளை அவர்களால் காப்பாற்ற இயலாது. மத்திய அரசு இவ்வாறு இரண்டாம் முறை அனுப்பினால், குடியரசுத்தலைவருக்கு அதை மறுக்கும் அதிகாரமில்லை. எனவே அவர் இச்சட்டத்தை அங்கீகரிப்பதைத் தவிர வேறுவழியில்லை.

இந்த அரசியல்வாதிகளால் 33% மகளிர் சட்டத்தை இயற்ற இயலாது, தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த எத்தனையோ நல்ல சீர்த்திருத்தங்களை சட்டமியற்றயிலாது. ஆனால் இவர்களுக்கு பாதகமென்றால் உடனே சட்டத்திருத்தம் கொண்டு வந்துவிடுவார்கள். ஆளும் அரசு என்ன நினைத்தாலும் சட்டமியற்றி சாதித்துக் கொள்ள முடியும் என்கிற வகையில் தான் நம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளதா? ஆம் என்றால் எங்கோ தவறு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

Tuesday, May 30, 2006

மெகா தொடர்களின் மகா அநியாயங்கள்

தமிழோவியத்தில் திருமலை கோளுந்து அவர்கள் எழுதிய மெகா சீரியல்கள் - சீர்குலைவா ? சீரமைப்பா ? கட்டுரைப் படித்தேன். அதைப் படித்தபின் மெகா தொடர்களின் அநியாயங்கள் பற்றி ஒரு நாமும் ஒரு பதிவு போடுவோம் என்று எண்ணி இப்பதிவை எழுதினேன்.

தொலைக்காட்சி என்பது ஒரு பொழுதுபோக்குச் சாதனம். அதில் வழங்கப்படும் நிகழ்ச்சிகள் மக்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கி ஒரு சந்தோஷமான மனநிலையை அளிக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்கள் சமுதாயத்தில், குறிப்பாக பெண்களிடம் ஒருவித மனவியாதியைத் தான் உருவாக்கி வருகின்றன. எல்லா தொடர்களும் முடிந்தபின் தொலைக்காட்சிப்பெட்டியை அணைத்தப் பின் யாராவது சிரித்தபடி சந்தோஷமாக அடுத்த வேலையைப் பார்க்க போகிறார்களா? நிச்சயம் ஒரு ட்விஸ்டுடன் தான் தொடரும் போட்டிருப்பார்கள். நாளை அதைப் பற்றி தெரியும் வரை ஒருவித பரபரப்புடன் தான் அலைகிறது மக்கள் கூட்டம்.

இந்த இரண்டு மனைவி விஷயம் எனக்குத் தெரிந்து எல்லா தொடரிலும் சர்வசாதரணமாக உண்டு. அட இந்த கோலங்கள் அல்லது செல்வி தொடர்களில், ஒரு குடும்பமாவது ஒழுங்காய் இருக்கிறதா? ஒரு தம்பதியினராவது சந்தோஷமாய் இருக்கிறார்களா? எல்லாவற்றிலும் கள்ளத்தனம். இரண்டு மனைவி, விவாகரத்து, கள்ளக்காதல், மோசடி, கொலை etc... மத்த விஷயங்களில் முன்னேறுகிறார்களோ இல்லையோ, கதைகளில் காண்பிக்கப்படும் க்ரைம்களில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. பெண் தியாகம் செய்கிறாள் என்று சொல்லிக் கொண்டு இவர்கள் அடிக்கும் கூத்திற்கு அளவேயில்லை. இதையெல்லாம் பார்த்தால் எப்படி ஒரு பாஸிடிவ் தாட்ஸ் வரும்.

ஒரு தொடரில் கதைப்படி(??) ஒரு கதாபாத்திரம் இறந்து விடுகிறார். தத்ரூபமாய் எடுக்கிறேன் என்று சொல்லி மூன்று நான்கு நாட்களுக்கு இறந்தவருக்கு செய்யும் எல்லா சடங்குகளையும் காட்டுகிறார்கள். அந்த வாரம் முழுவதும் ஒரே அழுகை. ஏற்கனவே அலுவலகத்தில் நொந்து போய் வீட்டிற்கு போனால் அங்கேயும் ஒரே அழுகை. அதற்கு சில நாட்களுக்கு பிறகு மற்றுமொரு தொடரில் கணவனை இழந்த பெண் ஒருவருக்கு செய்யும் சடங்குகள். அட ராமா... எங்கள் வீட்டிலேயே ஏதோ துயரம் நடந்தது போல் இருந்தது என் மனைவியின் மனநிலை.

இவர்கள் சொல்லும் கதைப்படி ஹீரோயின் குறைந்தபட்சம் ஒரு மூன்று ஆண்டு காலாமாவது துயரப்படுவார். ஊரில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் அவருக்குத்தான் வரும். பாதி துயரங்கள் வில்லனால் வந்தால் மீதி துயரங்கள் தியாகம் என்ற பெயரில் ஹீரோயின் அடிக்கும் கூத்துகளால் வரும். அந்த மூன்று ஆண்டு காலமும் வில்லன் நன்றாக இருப்பார். கடைசியில் அந்த டிவி நிறுவனம் தொடரை முடிக்கச் சொன்னால், கடைசி ஒரு வாரம் ஹீரோயின் வில்லனை வென்று சாதனை புரிந்து தொடரை முடித்துவிடுவார்கள். நல்லவர் முதலில் இருந்தே ஜெயிப்பதாக காட்டும் ஒரு தொடர் கூட இதுவரை வந்ததாக எனக்கு நினைவில்லை. இதையெல்லாம் பார்த்தால் ஹீரோயினாய் இருந்து மூன்று வருடம் துயரப்படுவதை விட, வில்லனாய் ஒரே ஒரு வாரம் அடி வாங்கிக் கொள்ளத்தான் தோன்றும்.

என் மனைவியின் இந்த மெகாதொடர் பார்க்கும் வழக்கத்தை நிறுத்த ஏதேதோ செய்து பார்த்துவிட்டேன். ஒன்றும் பயனளிக்கவில்லை. ஒருமுறை என்னவள், இதற்கு மேல் ஏதாவது சொன்னாலோ அல்லது செய்தாலோ நீங்க உங்க பொறந்த வீட்டுக்கு போக வேண்டிவரும் என்றார். இந்த மெகாதொடர்களின் இம்சையில் இருப்பதை விட நான் என் பிறந்த வீட்டுக்கே போகிறேன் என்றேன் நான். உங்க ஊர்ல கரண்ட் போயிடுச்சாம் இப்போதான் உங்க அம்மா போன் செய்து, கோலங்களும், செல்வியும் என்ன ஆச்சுன்னு கதை கேட்டாங்கோ என்றார் நக்கலுடன்.

Tuesday, May 23, 2006

ஒரு தமிழ் சினிமா ரசிகனின் ஆதங்கம்...

நான் இந்த அமெரிக்கதேசம் வந்து இரண்டு ஆண்டுகள் ஆயிற்று. வந்த புதுதில் என் நண்பர் ஒருவர், பெரும்பான்மையான இந்தியப்படங்கள் எல்லாம் ஆங்கில படங்களின் பிரதியாக இருக்கும் இல்லையென்றால் ஆங்கில படங்களின் சாயலாவது இருக்கும் எனக் குற்றச்சாட்டை வைத்தார். அதிலும் குறிப்பாக நிறைய தமிழ்ப்படங்கள் ஆங்கிலப்படங்களின் பிரதி என்பது அவர் வாதம். நான் கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் ஆங்கில படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். அதுவும் எண்ணிக்கையில் மிகமிகக்குறைவு. அதனால் அன்று அவருடைய குற்றச்சாட்டு எனக்கு மிகுந்த அபத்தமாய் பட்டது.

இந்த இரண்டு வருடத்தில் கேபிள் டிவி, நூலகம், நெட்ஃப்ளிக்ஸ் உதவியால் குறைந்தது 250 ஆங்கிலப்படங்களாவது பார்த்து இருப்பேன். அவ்வப்போது திரையரங்கம் கூட செல்வதுண்டு. இப்போது என் நண்பரின் கூற்றில் ஓரளவு உண்மை இருப்பதாகவே கருதுகிறேன்.

அப்படியே முழுப்படத்தை(Man on Fire - ஆணை) பிரதி எடுப்பது ஒரு வகையென்றால், சில காட்சிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்வது இன்னொரு வகை. சமீபத்தில் பார்த்த கஜினி படத்தில், ஆங்கிலப்படத்திலிருந்த (Memento) கதாநாயகன் பாத்திரத்தை மட்டும் சுட்டு விட்டார்கள். இவர்களின் சுடும் திறனுக்கு முத்தாய்ப்பாய் 80 நிமிடம் ஒடுகிற ஒரு ஆங்கில படத்தின்(phone booth) முழுக்கதையை 20 நிமிட உச்சகட்ட காட்சியாக சமீபத்தில் வந்த சரத்குமார் படத்தில் பார்த்தேன். ஒரே ஆங்கில படத்தை இரண்டு மூன்று இயக்குநர்கள் ஓரே நேரத்தில் தமிழில் எடுத்த கூத்தெல்லாம் கூட உண்டு. இதில் என்னை மிகவும் பாதித்தது, நல்ல கலைஞன் என்று நாம் கருதும் கமலஹாசனின் சில படங்கள் (தெனாலி, அவ்வைசண்முகி) கூட ஆங்கிலப்படங்களின் பிரதியாக இருந்ததுதான்.

இதனால் எல்லா தமிழ்ப்படங்களின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகிறது. இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு நல்ல தமிழ் படம் பார்த்தாலும், இதே போல் ஏதாவது ஆங்கிலப்படம் வந்திருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது. இவர்கள் வெறும் ஆங்கிலப்படங்களை மட்டும் பிரதி எடுக்கிறார்களா இல்லை நமக்கு தெரியாத வேற்று மொழிப்படங்களையும் சுடுகிறார்களா என்ற சந்தேகமும் எழாமலில்லை.

இதுவும் ஒருவகையில் திருட்டுதான். திருட்டு விசிடிக்கு ஒருபுறம் போராடிக்கொண்டே இன்னொருபுறம் டிவிடியில் ஆங்கிலப்படங்களைப் பார்த்து காட்சி/கதை திருடுவது எந்த விதத்தில் நியாயம்? அடுத்தவனின் உழைப்பில் விளைந்ததை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனத் தன் பெயரைப் போட்டுக்கொள்வது அசல் ஏமாற்றுவேலை தானே? BIG எனும் ஆங்கிலப்படத்தை சுட்டு 'நியூ' எனும் படத்தை எடுத்தார் நம் எஸ்.ஜே. சூர்யா. ஆனால் அந்த திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே 'இது என் கற்பனையில் உருவான கதை' என்று கூசாமல் பொய் சொல்லியிருப்பார். கிரணின் குத்துப் பாட்டு வேண்டுமென்றால் அவரது கற்பனையில் உருவாகியிருக்கக்கூடும்

இதற்கான அவசியம் என்ன? நமக்கு திறமையில்லையா? நம்மில் திறமையானவர் இல்லையா? இல்லை வெள்ளைக்காரன் எங்கே தமிழ் படத்தைப் பார்க்கப்போகிறான் என்ற தைரியமா? வேண்டாமய்யா இந்த வேலை. உங்களை நம்புங்கள், உங்கள் திறமையை நம்புங்கள். உங்களால் நிச்சயம் உலகத்தரத்திற்கு திரைப்படங்களை எடுக்க முடியும். சொந்த உழைப்பில் நல்ல தரமான திரைப்படங்களை எடுத்து தமிழனின் திறமையை உலகத்துக்கு உணர்த்துங்களய்யா.

Monday, May 22, 2006

தமிழ் மணத்தில் ஒரு புதிய பறவை

தமிழ் இணைய பதிவாளர்களுக்கு வணக்கம்.
நான்கு மாதங்களுக்கு முன்வரை அலுவலக வேலை சுளுக்கு எடுக்கும். குறைந்தது ஒரு நாளைக்கு 12-13 மணி நேரம் அலுவலகத்திலேயே கழியும். அப்போதெல்லாம், மின்னஞ்சல் பார்த்துக் கொள்ளவும், வங்கிக் கணக்கு பார்க்கவும் மட்டுமே இணையத்திற்கு வருவதென்றிருந்தது.

திடீரென எனக்கே தெரியாத ஏதோ ஒரு காரணத்தினால் என்னை வேறு ஒரு ப்ராஜெக்டிற்கு மாற்றி விட்டார்கள். அங்கோ ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வேலை இருந்தால் அதிகம். சஹாரா பாலைவனத்தில் பிறந்து வளர்ந்தவனை சியாச்சின் மலைச் சிகரத்திற்கு அனுப்பியது போலிருந்தது. வெறுமனே காலம் கடத்துவது எவ்வளவு கடினமானது என்பது அப்போது புரிந்தது. நல்ல வேளை அனாதை ரட்சகனாய் வந்து என்னை காப்பாற்றியது இணையம். இப்போதெல்லாம் பாதி நாள் கழிவது இணையத்தில் தான்.

அப்படி ஒரு நாள் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது தடுக்கி விழுந்த இடம் தான் தமிழ்மணம். அதன் பிறகு மொத்தமாக 3 மாதங்கள் தமிழ்மணத்தை விட்டு வெளியேறவேயில்லை. தமிழ்மண அனுபவத்தோடு, என் தமிழார்வமும் சிறிது என்னை உசுப்பிவிட்டதால், ஒரிரண்டு கட்டுரைகளை எழுதி திண்ணைக்கு அனுப்பினேன். திண்ணையில் மட்டும் தானே திட்டி பின்னூட்டம் இட இயலாது, அந்த தைரியத்தில் தான்.

பின்னர் ஒரு நாள் என் நண்பர் ஒருவருடன் தமிழன் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது, அது குறித்து ஒரு பதிவை எழுதி முத்து(தமிழினி) அவர்களை திராவிட தமிழர்கள் வலைப்பூவில் பதிக்க வேண்டினேன். அப்பொழுதுதான், எனக்கு சொந்தமாக ஒரு வலைப்பூ ஆரம்பிக்கும் விபரீத ஆசை வந்தது. இதோ ஆரம்பித்துவிட்டேன்.

நெற்றிக்கண்-நக்கீரன் :- சொந்தப் பெயரில் வலைப்பூ ஆரம்பிக்க பயந்தது(யார் அடி வாங்குறது) தவிர வேறு பெயர்க்காரணம் ஏதுமில்லை.

உங்கள் அனைவரின் நல்லாசியுடன்
- நக்கீரன்

நான் தமிழனில்லையா????

தமிழகத்தைத் தமிழன் தான் ஆள வேண்டும் - வேறு எந்த அண்டை மாநிலத்திலும் தமிழன் ஒரு நகராட்சித் தலைவராகக் கூட முடியாது. அப்படியிருக்கத் தமிழகத்தை மட்டும் அடுத்தவர் ஆள அனுமதிக்கலாமா?.இது ஒரு சிலரின் வாதம். நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய வாதம். இதைப் பற்றி வாதிடும் போது என் நண்பர் ஒருவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் இவர்கள் தமிழர்கள் அல்லர் என்றும், அவர்களுக்குத் தமிழகத்தை ஆள உரிமையில்லை என்றும் வாதிட்டார். 'தமிழன்' என்பவன் யார்? தமிழனை வரையறுக்கவும் என்றேன் நான். அவர் வரையறுப்படி தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன் மட்டுமே தமிழன். இதை என் நண்பரின் கூற்றாக மட்டும் கருத ஏனோ எனக்குத் தோன்றவில்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பெரும்பாலான மக்கள் இப்படித்தான் நினைக்கிறார்களோ என்று என் மனம் சிறிது துணுக்குற்றது. ஏனென்றால் எனக்கும் தமிழ் தாய்மொழியல்ல.

ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்ததால், தெலுங்கு தாய்மொழியாகப் போனதினால் நான் தமிழனில்லை!
நானும், என் மூதாதையாரும், இதே தமிழகத்தில் பிறந்து வளர்ந்த போதிலும் நான் தமிழனில்லை!
எனக்கு தெலுங்கு, பேச மட்டுமே தெரியும், ஆனால் தமிழில் ஒரு சராசரி தமிழனை விட கொஞ்சம் அதிக புலமையுண்டு, ஆனாலும் நான் தமிழனில்லை!
என் தந்தை தமிழாசிரியராய் நாற்பது வருடங்கள் அரசு பள்ளியில் தமிழ் பயிற்றுவித்தப் போதிலும் நான் தமிழனில்லை!
நானும், என் தந்தையும் எங்கள் பெயரிலுள்ள வடமொழி எழுத்துக்களைத் தமிழ்ப்படுத்தி எழுதினாலும் நான் தமிழனில்லை!
எங்கள் வீட்டு நூலகத்தில் உள்ள பெரும்பாலான நூல்கள் சங்கத்தமிழிலக்கியமாக இருந்தாலும் நான் தமிழனில்லை!
எங்கள் வீட்டு குழந்தைகளுக்குத் தூய தமிழ்ப்பெயர்கள் வைத்திருந்தாலும் நான் தமிழனில்லை!
தமிழ் மீது மிகுந்த பற்றும், தமிழன் என்று சொல்வதில் பெருமிதம் கொண்டாலும் நான் தமிழனில்லை!

இக்கருத்தை என்னால் ஒப்புக் கொள்ள இயலாது. 1953 மற்றும் 1957ல் மொழிவாரியான மாநிலங்கள் உருவாயின. அதற்கு முன்வரை ஒட்டு மொத்த தென்னிந்தியாவிற்கும், சென்னை ஒன்றே மிகப்பெரிய நகரம். இந்தியா-பாக் பிரிவினையின் போது, இந்தியாவிலிருக்க முடிவு செய்த முசுலீம் சகோதரர்களை இந்தியரல்லர் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமானதோ, அது போன்றது மாநிலங்கள் உருவான போது அவரவர் தாய்மொழிக்குரிய மாநிலத்திற்கு இடம் பெயராமல் தமிழகத்திலேயே தங்கியவரை தமிழரல்ல எனச்சொல்வது. உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள தமிழக முசுலீம் மக்கள் தமிழரில்லையா? அவர்களுக்குத் தமிழகத்தை ஆள உரிமையில்லையா? திராவிடர் கழகத்தை ஆரம்பித்துத் தமிழர்களின் சுயமரியாதையை நிலைநாட்டப் போராடிய ஈ.வெ.ரா. பெரியாரின் தாய்மொழி தமிழில்லையே? தமிழ் எழுத்துக்களில் மாற்றத்தைக் கொண்டு வந்த அவரையும் தமிழரல்ல என்று சொல்லப் போகிறார்களா?

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு 'தமில், டமில், தங்ளிஷ்' பேசுபவர்கள் தான் தமிழரல்லாதோர். தமிழ் தாய்மொழியாக இருந்தாலும், தம் குழந்தைகளைப் பள்ளிகளில் தமிழ் படிக்க ஊக்குவிக்காதப் பெற்றோரே தமிழரல்லாதோர். தமிழ் தெரிந்தும் தமிழில் பேசுவதை மரியாதைக் குறைவு என எண்ணுவோரும், தமிழில் பெயர் வைப்பதைப் பிற்போக்குத்தனம் என கருதுவோருமே தமிழரல்லாதோர். தமிழருக்கும், தமிழகத்திற்கும் பாதகம் நேரும் போது அதை எதிர்த்து நிற்காமல் ஓடி ஒளிபவரே தமிழரல்லாதோர். தமிழ் மொழியின் மீது பற்றற்றவரும், தமிழகத்தின் முன்னேற்றத்தில் முனைப்பற்றவரும், தமிழர் வாழ்வின் ஏற்றத்தில் ஆர்வமில்லாதவருமே தமிழரல்லாதோர்.

என் வரையறைப்படி தமிழையும், தமிழகத்தையும் நேசிக்கும் அனைவரும் தமிழரே! அந்த வகையில், பல அரசியல் மாற்றுக்கருத்துக்கள் இருப்பினும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் இவர்கள் அனைவரும் தமிழரே. என்ன சொன்னாலும் இவர்கள் தமிழக வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார்கள் என்பதை மறுக்க இயலாது. எம்.ஜி.ஆர் மீது தமிழர்கள் வைத்திருந்த அன்பிற்கு ஈடு இணையில்லை. 13 ஆண்டுகள் தொடர்ந்து தமிழகத்தை ஆண்டது நிச்சயம் ஒரு சாதனை. விஜயகாந்த் உதவி செய்த அளவிற்குக் கூடத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மற்ற நடிகர்கள் தமிழக மக்களுக்கு உதவியிருப்பார்களா என்பது ஐயமே. வைகோ இன்றும் ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார். இருமுறை சட்டமன்ற தேர்தலில் வென்று பத்து ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு உள்ளார் ஜெயலலிதா. பல அரசியல் மாற்றுக்கருத்துக்கள் இருப்பினும், இவர்களையெல்லாம் தமிழரல்ல எனக்கூறுவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்.

யார் என்ன சொன்னாலும், நான் தமிழன் என்பதில் எனக்குத் துளியளவும் ஐயமில்லை, ஒரு சராசரி தமிழனுக்குத் தமிழ் மொழி மற்றும் தமிழகத்தின் மீதும் எந்த அளவுக்கு உரிமையுள்ளதோ அதே அளவு உரிமை எனக்கும் உண்டு. இதை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு யாருடைய ஒப்புதலும் எனக்குத் தேவையில்லை. இந்த என் கருத்துக்குத் தமிழ் இணைய வாசகர்கள் நிச்சயம் ஆதரவளிப்பார்கள் என நம்புகிறேன். தமிழன் என்று சொல்கிறேன், தலை நிமிர்ந்து நிற்கிறேன்.

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?
Thursday May 11, 2006

இப்பதிவு வெளியாகும் வேளையில் தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டுகளின் தலையெழுத்தைத் தமிழக மக்கள் நிர்ணயத்திருப்பார்கள். தி.மு.க அணியோ அ.இ.அ.தி.மு.க அணியோ, கருணாநிதியோ ஜெயலலிதாவோ, அல்லது கூட்டணி ஆட்சியோ இன்னும் 5 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி இருக்கப் போகிறது.

இரண்டு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு சரமாரியாக இலவச சலுகைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் அள்ளித் தெளித்துள்ளன. மக்களும் இவர்களின் இலவச சலுகைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் நம்பி மிகுந்த எதிர்பார்ப்புடன் இவர்களுக்கு ஒட்டளித்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

தி.மு.க வின் தேர்தல் அறிக்கையைக் காண கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்
http://www.iamformylapore.com/content/emtamil.pdf
அ.இ.அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கையைக் காண கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்
http://www.aiadmkindia.org/manifesto%202006/Election%20Manifesto-%20English%20Tamil%20Nadu.pdf

இதைத் தவிர இந்த இரு கட்சிகளுமே அவர்களின் தேர்தல் அறிக்கையில் இல்லாத பல சலுகைகளைப் போகிறபோக்கில் இறைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். பற்றாக்குறைக்கு இவர்களின் கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் வாக்குறுதிகள் வேறு.

எங்கும் இலவசம் எதிலும் மானியம். தொலைக்காட்சிப்பெட்டி, தங்கத்தாலி, கணினி, எரிவாயு அடுப்பு, மிதிவண்டி என்று இன்னும் பல பொருட்கள் இலவச வரிசையிலுண்டு. திருமணத்திற்கு 15000, கர்ப்பிணிகளுக்கு மாதம் 1000, வேலையில்லாதோற்கு மாதம் 300 என்று பல நிதியுதவிகள். தமிழனை சோம்பேறியாக்கப் போட்டி போடுகின்றன கழகங்கள். எனக்குத் தெரிந்த வகையில் இத்தகைய இலவசத் திட்டங்களால் எந்த நாடோ சமுதாயமோ முன்னேறியதாக நினைவில்லை. மாறாக அது அச்சமுதாயத்தை அழிவுப்பாதைக்கே கொண்டுச் செல்லும். இதையெல்லாம் காணும் பொழுது 'வேட்டி சேலை கேக்காதீங்க, வேலை வெட்டி கேளுங்க வேட்டி சேலை நாமலே வாங்கிக்கலாம்' எனும் தமிழ்த்திரைப்பட வசனம் நினைவுக்கு வருகிறது.

இலவசம் குறித்த வாதங்கள் ஒரு புறம் இருக்க, இந்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்படும் என்பதுதான் இப்போதுள்ள மிகப் பெரிய கேள்வி. இப்பொழுதே பிரதமர் நிழலில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென தி.மு.க தலைவர் பிரதமரை துணைக்கழைக்கிறார். எவெரேனும் குறித்துக் கொண்டு, அ.தி.மு.க தலைவருக்குத் தேர்தலுக்குப்பின் நினைவுறுத்தினாலன்றி அவர் அளித்த வாக்குறுதிகள் அவருக்கு நினைவிருப்பது ஐயமே. தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் தேர்தல் அறிக்கைகள் கட்சிகளின் ஜனநாயக உரிமை அதில் தலையிட முடியாது என மறுத்து விட்டன. அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் எந்த வாக்குறுதியை வேண்டுமென்றாலும் அளிக்கலாம். அது நிறைவேற்றப்பட முடியாததாகினும் கவலையில்லை. வாக்குறுதிகளின் நம்பகத்தன்மைக் குறித்தும் கவலையில்லை. வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தபின் நிறைவேற்றவில்லையென்றாலும், யாரும் ஒன்றும் செய்ய இயலாது. இந்த விஷயத்தில் அரசியல் சட்டங்கள் மிகத்தெளிவாக அரசியல் கட்சிகளுக்குச் சாதகமாகத் தீட்டப்பட்டுள்ளன. அப்படியென்றால் யார் தான் இதை கண்காணிப்பது?

ஓட்டு போட்டவுடன் நம் வேலை முடியவில்லை மக்களே! வல்லாரை மூலிகை சாப்பிட்டாவது இவர்கள் அளித்த வாக்குறுதிகளை நினைவில் வைக்க வேண்டும். வெற்றிப் பெற்று வரும் அரசு, அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். குறைந்த பட்சம் வாக்குறுதிகளை நிறைவேற்ற நேர்மையான முயற்சிகளையாவது எடுக்க வேண்டும். அப்படி கொடுத்த வாக்குறுதிகளை மறுப்பவருக்கும், மறப்பவருக்கும் அல்லது நிறைவேற்றாமலிருக்க ஏதாவது சாக்கு சொல்வோருக்கும் தண்டனை கொடுக்க நாம் 5 ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் மூன்றாண்டுகளில் வரும். வேறு எதற்கும் பயப்படாத அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் பயப்படும் ஓரே ஆயுதம் ஓட்டு. அதிர்ஷ்டவசமாக ஜனநாயகம் அந்த ஆயுதத்தை மக்களிடம் அளித்துள்ளது. அதற்கு பயந்துதான் கோடீஸ்வரனும் குடிசைக்குள் நுழைந்து ஓட்டு கேட்கிறான். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபடும் கட்சிக்கே அடுத்த ஓட்டு என்பதை உணர்த்துவோம். இதனால் இரு பயன்கள். ஒன்று அரசியல் கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபடும். இரண்டு அடுத்த தேர்தலில் நியாமான வாக்குறுதிகளை அளிக்கும்.

தமிழா! உன் மறதியை மூலதனமாகக் கொண்டு இங்கு அரசியல் வியாபாரம் நடக்கிறது. நீ உறங்கும் வரை உன்னை உறிஞ்சி உயர்வடையும் இந்த அரசியல் கூட்டம்.

விழித்துக் கொள்.

தொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்


Thursday April 20, 2006


ஒருவழியாக பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்களின் 7 நாள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. வங்கி ஊழியர்கள் அவர்களின் ஓய்வூதியத்திற்காக போராடி வெற்றியும் பெற்றுள்ளனர். மிக்க மகிழ்ச்சி. ஆனால் இந்த ஏழு நாட்களும் மக்கள் பட்ட இன்னல்கள் எத்தனை. தோராயமாக 1,00,000 கோடி மதிப்புள்ள ட்ரான்ஸாக்ஷன்கள் நின்று போனதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பெருநகரங்கள் முதல் சிறு கிராமம் வரை இந்த வங்கி கிளைகள் இயங்குவதால், இந்த வேலை நிறுத்தம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழை பொதுமக்கள் முதல் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள வழியின்றி ஓய்வு பெற்றவர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள், மாத வருமானம் பெறுபவர்கள், மத்திய மாநில அரசு நிர்வாகங்கள் மற்றும் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் ஒவ்வொரு முறையும் தங்கள் உரிமையை நிலை நாட்ட வேலை நிறுத்தம் செய்யும் போதும் பாதிக்கப்படுவது பொதுமக்களே. இதற்கு தொழிற்சங்கங்கள் மட்டுமன்றி மத்திய மாநில அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும். ஒரு தொழிற்சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிடும் போது அதை தவிர்க்க தேவையானவற்றை அரசு மேற்கொள்ள வேண்டும். அப்படி தவிர்க்க முடியாமல் போனால், அதற்கான மாற்று வழிகளை உத்தேசித்து பொது மக்களுக்கு இன்னல் நேராமல் காக்க வேண்டும். நியாயமான கோரிக்கைகளை உடனடியாக ஏற்கவும், இல்லாத பட்சத்தில் வேலை நிறுத்தத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கவும் அரசு தயங்க கூடாது. பொது மக்களை இன்னலிருந்து காப்பாற்றுவதே ஒரு அரசின் தலையாய கடமையாகும். ஆனால் இப்போதெல்லாம் வேலை நிறுத்தம் ஆரம்பித்து ஓரிரு வாரம் அவதியுற்று பின்னர் பிரச்சனை தீர்க்கப்படுவது வழக்கமாகியுள்ளது.

தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தப் போரட்டத்தை, அரசாங்கத்தை மிரட்டும் கருவியாக பயன்படுத்தக் கூடாது. பேருந்து வேலை நிறுத்தத்தின் எப்படி ஒரு வங்கி ஊழியன் பாதிக்கப்படுகிறானோ, அப்படியே வங்கி வேலை நிறுத்ததின் போது பேருந்து ஊழியன் பாதிக்கப்படுகிறான் என்பதை உணர வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு, தமிழகத்தில் பேருந்து பணியாளர்கள் போனஸ் தொகையை உயர்த்த வேண்டி, சரியாக தீபாவளிக்கு ஒரு சில தினம் முன்பு வேலை நிறுத்தப்போரட்டத்தை ஆரம்பித்தார்கள். அரசாங்கத்தை மிரட்டி பணியவைக்கவே இப்படி தீபாவளிக்கு முன் இப்போரட்டத்தை ஆரம்பித்தார்கள். இப்படி அரசை மிரட்டும் எண்ணத்துடன் அறிவிக்கப்படும் போராட்டங்கள் பொது மக்களின் ஆதரவை இழக்கிறது. தொழிற்சங்கங்கள் தாமும் சமுதாயத்தின் ஒரு அங்கம் என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். ஒவ்வொரு முறையும் வேலை நிறுத்தப்போராட்டம் அறிவிக்கும் போதும், தம் சகோதர, சகோதரிகளை எவ்வளவு கொடுமைகளுக்கு உள்ளாக்கப் போகிறோம் என்பதை உணர வேண்டும்.

வேலை நிறுத்தப் போரட்டங்களுக்கும், அதனால் ஏற்படும் இன்னல்கள் மற்றும் இழப்புகளுக்கு அரசாங்கமும், தொழிற்சங்கங்களும் மட்டுமே காரணமாக இருக்க, எந்த விதத்திலும் சம்பந்த படாத பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவது துரதிஷ்டவசமானது. அரசாங்கமும், தொழிற்சங்கங்களும் நினைத்தால் நிச்சயம் வேலைநிறுத்தம் இல்லா இந்தியாவை உருவாக்க முடியும்.