Monday, May 22, 2006

நான் தமிழனில்லையா????

தமிழகத்தைத் தமிழன் தான் ஆள வேண்டும் - வேறு எந்த அண்டை மாநிலத்திலும் தமிழன் ஒரு நகராட்சித் தலைவராகக் கூட முடியாது. அப்படியிருக்கத் தமிழகத்தை மட்டும் அடுத்தவர் ஆள அனுமதிக்கலாமா?.இது ஒரு சிலரின் வாதம். நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய வாதம். இதைப் பற்றி வாதிடும் போது என் நண்பர் ஒருவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் இவர்கள் தமிழர்கள் அல்லர் என்றும், அவர்களுக்குத் தமிழகத்தை ஆள உரிமையில்லை என்றும் வாதிட்டார். 'தமிழன்' என்பவன் யார்? தமிழனை வரையறுக்கவும் என்றேன் நான். அவர் வரையறுப்படி தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன் மட்டுமே தமிழன். இதை என் நண்பரின் கூற்றாக மட்டும் கருத ஏனோ எனக்குத் தோன்றவில்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பெரும்பாலான மக்கள் இப்படித்தான் நினைக்கிறார்களோ என்று என் மனம் சிறிது துணுக்குற்றது. ஏனென்றால் எனக்கும் தமிழ் தாய்மொழியல்ல.

ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்ததால், தெலுங்கு தாய்மொழியாகப் போனதினால் நான் தமிழனில்லை!
நானும், என் மூதாதையாரும், இதே தமிழகத்தில் பிறந்து வளர்ந்த போதிலும் நான் தமிழனில்லை!
எனக்கு தெலுங்கு, பேச மட்டுமே தெரியும், ஆனால் தமிழில் ஒரு சராசரி தமிழனை விட கொஞ்சம் அதிக புலமையுண்டு, ஆனாலும் நான் தமிழனில்லை!
என் தந்தை தமிழாசிரியராய் நாற்பது வருடங்கள் அரசு பள்ளியில் தமிழ் பயிற்றுவித்தப் போதிலும் நான் தமிழனில்லை!
நானும், என் தந்தையும் எங்கள் பெயரிலுள்ள வடமொழி எழுத்துக்களைத் தமிழ்ப்படுத்தி எழுதினாலும் நான் தமிழனில்லை!
எங்கள் வீட்டு நூலகத்தில் உள்ள பெரும்பாலான நூல்கள் சங்கத்தமிழிலக்கியமாக இருந்தாலும் நான் தமிழனில்லை!
எங்கள் வீட்டு குழந்தைகளுக்குத் தூய தமிழ்ப்பெயர்கள் வைத்திருந்தாலும் நான் தமிழனில்லை!
தமிழ் மீது மிகுந்த பற்றும், தமிழன் என்று சொல்வதில் பெருமிதம் கொண்டாலும் நான் தமிழனில்லை!

இக்கருத்தை என்னால் ஒப்புக் கொள்ள இயலாது. 1953 மற்றும் 1957ல் மொழிவாரியான மாநிலங்கள் உருவாயின. அதற்கு முன்வரை ஒட்டு மொத்த தென்னிந்தியாவிற்கும், சென்னை ஒன்றே மிகப்பெரிய நகரம். இந்தியா-பாக் பிரிவினையின் போது, இந்தியாவிலிருக்க முடிவு செய்த முசுலீம் சகோதரர்களை இந்தியரல்லர் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமானதோ, அது போன்றது மாநிலங்கள் உருவான போது அவரவர் தாய்மொழிக்குரிய மாநிலத்திற்கு இடம் பெயராமல் தமிழகத்திலேயே தங்கியவரை தமிழரல்ல எனச்சொல்வது. உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள தமிழக முசுலீம் மக்கள் தமிழரில்லையா? அவர்களுக்குத் தமிழகத்தை ஆள உரிமையில்லையா? திராவிடர் கழகத்தை ஆரம்பித்துத் தமிழர்களின் சுயமரியாதையை நிலைநாட்டப் போராடிய ஈ.வெ.ரா. பெரியாரின் தாய்மொழி தமிழில்லையே? தமிழ் எழுத்துக்களில் மாற்றத்தைக் கொண்டு வந்த அவரையும் தமிழரல்ல என்று சொல்லப் போகிறார்களா?

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு 'தமில், டமில், தங்ளிஷ்' பேசுபவர்கள் தான் தமிழரல்லாதோர். தமிழ் தாய்மொழியாக இருந்தாலும், தம் குழந்தைகளைப் பள்ளிகளில் தமிழ் படிக்க ஊக்குவிக்காதப் பெற்றோரே தமிழரல்லாதோர். தமிழ் தெரிந்தும் தமிழில் பேசுவதை மரியாதைக் குறைவு என எண்ணுவோரும், தமிழில் பெயர் வைப்பதைப் பிற்போக்குத்தனம் என கருதுவோருமே தமிழரல்லாதோர். தமிழருக்கும், தமிழகத்திற்கும் பாதகம் நேரும் போது அதை எதிர்த்து நிற்காமல் ஓடி ஒளிபவரே தமிழரல்லாதோர். தமிழ் மொழியின் மீது பற்றற்றவரும், தமிழகத்தின் முன்னேற்றத்தில் முனைப்பற்றவரும், தமிழர் வாழ்வின் ஏற்றத்தில் ஆர்வமில்லாதவருமே தமிழரல்லாதோர்.

என் வரையறைப்படி தமிழையும், தமிழகத்தையும் நேசிக்கும் அனைவரும் தமிழரே! அந்த வகையில், பல அரசியல் மாற்றுக்கருத்துக்கள் இருப்பினும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் இவர்கள் அனைவரும் தமிழரே. என்ன சொன்னாலும் இவர்கள் தமிழக வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார்கள் என்பதை மறுக்க இயலாது. எம்.ஜி.ஆர் மீது தமிழர்கள் வைத்திருந்த அன்பிற்கு ஈடு இணையில்லை. 13 ஆண்டுகள் தொடர்ந்து தமிழகத்தை ஆண்டது நிச்சயம் ஒரு சாதனை. விஜயகாந்த் உதவி செய்த அளவிற்குக் கூடத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மற்ற நடிகர்கள் தமிழக மக்களுக்கு உதவியிருப்பார்களா என்பது ஐயமே. வைகோ இன்றும் ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார். இருமுறை சட்டமன்ற தேர்தலில் வென்று பத்து ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு உள்ளார் ஜெயலலிதா. பல அரசியல் மாற்றுக்கருத்துக்கள் இருப்பினும், இவர்களையெல்லாம் தமிழரல்ல எனக்கூறுவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்.

யார் என்ன சொன்னாலும், நான் தமிழன் என்பதில் எனக்குத் துளியளவும் ஐயமில்லை, ஒரு சராசரி தமிழனுக்குத் தமிழ் மொழி மற்றும் தமிழகத்தின் மீதும் எந்த அளவுக்கு உரிமையுள்ளதோ அதே அளவு உரிமை எனக்கும் உண்டு. இதை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு யாருடைய ஒப்புதலும் எனக்குத் தேவையில்லை. இந்த என் கருத்துக்குத் தமிழ் இணைய வாசகர்கள் நிச்சயம் ஆதரவளிப்பார்கள் என நம்புகிறேன். தமிழன் என்று சொல்கிறேன், தலை நிமிர்ந்து நிற்கிறேன்.

3 comments:

பத்மகிஷோர் said...

நீங்கள் சொல்வது உண்மை என்றாலும் தமிழ் பாசிச கூட்டம் எற்று கொள்ளாது. இந்த பாசிசத்துக்கு பெரியார் மட்டும் விதி விலக்கு, அவர் கன்னடம் பேசினாலும் தமிழர் தந்தை, அவர் தன் இயக்கதிற்கு தமிழர் கழகம் என்று பெயர் வைக்கவில்லை, கவனிக்கவும். ஆனால் விஜயகாந்த் மட்டும் வரக்கூடாது.

Jeyapalan said...

இந்தத் தலைப்பில் இதே எழுத்தை வேறு எஙகேயோ பார்த்து பின்னூட்டமும் எழுதியிருந்தேனே.
நீங்களே வேறு இடத்திலும் பதிந்திருந்தீர்களா?

Nakkiran said...

உங்கள் கருத்துக்கு நன்றி ஜெயபால்.
ஆம். நான் இவ்வலைப் பதிவை தொடங்கும் முன் எழுதிய பதிவு இது. எனவே, இதை திராவிட தமிழர்கள் பதிவில் பதிக்க வேண்டி முத்து(தமிழினி) விற்கு அனுப்பினேன். இக்கருத்து, திராவிட தமிழர் பதிவில் பதிக்கப்பட்டுள்ளது.