Wednesday, March 21, 2007

மருத்துவச் சுற்றுலா - 1

இந்தியா மென்பொருள் துறையில் ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கிறது. BPO துறையிலும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. என்னதான் சீனா மிரட்டிக் கொண்டிருந்தாலும் இத்துறைகளில் அது இந்தியாவை தோற்கடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல, தலையால் தண்ணி குடிக்க வேண்டியிருக்கும். இப்போது இந்தியாவின் அடுத்த இலக்கு மருத்துவச் சுற்றுலா. கடந்த 2005 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 500,000 அமெரிக்கர் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக வெளிநாடு சென்றுள்ளனர். இத்துறை மிகப்பிரமாண்டமான முறையில் முன்னேற்றம் காணப்போகிறது. இதிலும் முன்னணியில் இருப்பது இந்தியாதான். இத்துறையில் நமக்கு போட்டி சீனா அல்ல. சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற மற்ற சிறு ஆசிய நாடுகள் தான்.

அமெரிக்காவில் மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லதாவர் எண்ணிக்கை பல மில்லியன்களைத் தாண்டும். அவர்களுக்கெல்லாம் அமெரிக்காவில் அறுவை சிகிச்சையெல்லாம் கனவில் தான் நடக்கும். இணையத்தில் படித்த ஒரு எடுத்துக்காட்டு, அமெரிக்காவில் வாழும் 53 வயதான தச்சர் ஒருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய சுமார் 250,000 அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று கூறியுள்ளனர். அவருக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லை. அவரிடம் நிச்சயம் அவ்வளவு பணமில்லை. உடனே இந்தியாவிற்கு வந்து புதுடெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தங்கி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். டெல்லி மற்றும் தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்துவிட்டு ஊர் திரும்பினார். அவருக்கு அதற்கான செலவு 20,000 அமெரிக்க டாலர்கள். சுமார் 10 மடங்கு அமெரிக்க கட்டணத்தை விட குறைவு.
இதுவரை நிறைய அமெரிக்கர்கள் காஸ்மடிக் அறுவை சிகிச்சைகளுக்காக பிலிப்பைன்ஸ் மற்றும் பாங்காக் ஆகிய இடங்களுக்கு பறந்து கொண்டிருந்தார்கள். இனி மற்ற உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளுக்கும் அங்கு செல்வதற்குத் தயாராகிவிட்டார்கள்.

பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, சலுகையாக மெடிக்கல் இன்சூரன்ஸ்க்கான பிரீமியமும் அந்நிறுவனங்களே கட்டிவிடும். கடந்த ஆறு ஆண்டுகளில் இதற்காக அந்நிறுவனங்கள் செலுத்தும் தொகை சுமார் 85% உயர்ந்துள்ளதாம். இதன் மூலம் இன்சூரன்ஸ் கம்பெனிகள் கொள்ளை இலாபம் பார்த்து வருகின்றன. இதனால் சில நிறுவனங்கள் மருத்துவச் சுற்றுலாவை பணியாளர்களுக்கு முன்னிறுத்துகின்றனர். இந்த வகையை தேர்ந்தெடுக்கும் பணியாளர்கள், ஏதேனும் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தால் அவர்கள் இந்தியா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக அவர் குடும்பத்தில் ஒருவர் அவருடன் பயணிக்கலாம். இம்முறை தேர்ந்தெடுக்கும் பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையும், ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்கப்படுகிறது. இதனால் இந்நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பிரீமியத்தொகை கணிசமாக குறையும்.

இதுவரை மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லதாவர் மட்டுமே வெளிநாடுகளுக்குச் சென்று இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார்கள். இனி இது போல் பெரும் நிறுவனங்களில் வேலை செய்வோறும் மருத்துவச் சுற்றுலாவிற்காக வெளிநாடுகளுக்குச் செல்வார்கள். இப்பொழுதே ஆண்டிற்கு சுமார் 200,000 வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இது மேலும் பல மடங்காக பெருகும் என்பது நிபுணர்கள் கருத்து.

தொடரும்

Monday, March 19, 2007

உலகின் மிகப்பெரிய விமானம் - AirBus A380
பல காலமாக விமான தயாரிப்பில் முடிசூடா மன்னனாக விளங்கும் போயிங் நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரும் சவாலாக ஏர்பஸ் நிறுவனம் A380 எனும் உலகின் மிகப்பெரிய விமானத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது வரை போயிங் நிறுவனத்தின் 747 விமானமே உலகின் மிகப்பெரிய விமானமாக இருந்தது. ஆனால் இனி ஏர்பஸ் நிறுவனத்தின் A380 விமானமே(555 பயணிகள்) உலகின் மிகப்பெரிய விமானமாக இருக்கும். இந்த விமானம் 2005ஆம் ஆண்டிலேயே மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்று தான் அமெரிக்காவில் முதன் முதலாக தன் பயணசேவையை தொடங்கியது.


கிட்டதட்ட 13 வருடங்களாக உழைத்து இந்த புதிய விமானத்தை வடிவமைத்துள்ளார்கள்


Passenger: 555 (If three class)
853 (all-economy class)
Range: 8,000 nm./14,800 km (with max. passengers)
Max. weight: 562 tonnes
Max. take-off weight: 560 tonnes
Max. landing weight: 386 tonnes
Max. fuel capacity: 81,890 USg
310,000 litres
Typical operating weight empty: 278.8 tonnes
Typical volumetric payload: 66.4 tonnes
Speed: Max cruising speed: 652mph
Long range cruising speed :630mph
Length: 73m (239ft 3in)
Height: 24.1 m (79ft 7in)
Cabin lenght: 50.68m (166ft 3in)
Max. cabin width main deck: 6.58m (21ft 7in)
Max. cabin width upper deck: 5.92m (19ft 5in)
Wing span: 79.8m (261ft 8in)
Wing area: 845m sq (9,100 ft sq)
Wheelbase: 30.4m (99ft 8in)
Engine: Rolls-Royce Trent 900
Thrust Range: 70,000 lb slst
Cost: [June 06]US$295.6m - US$316m
[20/06/05]approx. US$295 million
[launch]approx. US$285 million


இவ்விமானத்தைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு http://en.wikipedia.org/wiki/Airbus_A380இன்று முதல் A380 விமானம் LAவில் உள்ள LAX விமான நிலையத்தில் தரையிறங்கியது. இவ்வகை விமானங்களுக்கு தக்கவாறு LAX விமான நிலையத்தில் பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து தேவையான மாற்றங்கள் செய்தனாராம். சிறிது நிமிடங்களில் அடுத்த A380 விமானம் நியுயார்ர்கில் JFK விமான நிலையத்தில் தரையிறங்கியது. LAவில் இறங்கிய விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை. ஆனால் நியுயார்ர்கில் இறங்கிய விமானத்தில் 550 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இதெல்லாம் இருக்கட்டும், எனக்குள்ளதெல்லாம் ஒரே ஆசைதான். அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு ஒரு 10 - 12 மணி நேரத்தில் செல்லவேண்டும். இப்போதைய 24 மணி நேரம் எல்லாம் ரொம்ப அதிகம். உட்காரமுடியவில்லையப்பா...

Sunday, March 11, 2007

விலையுயர் கற்கள் கண்காட்சி
சென்ற வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமெரிக்காவின் சாண்டியோகோ நகரில் விலையுயர் கற்கள் கண்காட்சி நடைபெற்றது. முத்து, பவளம், வைரம், ரூபி, ஜேட் மற்றும் பல எனக்கு விவரம் தெரியாத கற்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. மிகவும் அழகான கண்ணைப் பறிக்கும் கற்கள் அனைத்து வண்ணங்களிலும் அனைத்து விலைகளிலும் இங்கு கிடைக்கின்றன. இவர்கள் வருடத்திற்கு 40 கண்காட்சிகள் அமெரிக்கா முழுவதும் நடத்துகிறார்கள். மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.

http://gemfaire.com/
.

என் மனைவி சென்ற வருடம் சுமார் $100 கொடுத்து இக்கண்காட்சியில் ரூபி வாங்கினார்கள். பின்னர் இந்தியா சென்ற பொழுது சென்னையில் ஒரு நகைக்கடையில் அந்த ரூபி மணிகளை காட்டிய போது, அது நல்ல வகை கற்கள்தான் என்றும் அதன் விலை இந்தியாவில் இன்னுமதிகமாக இருக்கும் என்றும் சொன்னார்கள். உண்மையோ பொய்யோ நாம் ஏமாறவில்லை என்ற மனதிருப்தியடைந்தேன்இன்னொரு முக்கியமான விஷயம், இக்கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. அதில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட கடைகள் இந்தியர்களுடையது. விசாரித்ததில் அமெரிக்காவில் இந்தியர் மிகப்பெருமளவில் நகை வியாபாரம் செய்வதாக அறிந்து ஆச்சரியப்பட்டேன். மற்றொரு ஆச்சரியமான விஷயம், கண்கட்சியில் வைக்கப்பட்ட நகைகளில் மிகப்பெருமளவில் 'Made in India' Tag இருந்தது. இந்தியாவிலிருந்து விலையுயர் கற்கள் பெருமளவில் மேலைநாடுகளுக்கு இறக்குமதியாகிறதாம். வைரம் பட்டை தீட்டும் தொழிலில் இந்தியாதான் முண்ணனியில் இருப்பதாக எங்கோ படித்ததாக ஞாபகம்.

http://gemfaire.com/ இந்த சுட்டிக்கு சென்று உங்கள் ஊரில் இக்கண்காட்சி நடைபெறுகிறதா என்று பார்க்கவும். எதுவும் வாங்கவில்லையென்றாலும் கண்டிப்பாக ஒருதடவை சென்று பார்த்து வரவும். வித்தியாசமான அனுபவத்திற்கு நான் உத்தரவாதம்.

Thursday, March 08, 2007

ஓவர் நைட் மில்லியனர்

பக்கத்தில் இருப்பவர் யார் தெரியுமா?
சென்ற செவ்வாய்க்கிழமை இரவு ஒரு ட்ரக் ஓட்டுநராக தூங்க சென்றவர், புதன்கிழமை காலை எழுந்திருக்கும் போது மில்லியனர். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் வசிக்கும் 52 வயதான எட் நபோர்ஸ் (Ed Nabors) தான் அந்த அதிர்ஷ்டசாலி.

அமெரிக்க லாட்டரி வரலாற்றிலேயே, மிக அதிக பரிசுத் தொகையான 390 மில்லியன் டாலருக்கான குலுக்கல் நேற்று நடைப்பெற்றது. அந்த குலுக்கலில் வந்த எண் 16-22-29-39-42. இந்த எண் கொண்டு இரு சீட்டுகள் விற்கப்பட்டதும், விற்கப் பட்ட மாகாணங்கள் ஜார்ஜியா மற்றும் நியூ ஜெர்ஸி என்றும் அறியப்பட்டது. என்வே மொத்த பரிசுத்தொகை அந்த இருவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும்

ஜார்ஜியாவில் வேலை செய்து கொண்டிருந்த எட் நபோர்ஸ் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் சிறிது நேரம் உறைந்து போனாராம். முதலில் தன் மகளுக்கு வீடு வாங்கி கொடுக்க போவதாக சொல்லும் எட் நபோர்ஸ் இனி வேலைக்குச் செல்ல போவதில்லையாம்... இனி என்ன செய்ய போறீங்க என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் 'மீன் பிடிக்க போகிறேன்' ("I'm going to do a lot of fishing.")

படத்தை பார்த்தவுடன் எனக்கு எழுந்த சந்தேகம், என்னடா 390 ல பாதி 195 மில்லியன் ஆச்சே என்ன வெறும் 116.5 மில்லியன் செக் தரோங்கன்னு.. பிறகுதான் தெரிந்த்து, தவணை முறையில் ஆண்டுதோறும் 26 ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வாங்கிக்கிறதுனா 195 மில்லியன் கிடைக்குமாம். ஆனா நம்ம எட் நபோர்ஸ் அன்னிக்கே மொத்த துட்டும் எடுத்து வைன்னு சொன்னதினால், ஏதோ கணக்கு போட்டு 116.5 மில்லியன் கொடுத்துள்ளார்கள். சரி இதற்குப்பிறகு பாவம் அவர் வரி வேறு கட்டவேண்டும். எல்லாம் போக அவருக்கு வரப்போகும் தொகை வெறும்(?) 80 மில்லியனுக்கும் மேல்.

சரி இந்திய ரூபாயில எவ்வளவுனு பார்க்கலாமா? 1$ = 44ரூபா ன்னு வச்சிக்கிட்டா, 80 மில்லியன் = 352 கோடி ரூபாய்... அடேங்கப்பா... இதே நம்பர் உள்ள இன்னொரு டிக்கெட் நியூ ஜெர்ஸில யாரோ ஒரு அதிர்ஷ்டசாலி வாங்கியிருக்கார். அவர் யாருன்னு இன்னும் தெரியல... அவருக்கு இந்த பரிசை வாங்குவதற்கு ஒரு வருடம் வரை காலம் உள்ளது. நியூ ஜெர்ஸில இருக்கும் நமது தமிழ் பதிவுலக நண்பர்கள் யாராவது இந்த லாட்டரி வாங்கியிருந்தா சீக்கிரமா போய் பரிசை வாங்கிட்டு வந்து மறக்காமா ஒரு மெகா டீரீட் கொடுத்துடுங்கோ.

என்ன பரிசுத் தொகையை பார்த்தவுடனே, மெகாமில்லியன் லாட்டரி விளையாடனும்னு தோணுதா.. இந்த மெகாமில்லியன் லாட்டரியின் விதிமுறைகள் மற்றும் விளையாட்டு முறைகளின் மேலதிக தகவல்களுக்கு இந்த சுட்டியை http://www.megamillions.com/ சொடுக்கவும்.

Obsessive-Compulsive Disorder (OCD)


அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு USA Netxwork தொலைக்காட்சியில் வரும் MONK தொடர் கண்டிப்பாக தெரிந்து இருக்கும். பார்க்காதவர்களுக்கு, மாங் என்னும் கதாபாத்திரம் ஒரு தனியார் துப்பறியும் நிபுணர். இவர் நம்ம ஊர் துப்பறியும் சாம்பு மாதிரி தான். வித்தியாசமா யோசித்து குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பார். ஆனால் இவருக்கு Obsessive-Compulsive Disorder (OCD)ன்னு (தமிழ்ல என்னன்னு சொல்றதுங்க) ஒரு குறைபாடு. அதாவது எதைக் கண்டாலும் பயம், சந்தேகம் அல்லது அறுவெறுப்பு. நம்ம தெனாலி கமல் தன்னோட வியாதி பத்தி சொல்லுவாரே அதே குறைபாடுதான்... கமல் படத்துல இலங்கைல நடந்த போர் மாட்டிக்கிட்டதால அந்த குறைபாடு வந்ததுன்னு சொல்லுவார். இந்த மாங் தொடரில் கூட மாங்கின் மனைவி இறந்ததால அவருக்க இந்த குறைபாடு வந்ததா சொல்வார்கள்.
.
உண்மையிலேயே இந்த குறைபாடு வருவதற்கான தெளிவான காரணங்கள் இன்னும் நிரூபிக்கப்படலன்னு இத்துறை நிபுணர்கள் சொல்கிறார்கள். இதற்கான ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டுள்ளது. மூளையின் முற்பகுதியில் இருந்து உட்பகுதிகளுக்கு விஷயங்களை கொண்டுசெல்வதில் உள்ள குறைபாடு தான் இதற்கு காரணம் என்று ஆராய்ச்சி ஒரு கருத்தை நிறுவுகிறது. இப்படி மூளையில் விஷயங்களை கொண்டு செல்ல பயன்படும் வேதிப்பொருள் செரொடொனின்(serotonin). இந்த செரொடொனின் குறைபாடு இந்த வியாதிக்கான காரணமாக இருக்ககூடும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். மூளையின் செயல்பாடுகளை படம் பிடித்து பார்த்ததில், செரொடொனின் அதிகரிக்க மருந்து கொடுத்த போதும், மற்றும் cognitive behavioral psychotherapy செய்த போதும் மூளையின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
.
இந்த குறைபாடு 9 வயது முதல் 40 வயது வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆண் பெண் இருபாலருக்கும் வரலாம். ஆனால் இதுவரை இதனால் பாதிக்கப்பட்டவர்களில் 33% பேருக்கு சிறுவயதிலேயே இக்குறைபாடி தோன்றிவிட்டதாம். இது ஒரு பரம்பரை வியாதி இல்லை என்றாலும் பெற்றோருக்கு இக்குறைபாடு இருந்தால் அது குழந்தைகளை தாக்குவதற்கான் வாய்ப்பு உண்டாம். இப்போதைய நிலவரப்படி சராசரியாக நான்கு மருத்துவர்களை பார்த்து, சராசரியாக 9 வருடம் மருத்துவம் செய்த பின்னர்தான் இக்குறைப்பாட்டை சரியாக கண்டு கொள்ள முடிகிறதாம்.


பக்கத்து படத்தில் இருப்பவர் பெயர் ஜெஃப் பெல் (Jeff Bell). அமெரிக்காவில் பே ஏரியாவில் இருக்கும் இவர் ஒரு வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர். இவருக்கு இக்குறைபாடு 7 வயதில் தோன்றியது என்கிறார். ஆனால் இளைஞனாக இருந்த போது நடந்த ஒரு படகு விபத்து இக்குறைப்பாடு வீரியத்துடன் வெளிக்கொணர்ந்ததாம். அதுவரை சகஜ வாழ்க்கையிலிருந்த அவரால் அதன் பின்னர் எந்த ஒரு வேலையும் செய்ய இயலாமல் எதற்கெடுத்தாலும் பயப்படுவாராம். பிறகு மனநலமருத்துவரிடம் சிகிச்சை பெற்ற பின் சகஜ் வாழ்க்கைக்கு திரும்பிய அவர் OCD பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
"Rewind, Replay, Repeat" என்பதே அவர் புத்தகத்தின் தலைப்பு. எல்லாருக்கும் பயம், சந்தேகம் என்பது உண்டு. எல்லோரும் கதவை பூட்டியபின் ஒரு முறைக்கு இருமுறை இழுத்து பார்க்கிறோம், ஒருதடவை பார்த்தாலே போதும் ஆனால் இரண்டுத்டவை சரி பார்க்கிறோம். வீட்டை விட்டு செல்லும் போது அடுப்பு அணைத்தோமா என்று சரிபார்க்கிறோம். ஒருதடவை சரி இருதடவை செய்தாலும் சரி, ஆனால் அதையே பலதடவை செய்தால் அதுதான் OCD என்கிறார் பெல். ஆராய்ச்சியாளர்கள் சொல்வது போல் இது நிச்சயம் biochemical பிரச்சனையே என்கிறார். இதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால் நிச்சயம் இக்குறைப்பாட்டை குணமாக்க முடியும் என்கிறார் இந்த தன்னம்பிக்கையாளர்.

Monday, March 05, 2007

மாடுயுலர் கிச்சன்...பாட்டி தரையில் உட்கார்ந்து விறகு அடுப்பில் சமைத்து போட்டு சாப்பிட்டு இருக்கிறேன். அம்மா நின்று கொண்டே LPG அடுப்பில் சமைத்து போட்டு பார்த்து இருக்கிறேன். இன்றும் எங்கள் வீட்டில் சமையலறை கொஞ்சம் அழுக்காகத்தான் இருக்கும். எண்ணைய் கறை, திறந்து கிடக்கும் அலமாரிகள், மளிகை சாமான்கள் நிரப்பிய அலுமினியம் மற்றும் சில்வர் டப்பாக்கள், சுவரில் மாவுச்சிதறலோடு கிரைண்டர், மூடி வைத்த தண்ணீர் தவலைகள், அரிவாள் மனை.. ம்..ம்.. என்ன இருந்தாலும் அந்த வாசமே தனி தான்...இனிமேல் அதுபோல் சமையலறை இருக்க இனி வரும் மக்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இனியெல்லாம் மாடுயுலர் மயம். மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொரு வாழ்க்கை மாற்றம் தான் மாடுயுலர் கிச்சன். 10 வருடங்களுக்கு முன்பு மிகப் பெரும் பணக்காரர்கள் மேலை நாடுகளிலிருந்து சமையலறையை அப்படியே இறக்குமதி செய்து தங்கள் வீடுகளில் அமைத்துக் கொள்வர். இம்முறை சிறிது நாட்களிலேயே தோல்வி அடைந்தது. இறக்குமதிக்கு ஆகும் அதிக செலவு, அதிக கால நேரம், இந்தியாவில் அதை பொருத்தும் போது வரும் நடைமுறைச்சிக்கல் போன்றவற்றால் இம்முறையை மக்கள் நிராகரிக்கத் தொடங்கினர். ஆனால் இப்பொழுது நிலமையே வேறு. பல உள்ளூர் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்தும், பல சுயமாகவும் இத்தொழிலில் வெற்றிக் கொடி நாட்டியும் வருகின்றனர்.
சமையலறையை பகுதி பகுதியாக செய்து இன்ஸ்டால் செய்து கொள்வதுதான் மாடுயுலர் கிச்சன். ஏதாவது ரிப்பேர் செய்ய வேண்டுமென்றாலும் அந்த ஒரு பகுதியை மட்டு கழற்றிக் கொண்டு போய் பழுது பார்த்து மறுபடியும் வந்து மாட்டிவிடுவார்கள். இப்போது உங்களுக்கு டிஷ் வாஷர் வாங்க விருப்பமோ வாய்ப்போ இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். மாடுயுலர் கிச்சன் இருந்தால் நீங்கள் விருப்பப் பட்டபோது வாங்கி உங்கள் சமையலறையில் எளிதில் பொறுத்தி விட முடியும். சமையலறையின் எல்லா இயந்திரங்களையும் எளிதில் பொருத்திவிடக்கூடிய அளவில் இதை வடிவமைத்து இருப்பர். இருக்கும் குறைவான இடத்தை முழுமையாக உபயோகப்படுத்தி நிறைய பொருட்களை நாம் சமையலறையில் வசதியான வகையில் வைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைப்பதே மாடுயுலர் கிச்சனின் வெற்றிக்கான ரகசியம். சொல்லவே தேவையில்லை மாடுயுலர் கிச்சனின் அழகுதான் நம் இல்லத்தரசிகளை அதனிடத்தே ஈர்ப்பது. இத்தோடு, இதை நிறுவ இரண்டு மூன்று நாட்களே போதும் என்பது மற்றுமொரு சிறப்புமாடுயுலர் கிச்சன், சுமார் 75000 ரூபாயிலிருந்து, 25 இலட்சம் ரூபாய் வரை எல்லாவிதமான விலைகளிலும் நிறுவலாம். எல்லாம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் டிசைனை பொறுத்தது. சராசரியாக ஒரு 8*10 அடி மாடுயுலர் சமையலறை அமைக்க சுமார் 1.75 முதல் 2 இலட்சம் வரை செலவாகலாம். இப்பொழுது புதிதாக கட்டும் எல்லா அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மாடுயுலர் கிச்சன் நிறுவுகிறார்கள். இந்த மாடுயுலர் கிச்சன் வியாபாரத்திற்கு இந்தியாவில் மிகப்பெரும் எதிர்காலம் உள்ளதாக கணிக்கிறார்கள். இதன் அழகும், விலையும் நிச்சயம் பிரம்மிக்க வைக்கின்றன.

இன்னும் ஒரு வருடம் ஆகுமாம்...

காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வந்த போது, அட தீர்ப்பு சாதகமோ பாதகமோ எப்படியிருந்தாலும் சரி, முதலில் வந்த தீர்ப்பை நிறைவேற்றினால் போதும். சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று சொல்லுபவரிடம் இருந்து முதலில் 180TMC ஆவது வாங்கிடலாம், மிச்சத்தை அப்புறம் பார்த்துக்கலாம் என்று எண்ணினேன். அதற்கு முதலில் நடுவர் மன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டும் என்றார்கள். சரி அதற்கென்ன நம்மாட்கள் மத்திய அரசில் இருக்கிறார்களே சீக்கிரம் ஓரிரு மாதங்களில் முடித்து விடுவார்கள் என்று எண்ணினேன்.

இன்றைக்கு தினமலரில் வந்த செய்தியை பார்த்து அதிர்ந்து போனேன். நமது மத்திய நீர் வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ், நடுவர் மன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிட இன்னும் ஓராண்டிற்கு மேலாகும் என்று சொல்கிறார்.

முதலில் மேல்முறையீடு செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் 90 நாட்கள் அவகாசம் உள்ளதாம். இன்றைய தேதிக்கு தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களுமே மேல்முறையீடு செய்ய போவதாக அறிவித்துள்ளன. இவற்றின் மீது முடிவெடுக்க நடுவர் மன்றத்திற்கு ஓராண்டு வரை அவகாசம் உள்ளதாம். அதன் பிறகே, தீர்ப்பை கெஜட்டில் வெளியிடும் பிரச்சனை வருமாம். அதாவது அதன் பிறகு கூட இத்தீர்ப்பை கெஜட்டில் வெளியிடுவோம் என்று சொல்லவில்லை. 'கெஜட்டில் வெளியிடும் பிரச்சனை ' வரும் என்று தான் சொல்கிறார். சட்டப்படி தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை போலும்.

ஏற்கனவே 18 வருடங்களாக (ஏதோ இல்லாததை கண்டுபிடிப்பதை போல) ஆராய்ந்து ஏதோ தீர்ப்பை சொன்னார்கள். அதற்கு மேல் என்னய்யா மேல்முறையீடு.. ஒரு வருடம்... அப்படி 18 வருடங்களாக கண்டுபிடிக்காததை எப்படி இந்த ஒரு வருடத்தில் கண்டறிவீர்கள். சரி அப்படியே ஒரு வருடத்தில்(?) ஏதாவது முடிவெடுத்தால் அதை செயல்படுத்துவார்களா என்றால் அதற்கும் உத்தரவாதம் இல்லை. என்ன எழவு இது எனக்கும் ஒன்றும் புரியவில்லை. இன்னும் எத்தனை வருடம் தான் தமிழன் காத்துக்கிடப்பான். இதையெல்லாம் பார்த்தால் சில சமயம் நமது நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் மீது ஒருவிதமான வெறுப்புணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை.

Thursday, March 01, 2007

சென்னையில் ரியல் எஸ்டேட்

நான் 1999 மத்தியில் பொறியியல் படிப்பை முடித்து விட்டு எல்லோரையும் போலவே சென்னைக்கு வேலை தேடி வந்தேன். அப்போது தான் என் தந்தை அவரின் ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். அவருக்கு அப்பொழுது கிடைத்த மொத்த பணம் சுமார் 2 1/2 இலட்சம் ரூபாய். சரி வெறும் 5 அல்லது 6 % வட்டிக்கு வங்கியில் பணத்தை போட்டு வைப்பதை விட சென்னையில் எங்காவது வீட்டுமனை வாங்கலாமே என்று என் தந்தை எண்ணினார். சென்னையில் உள்ள ஒரு உறவினர் உதவியோடு வீட்டுமனை தேடினோம்.

சென்னை கொளத்தூரில் எங்கள் உறவினர் இருந்ததால் கொளத்தூரை சுற்றி தேடினோம். கையில் இருந்த பணத்திற்கு, பேரூந்து நிறுத்ததிலிருந்து 2 கி.மீ தூரம் வரை உள்ளே சென்றால் கூட இடம் எதுவும் கிடைக்கவில்லை. 4 இலட்சத்திற்கு குறைவாக ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. கடைசியாக குறைந்த பட்சமாக ஊரிலிருந்து அதிக தொலைவில் 3 1/2 இலட்சம் ரூபாய்க்கு ஒரு இடம் கிடைத்தது. ஆனால் தரகர் கட்டணம் மற்றும் இடம் பதிவு செய்யகட்டணம் என்று 4 இலட்சம் ஆகும் என்றதால் என் தந்தை நிலம் வாங்கும் ஆசையையே விட்டு விட்டார்.

2004ல் எனக்கு அமெரிக்கா வர வாய்ப்பு கிடைத்தது. அதற்கு ஒரிரு மாதங்கள் முன்பு மீண்டும் நிலம் வாங்கும் ஆசை எழுந்தது. போன தடவை சென்னை எல்லைக்குள்ளேயே பார்த்ததால் தான் நம்மால் முடியவில்லை என்றெண்ணி இந்த தடவை பார்த்தது சென்னையின் புற நகர் பகுதியான தாம்பரத்தில். தாம்பரம் பேரூந்து நிலையத்திலிருந்து முடிச்சூர் ரோடில் சுமார் 2லிருந்து 3 கி.மீ உள்ளே சென்று பார்த்தோம். விலை அப்போது 9 இலட்சம். எனக்கு தலைசுற்றியது. அமைதியாக விமானம் ஏறி அமெரிக்கா வந்து சேர்ந்தேன்.

கிட்டதட்ட 1 1/2 ஆண்டுகள் கழித்து 2005 ஆம் ஆண்டு இறுதியில் என் உறவினரிடம் தாம்பரத்தில் பார்த்த அதே வீட்டுமனையின் விலையைப் பற்றி விசாரித்தேன். அதன் விலை இப்போது 17 இலட்சம் என்றார். தாம்பரம்-வேளச்சேரி சாலை இப்பொழுது மிகவும் பிரபலமாக உள்ளது. அந்த சாலையில் விலை நிலவரம் என்ன என்று விசாரித்தேன். சேலையூரில் 16 முதல் 17 இலட்சம், மேடவாக்கத்தில் 18 முதல் 20 இலட்சம் என்றார். விக்கித்து போய் நின்றேன்.

கிட்டதட்ட 3 வருடங்களுக்கு பிறகு 2006 டிசம்பரில் (ஆம் இரண்டு மாதங்களுக்கு முன்னால் தான்) இந்தியாவிற்கு ஒரு மாத விடுப்பில் வந்தேன். பெற்றோர், உறவினர் ம்ற்றும் நண்பர்களுடன் இனிமையாய் 20 நாட்களை கழித்தேன். உண்மையிலேயே சென்னையில் வீட்டு மனை இந்த விலை விற்கிறதா? இல்லை நம் மக்கள் சும்மா சொல்கிறார்களா என என்க்கு சந்தேகம். ஏனென்றால் இவர்கள் சொல்லும் விலைக்கு பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் சாஃப்ட் வேர் இஞ்சினீயர்களாலே வாங்க முடியாதே. கடைசி பத்து நாட்களில் களத்தில் நேரடியாக குதித்து நான் அறிந்த உண்மை விலை நிலவரம்

ஒரு கிரவுண்ட் (2400 சதுர அடி) வீட்டு விலை

மதுரவாயல்- 35 இலட்சத்திற்கும் மேல்
மேடவாக்கம் - 30 இலட்சத்திற்கும் மேல்
தாம்பரம் - 30 இலட்சத்திற்கும் மேல்
கீழ்கட்டளை - 35 இலட்சத்திற்கும் மேல்
பள்ளிக்கரனை- 35 இலட்சத்திற்கும் மேல்
கூடுவாஞ்சேரி - 10 முதல் 12 இலட்சம்
இரும்புலியூர் - 28 இலட்சம்
பெருங்களத்தூர் - 25 இலட்சம்

இது 2006 டிசம்பர் நிலவரம் இப்பொழுது இன்னும் விலை ஏறி இருக்கலாம். உங்களுக்கு எப்படியோ... எனக்கு ஸ்..ஸ்..ஸ்... கண்ணை கட்டுதே...இன்று மே, 04, 2007


கீழே உள்ள படம், இன்று தினமலரில் வந்துள்ளது


இந்த மேம்பாலம் அமைந்தால் இன்னும் விலை உயரும் அபாயம் உள்ளது. தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு கிரவுண்டின் இன்றைய விலை 45 இலட்சம்.