Tuesday, October 23, 2007

தற்காலிக அகதி...

அமெரிக்கா கலிஃபோர்னியா மகாணம் சாண்டியோகோ நகரில் ஞாயிறு இரவு முதல் காட்டுத்தீ பரவி வருகிறது. இரண்டுநாட்களாக எரிந்தும் இன்னும் தீ அணைந்தபாடில்லை. அமெரிக்கா வரலாற்றிலேயே இது ஒரு மிகப்பெரிய தீ விபத்து என்று சொல்கின்றனர்.

http://www.latimes.com/sports/football/nfl/la-me-sdfire23oct23,1,5108638.story?coll=la-headlines-sports-nfl


சுமார் 1250 வீடுகளுக்கு மேல் எரிந்து சாம்பலாயின. சுமார் 240 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு தீ பரவியுள்ளது. நேற்று ஒரே நேரத்தில் மொத்தமாக எட்டு இடங்களில் தீ பரவியது. அதிர்ஷ்ட வசமாக நகரின் நேர்த்தியான செயல்பாடுகளால் ஒரே ஒருவர் தான் உயிரிழந்திருக்கிறார். அது கூட அவர் வெளியேற மறுத்ததால் தான் என்கின்றன தகவல்கள்.


நேற்று வரை நாங்கள் வசிக்கும் பகுதி, விருப்பப் பட்டால் வெளியேறலாம் என்ற வரையறையில் இருந்தது. இன்னும் சில மணிநேரங்களில் கட்டாய வெளியேற்றம் இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். தேவையான் முக்கிய பொருட்களை மூட்டை கட்டி காரில் அடைத்து வைத்து அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருந்தேன். சிலர் அறிவிப்புக்காக காத்திராமல் தாமாகவே வெளியேறினர்.


நல்ல வேளையாக இன்று எங்கள் பகுதியில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. எனவே வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை. வீடிழந்த பலரின் நிலைமை மிக பரிதாபம். ஒவ்வொரு வீடும் சுமார் 500 ஆயிரத்திலிருந்து 800 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பு இருக்கும். இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என்றாலும் எவ்வளவு கிடைக்கும். வீட்டிலிருந்த பொருட்களுக்கு பணம் கிடைக்குமா தெரியவில்லை. அதுவரை அவர்கள் எங்கு தங்குவார்களோ தெரியவில்லை.


நாங்கள் தங்கியிருப்பது வாடகை வீட்டில். அதுவும் அயல்நாட்டில். வெளியேறச்சொன்னதோ தற்காலிகமாகத்தான். அதற்கே மனம் பட்டபாடு இருக்கிறதே... திரும்பி வரும்போது அந்த வாடகை வீடு இருக்குமா? ஆசையாய் வாங்கி வைத்த பொருட்கள் இருக்குமா? அப்போது ஒருகணம் ஈழத்தமிழரை நினைத்து பார்த்தேன். எப்போது திரும்புவோம் என்றே அறியாமல் பிறந்த நாட்டை விட்டு, சொந்தங்களை விட்டு, இருக்கு சொத்துக்களை விட்டு மற்ற நாடுகளுக்கு புலம் பெயரும் போது அவர்களின் மனது என்ன பாடுபடும்.

எப்போதும் டி.இராஜேந்திரை காமெடியனாகவே பார்த்து பழகிய எனக்கு இந்த வீடியோவில் மட்டும் ஹீரோவாக தெரிந்தார்

Friday, October 12, 2007

அட்வைஸ் ப்ளீஸ்

நான் இருக்கும் ஊரில் நிறைய தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இதில் பல வருடங்களுக்கு முன் அமெரிக்கா வந்தவர்களும் உண்டு, சில நாட்களுக்கு முன் அமெரிக்கா வந்தவர்களும் உண்டு. அனைவருக்கும் தமிழின்பால் ஆர்வமுண்டு. இதை எப்படியென்னால் உறுதியாக சொல்லமுடிகிறதென்றால், தங்கள் பிள்ளைகளை பல்வேறு வேலைகளுக்கிடையிலும் தமிழ் படிக்க அனுப்புகிறார்கள். பிள்ளைகளும் மிக ஆர்வமாக தமிழ் பயிலுகிறார்கள்.


இதில் பாதிபேர் அமெரிக்க குடியுரிமையோ அல்லது பச்சை அட்டையோ வைத்திருப்பவர்கள். திரும்பி தமிழகம் வரும் சாத்தியக்கூறு மிகக்குறைவு. அப்படி இருந்தும் தமிழ் படிக்க தவறாமல் வாரயிறுதி தமிழ் வகுப்புக்கு இவர்கள் வருவதற்கு காரணம் தமிழ்ப்பற்றன்றி வேறு என்ன இருக்க முடியும்.


இப்போது பிரச்சனை என்னவென்றால், சிறு பிள்ளைகளுக்கு தமிழ் கற்று கொடுக்கும் வேளையில், பெரியவர்களுக்கு தமிழ்மணம் தமிழ் பதிவுலகத்தை அறிமுகப்படித்தலாமே என்ற எண்ணம் என்னுள் கிடந்து அரிக்கிறது. ஆனால் இன்றைய சூழலில் ஓரிரு வருடங்கள் பதிவுலகில் பதிவுகள் படித்த அனுபவமுள்ள எனக்கே ஒரு சில விஷயங்களில் கருத்து சொல்ல பயமாயிருக்கும் வேளையில் அவர்களுக்கு தமிழ்மணத்தைப் பற்றி சொல்ல, அவர்கள் ஏதாவது ஒரு சர்ச்சை பதிவோ அல்லது பின்னூட்டமோ போட, நம்ம ஆட்கள் பாய்ந்து விடுவார்களோ என்றொரு பயம்.


இதிலென்னொரு விஷ்யம் என்ன்வென்றால், நான் சொல்லும் மக்களில் ஓரளவிற்கு பிராமண நண்பர்கள் வேறு உண்டு. தமிழ்மணத்தில் வேறு பாதி பதிவுகள் பிராமண எதிர்ப்பு பதிவுகளாக உள்ளன. மேலும் **ணி பதிவுகள் வேறு தமிழ்மணம் எங்கும் நிறைந்துள்ளன. அதனால் இவர்களிடம் போய் தமிழ்மணத்தை அறிமுக படுத்தி ஏதாவது ஏடாகூடமாகி விடுமோ என்று பயமாயிருக்கிறது.. என்ன செய்யலாம் சொல்லுங்க...