Tuesday, May 30, 2006

மெகா தொடர்களின் மகா அநியாயங்கள்

தமிழோவியத்தில் திருமலை கோளுந்து அவர்கள் எழுதிய மெகா சீரியல்கள் - சீர்குலைவா ? சீரமைப்பா ? கட்டுரைப் படித்தேன். அதைப் படித்தபின் மெகா தொடர்களின் அநியாயங்கள் பற்றி ஒரு நாமும் ஒரு பதிவு போடுவோம் என்று எண்ணி இப்பதிவை எழுதினேன்.

தொலைக்காட்சி என்பது ஒரு பொழுதுபோக்குச் சாதனம். அதில் வழங்கப்படும் நிகழ்ச்சிகள் மக்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கி ஒரு சந்தோஷமான மனநிலையை அளிக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்கள் சமுதாயத்தில், குறிப்பாக பெண்களிடம் ஒருவித மனவியாதியைத் தான் உருவாக்கி வருகின்றன. எல்லா தொடர்களும் முடிந்தபின் தொலைக்காட்சிப்பெட்டியை அணைத்தப் பின் யாராவது சிரித்தபடி சந்தோஷமாக அடுத்த வேலையைப் பார்க்க போகிறார்களா? நிச்சயம் ஒரு ட்விஸ்டுடன் தான் தொடரும் போட்டிருப்பார்கள். நாளை அதைப் பற்றி தெரியும் வரை ஒருவித பரபரப்புடன் தான் அலைகிறது மக்கள் கூட்டம்.

இந்த இரண்டு மனைவி விஷயம் எனக்குத் தெரிந்து எல்லா தொடரிலும் சர்வசாதரணமாக உண்டு. அட இந்த கோலங்கள் அல்லது செல்வி தொடர்களில், ஒரு குடும்பமாவது ஒழுங்காய் இருக்கிறதா? ஒரு தம்பதியினராவது சந்தோஷமாய் இருக்கிறார்களா? எல்லாவற்றிலும் கள்ளத்தனம். இரண்டு மனைவி, விவாகரத்து, கள்ளக்காதல், மோசடி, கொலை etc... மத்த விஷயங்களில் முன்னேறுகிறார்களோ இல்லையோ, கதைகளில் காண்பிக்கப்படும் க்ரைம்களில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. பெண் தியாகம் செய்கிறாள் என்று சொல்லிக் கொண்டு இவர்கள் அடிக்கும் கூத்திற்கு அளவேயில்லை. இதையெல்லாம் பார்த்தால் எப்படி ஒரு பாஸிடிவ் தாட்ஸ் வரும்.

ஒரு தொடரில் கதைப்படி(??) ஒரு கதாபாத்திரம் இறந்து விடுகிறார். தத்ரூபமாய் எடுக்கிறேன் என்று சொல்லி மூன்று நான்கு நாட்களுக்கு இறந்தவருக்கு செய்யும் எல்லா சடங்குகளையும் காட்டுகிறார்கள். அந்த வாரம் முழுவதும் ஒரே அழுகை. ஏற்கனவே அலுவலகத்தில் நொந்து போய் வீட்டிற்கு போனால் அங்கேயும் ஒரே அழுகை. அதற்கு சில நாட்களுக்கு பிறகு மற்றுமொரு தொடரில் கணவனை இழந்த பெண் ஒருவருக்கு செய்யும் சடங்குகள். அட ராமா... எங்கள் வீட்டிலேயே ஏதோ துயரம் நடந்தது போல் இருந்தது என் மனைவியின் மனநிலை.

இவர்கள் சொல்லும் கதைப்படி ஹீரோயின் குறைந்தபட்சம் ஒரு மூன்று ஆண்டு காலாமாவது துயரப்படுவார். ஊரில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் அவருக்குத்தான் வரும். பாதி துயரங்கள் வில்லனால் வந்தால் மீதி துயரங்கள் தியாகம் என்ற பெயரில் ஹீரோயின் அடிக்கும் கூத்துகளால் வரும். அந்த மூன்று ஆண்டு காலமும் வில்லன் நன்றாக இருப்பார். கடைசியில் அந்த டிவி நிறுவனம் தொடரை முடிக்கச் சொன்னால், கடைசி ஒரு வாரம் ஹீரோயின் வில்லனை வென்று சாதனை புரிந்து தொடரை முடித்துவிடுவார்கள். நல்லவர் முதலில் இருந்தே ஜெயிப்பதாக காட்டும் ஒரு தொடர் கூட இதுவரை வந்ததாக எனக்கு நினைவில்லை. இதையெல்லாம் பார்த்தால் ஹீரோயினாய் இருந்து மூன்று வருடம் துயரப்படுவதை விட, வில்லனாய் ஒரே ஒரு வாரம் அடி வாங்கிக் கொள்ளத்தான் தோன்றும்.

என் மனைவியின் இந்த மெகாதொடர் பார்க்கும் வழக்கத்தை நிறுத்த ஏதேதோ செய்து பார்த்துவிட்டேன். ஒன்றும் பயனளிக்கவில்லை. ஒருமுறை என்னவள், இதற்கு மேல் ஏதாவது சொன்னாலோ அல்லது செய்தாலோ நீங்க உங்க பொறந்த வீட்டுக்கு போக வேண்டிவரும் என்றார். இந்த மெகாதொடர்களின் இம்சையில் இருப்பதை விட நான் என் பிறந்த வீட்டுக்கே போகிறேன் என்றேன் நான். உங்க ஊர்ல கரண்ட் போயிடுச்சாம் இப்போதான் உங்க அம்மா போன் செய்து, கோலங்களும், செல்வியும் என்ன ஆச்சுன்னு கதை கேட்டாங்கோ என்றார் நக்கலுடன்.

1 comments:

சேதுக்கரசி said...

//உங்க ஊர்ல கரண்ட் போயிடுச்சாம் இப்போதான் உங்க அம்மா போன் செய்து, கோலங்களும், செல்வியும் என்ன ஆச்சுன்னு கதை கேட்டாங்கோ என்றார் நக்கலுடன்.//

ஹாஹா.. வாங்கிக்கட்டிக்கொண்டீரா? சில வருடங்களுக்கு முன் இந்தியா சென்றபோது என் கணவர், வீட்டில் வேலை பார்க்கும் இரண்டு பெண்களிடமும் சொன்னார்.. வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டீங்களா? டி.வி. பார்க்கிறீங்களே, அம்மா வந்தா சத்தம் போடப்போறாங்க என்றார் வேடிக்கையாக. அதற்கு அந்தப் பெண்கள் என்ன சொன்னதுகள் தெரியுமா? "அம்மா திரும்பி வர்றப்ப எங்களைக் கதை கேப்பாங்கண்ணே.. அதுக்காகவாவது பார்க்கணும்!"