Thursday, June 01, 2006

மென்பொருள் நிறுவனங்களின் தொழிலாளர் வைப்புநிதி மோசடி

இப்பொழுதெல்லாம் இந்தியாவிலுள்ள மிகப்பெரும் மென்பொருள் நிறுவனங்கள் தம் தொழிலாளர்களுக்கான வைப்புநிதியை நேரடியாக அரசாங்கத்தில் செலுத்துவதில்லை. இவர்களே தொழிலாளர் வைப்புநிதி ட்ரஸ்ட் என்று ஒன்றை ஆரம்பித்து, அதில் வைப்புநிதியை செலுத்தி வருகிறார்கள். அந்த ட்ரஸ்ட் அந்நிறுவனத்தின் மேற்பார்வையில்தான் இயங்கும் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. இதை நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது போலும். எனக்கு அவ்வளவாக அதைப் பற்றித் தெரியவில்லை.

ஆனால் இப்படி வைப்புநிதி அரசாங்கத்திடம் இல்லாமல், ஒரு நிறுவனத்தின் பிடியிலுள்ள ட்ரஸ்டில் உள்ளதால், அந்நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளிக்கு இது நிச்சயம் பாதகமாகத்தான் உள்ளது. அதுவும் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறியவரினால், அவ்வைப்புநிதியை தன்னுடைய புதிய நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளவோ, அல்லது பணமாகப் பெற்றிடவோ போராட வேண்டியுள்ளது. இந்த வைப்புநிதி ட்ரஸ்ட், நிறுவனத்தின் அனுமதியின்று ஒரு துரும்பையும் நகர்த்தாது. முடிவில் அந்நிறுவனம் நினைத்தாலன்றி அப்பணத்தைப் பெற இயலாது.

என் நண்பர் ஒருவர் ஒரு இந்திய மென்பொருள் நிறுவனத்தின் மூலம் அமெரிக்கா வந்தார். மொத்தம் மூன்று ஆண்டுகள் இங்கு அந்நிறுவனத்திற்காக பணி புரிந்தார். பின்னர் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறி ஒரு புதிய நிறுவனத்தில் சேர்ந்தார். சேர்ந்த புதிய அமெரிக்க நிறுவனத்தில் வைப்புநிதி வாய்ப்பு இல்லாததால், தன் வைப்புநிதி கணக்கை மூடிவிட்டு அதிலுள்ள பணத்தைக் கோரி தன் பழைய இந்திய நிறுவனத்தை அணுகினார். ஆனால் அந்த இந்திய நிறுவனமோ ஏதோ பல நியாயமற்ற விதிமுறைகளை காட்டி, அவர் இன்னும் 10 ஆயிரம் அமெரிக்க டாலர் கட்டினால் தான் No-Dues கொடுக்க முடியும் என்று கூறிவிட்டது. அந்நிறுவன வைப்புநிதி ட்ரஸ்டோ, நிறுவனத்திடமிருந்து clearance சான்றிதழ் பெற்றுத்தந்தாலொழிய வைப்புநிதியைத் தர இயலாது என்று சொல்லிவிட்டது. எனது நண்பர் சில இலட்சம் ரூபாய்களை இழந்ததுடன் மிகுந்த மன உளச்சலுக்குள்ளானார்.

இந்திய அரசாங்கம், தொழிலாளர் நலனுக்காக ஏற்படுத்திய இந்த வைப்புநிதி திட்டம் , இதைப் போன்ற நிறுவனங்களால் மிகத்தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. தன்னுடைய பணத்தைப்/அடிப்படை உரிமையைப் பெறவே ஒரு தொழிலாளி போராட வேண்டியுள்ளது. இது ஒரு நியாயமற்ற மனிதாபிமானமற்ற செயல். ஒவ்வொரு மென்பொருள்பொறியாளர்கள் மூலம் அந்நிறுவனங்கள் அடையும் இலாபம் ஏராளம். ஒரு சராசரி மென்பொருள்பொறியாளர் ஒருநாளைக்கு சராசரியாக 10-12 மணி நேரம் வேலை செய்கிறான். எடுத்தக் கொண்ட ப்ராஜெக்டை எப்பாடுபட்டாவது சொன்ன தேதியில் முடித்துக் கொடுக்கிறான். தன் நிறுவனத்திற்கு அயல்நாடுகளில் பெருமை சேர்க்கிறான்.

அப்படி நிறுவனத்தில் இருக்கும் வரை அவனுடய உழைப்பின் மூலம் இலாபமடைந்தபின், அவன் நிறுவனத்தை விட்டு விலகினால், அவனை அலைக்கழிப்பதில் என்ன நியாயம்? அவனுக்குரிய பணத்தை தர மறுப்பது என்ன நியாயம்? நம் அரசாங்கம் இந்த சட்டவிரோதப் போக்கை கண்காணிக்க வேண்டும். முடிந்தால் வைப்புநிதியை அரசின் நேரடிப் பார்வையின் கீழ் கொண்டு வரவேண்டும். தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய நிறுவனம் இல்லை மனிதர்களானாலும் சட்டத்திற்கு முன் நிறுத்தி தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைத்திட வழிசெய்ய வேண்டும்.