Tuesday, May 23, 2006

ஒரு தமிழ் சினிமா ரசிகனின் ஆதங்கம்...

நான் இந்த அமெரிக்கதேசம் வந்து இரண்டு ஆண்டுகள் ஆயிற்று. வந்த புதுதில் என் நண்பர் ஒருவர், பெரும்பான்மையான இந்தியப்படங்கள் எல்லாம் ஆங்கில படங்களின் பிரதியாக இருக்கும் இல்லையென்றால் ஆங்கில படங்களின் சாயலாவது இருக்கும் எனக் குற்றச்சாட்டை வைத்தார். அதிலும் குறிப்பாக நிறைய தமிழ்ப்படங்கள் ஆங்கிலப்படங்களின் பிரதி என்பது அவர் வாதம். நான் கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் ஆங்கில படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். அதுவும் எண்ணிக்கையில் மிகமிகக்குறைவு. அதனால் அன்று அவருடைய குற்றச்சாட்டு எனக்கு மிகுந்த அபத்தமாய் பட்டது.

இந்த இரண்டு வருடத்தில் கேபிள் டிவி, நூலகம், நெட்ஃப்ளிக்ஸ் உதவியால் குறைந்தது 250 ஆங்கிலப்படங்களாவது பார்த்து இருப்பேன். அவ்வப்போது திரையரங்கம் கூட செல்வதுண்டு. இப்போது என் நண்பரின் கூற்றில் ஓரளவு உண்மை இருப்பதாகவே கருதுகிறேன்.

அப்படியே முழுப்படத்தை(Man on Fire - ஆணை) பிரதி எடுப்பது ஒரு வகையென்றால், சில காட்சிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்வது இன்னொரு வகை. சமீபத்தில் பார்த்த கஜினி படத்தில், ஆங்கிலப்படத்திலிருந்த (Memento) கதாநாயகன் பாத்திரத்தை மட்டும் சுட்டு விட்டார்கள். இவர்களின் சுடும் திறனுக்கு முத்தாய்ப்பாய் 80 நிமிடம் ஒடுகிற ஒரு ஆங்கில படத்தின்(phone booth) முழுக்கதையை 20 நிமிட உச்சகட்ட காட்சியாக சமீபத்தில் வந்த சரத்குமார் படத்தில் பார்த்தேன். ஒரே ஆங்கில படத்தை இரண்டு மூன்று இயக்குநர்கள் ஓரே நேரத்தில் தமிழில் எடுத்த கூத்தெல்லாம் கூட உண்டு. இதில் என்னை மிகவும் பாதித்தது, நல்ல கலைஞன் என்று நாம் கருதும் கமலஹாசனின் சில படங்கள் (தெனாலி, அவ்வைசண்முகி) கூட ஆங்கிலப்படங்களின் பிரதியாக இருந்ததுதான்.

இதனால் எல்லா தமிழ்ப்படங்களின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகிறது. இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு நல்ல தமிழ் படம் பார்த்தாலும், இதே போல் ஏதாவது ஆங்கிலப்படம் வந்திருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது. இவர்கள் வெறும் ஆங்கிலப்படங்களை மட்டும் பிரதி எடுக்கிறார்களா இல்லை நமக்கு தெரியாத வேற்று மொழிப்படங்களையும் சுடுகிறார்களா என்ற சந்தேகமும் எழாமலில்லை.

இதுவும் ஒருவகையில் திருட்டுதான். திருட்டு விசிடிக்கு ஒருபுறம் போராடிக்கொண்டே இன்னொருபுறம் டிவிடியில் ஆங்கிலப்படங்களைப் பார்த்து காட்சி/கதை திருடுவது எந்த விதத்தில் நியாயம்? அடுத்தவனின் உழைப்பில் விளைந்ததை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனத் தன் பெயரைப் போட்டுக்கொள்வது அசல் ஏமாற்றுவேலை தானே? BIG எனும் ஆங்கிலப்படத்தை சுட்டு 'நியூ' எனும் படத்தை எடுத்தார் நம் எஸ்.ஜே. சூர்யா. ஆனால் அந்த திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே 'இது என் கற்பனையில் உருவான கதை' என்று கூசாமல் பொய் சொல்லியிருப்பார். கிரணின் குத்துப் பாட்டு வேண்டுமென்றால் அவரது கற்பனையில் உருவாகியிருக்கக்கூடும்

இதற்கான அவசியம் என்ன? நமக்கு திறமையில்லையா? நம்மில் திறமையானவர் இல்லையா? இல்லை வெள்ளைக்காரன் எங்கே தமிழ் படத்தைப் பார்க்கப்போகிறான் என்ற தைரியமா? வேண்டாமய்யா இந்த வேலை. உங்களை நம்புங்கள், உங்கள் திறமையை நம்புங்கள். உங்களால் நிச்சயம் உலகத்தரத்திற்கு திரைப்படங்களை எடுக்க முடியும். சொந்த உழைப்பில் நல்ல தரமான திரைப்படங்களை எடுத்து தமிழனின் திறமையை உலகத்துக்கு உணர்த்துங்களய்யா.

23 comments:

Nakkiran said...

சோதனைப் பின்னூட்டம்

Jeyapalan said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனாலும் இந்தப் பிரதி எடுக்கும் படங்களில் நல்ல படங்கள் வருவதை வரவேற்கலாம். கமலின் படங்கள் தெனாலி, அவ்வை சண்முகி நல்ல படங்களே.பிற மொழி இலக்கியங்களை நாம் மொழி பெயர்த்துப் பயன் பெறுவது போல் இதனையும் கருதலாம் என்பது என் கருத்து.
திருட்டு, உரிமை போன்ற பிரச்சனைகளைத் தயாரிப்பாளர் உறிதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

Nakkiran said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஜெயபால்.

Balamurugan said...

ஏன் உணர்ச்சி வசப்படறீங்க? ஆஸ்கார் அவார்டு நாமெல்லாம் வாங்க வேணாமா?

Anonymous said...

our people are slave of western culture.dont worry son about tamil films. worry about our tamil people. tamilnaddu tamilan cant speak tamil. they talk englishtamil. why do u worry about tamil films. i am very proud of ceylon tamils?.

Anonymous said...

u can copy dress, food, mams and dad culture. but u worry about tamilfilms. aha what a pity.

Anonymous said...

முக்தா சீனிவாசன் "துக்ளக்கில்" பல வருடங்களுக்கு முன் தொடராக நம்சினிமா பற்றி எழுதும் போது; தயாரிப்பாளர்கள்; குறிப்பிட்ட வேற்று மொழி; குறிப்பாக ஆங்கிலப் படப்பெயரைக் கூறி அப்படி? ஒரு கதை தரும்படி கேட்பார்களாம். ஏன் பாலச்சந்தரின் பல படங்கள் கூட "சுட்டது" தானாம். உலகத் திரைப்பட விழாக்களுக்கு இவர்கள் போவதே!!! சுடத்தானாம்.
ஆஸ்கார் -நமக்குப் பரிசு தராங்க!!!!!அதற்கு ஏன்? ஏங்கவேண்டும்.
யோகன் பாரிஸ்

சீனு said...

நேற்று DVD-ல் King Solomon's Mines படம் பார்த்தேன். அதில் கதாநாயகனையும், கதாநாயகியையும் காட்டுவாசிகள் ஒரு பெரிய பானையில் போட்டு சமைப்பார்கள். அவர்கள் அதில் இருந்து தப்பிப்பார்கள். அருமையான கற்பனை அது. அதைப் பார்க்காதவர்கள் தமிழில் வந்த சிறைச்சாலை படத்தைப் பாருங்கள். அதில் பிரபுவும், மோகன்லாலும் அப்படியே(!) அசத்தி இருப்பார்கள்.

ஹும்...என்ன சொல்ல?

Nakkiran said...

யோகன் பாரிஸ் மற்றும் சீனு அவர்களுக்கு,
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

துளசி கோபால் said...

.... இதுலே இருந்து ஒரு இன்ஸ்பிரேஷன் கிடைச்சது. படம் பண்ணோம்னு சொல்லிக்காம,
என்னவோ எல்லாமே இவுங்க சொந்த ஐடியா மாதிரி பேட்டி கொடுத்துக்கிட்டு, டைட்டில்லே விளம்பரம்
போட்டுக்கறாங்க பாருங்க, அதுதான் நியாயமா இல்லை.

மனுஷங்க எப்பவுமே ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் படிக்கிறது/கத்துக்கறது நல்லதுதான்.
நல்ல விஷயங்களைச் செய்கிறவங்களைப் பார்த்து நாமும் கொஞ்சம் நல்லது செய்யலாம்னு நினைச்சுச்
செய்யறவங்க இருக்காங்கல்லே.

ஆனான், அடுத்தவன் உழைப்பைத் திருடறதுதான் பேஜாரா இருக்கு.
அவுங்களுக்கு ஒரு நன்றியாவது போடலாம். ஹூம்...

Ramya Nageswaran said...

சமீபத்தில் Rituparno Ghoshன் Rain Coat பார்த்தேன். படம் முடித்த உடன் 'அட! இது ஓ. ஹென்றியின் Gift of the Magi கதை போலவே இருக்கே'ன்னு எனக்கு தோன்றிய அதே நேரம் "Inspired by O'Henry's Gift of the Magi" என்று திரையில் ஓடியது. துளசி அக்கா சொல்வது போல இந்த நேர்மை இருந்தா கூட போதும்.

கதைகள் மாதிரியே எவ்வளவு பாட்டுக்கள் சுடப்பட்டிருக்கு தெரியுமா? தேவா, சிற்பி போன்றவர்களில் பாட்டுக்கும் ஒரிஜினல் பாட்டுக்கும் லிங்க் கொடுத்து ஒருத்தர் வலைத்தளமே போட்டிருக்காரு. இப்ப பெயர் தான் ஞாபகம் வரலை.

Nakkiran said...

துளசி கோபால், Ramya Nageswaran மற்றும் Nagai Mu Rameshkumar அவர்களுக்கு,

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Unknown said...

நல்ல விஷ்யங்களை இறக்குமதி செயவது ஒரு வகையில் நம்ககும் நல்லது தானே

சீனு said...

//நல்ல விஷ்யங்களை இறக்குமதி செயவது ஒரு வகையில் நம்ககும் நல்லது தானே //

இறக்குமதிக்கும் திருட்டுக்கும் வித்தியாசம் வேறு இருந்து தொலைக்கிறதே, என்ன செய்ய?

வவ்வால் said...

வணக்கம் நக்கீரன்!

//இதில் என்னை மிகவும் பாதித்தது, நல்ல கலைஞன் என்று நாம் கருதும் கமலஹாசனின் சில படங்கள் (தெனாலி, அவ்வைசண்முகி) கூட ஆங்கிலப்படங்களின் பிரதியாக இருந்ததுதான்.//

ஆங்கில படங்களை பிரதி எடுக்கும் கலையை பரப்பியவரே கமல் தானே ,நீங்கள் என்னமோ கமல் தற்போது தான் அப்படி செய்தார் போல் ஆதங்கப்படுகிறீர்கள்! ராஜபார்வை ,butterflys are free பிரதி, நாயகன்,தேவர் மகன் இரண்டுமே god father பிரதி தான்,கமல் சுட்ட படங்களை விட சுடாத படங்க்களை விரல் விட்டு எண்ணி விடலாம்!

Nakkiran said...

வவ்வால் அவர்களுக்கு,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நீங்கள் சொல்வதில் உண்மையுள்ளது. ஆனால் என்செய்ய உண்மை சுடுகிறதே!!

Roopesh Chander said...

நாயகன், தேவர் மகன் எல்லாம் சுடல் என்றால் நீங்கள் எல்லாம்... நாயகன் ஒரு biopic - so நம்ம நிஜ மும்பை தாதா Mr. வரதராஜன் முதலியார் மரியோ பூசோவின் கற்பனை தாதா Mr. டான் கார்லியொனின் வாழ்கையை "பிரதி எடுத்தது" தவறுதான், இல்லையா? தேவர் மகனின் கதையின் கரு நம்மூர் சாதிச் சண்டைகள். தேவர் மகனுக்கும் காட்ஃபாதருக்கும் பொதுவான கதைக்கரு 'தாதா/தலைவனுக்குப் பின் எதிர்பாராத மகன் தாதா/தலைவன் ஆகிறான்' என்று நீங்கள் எடுத்துக்கொண்டால் அது ரொம்பப் பழைய கதை. ஷேக்ஸ்பியரின் கிங் லியரும் டோல்கியனின் அரதார்னும் அத்தகையவர்கள்தான். அவ்வை ஷண்முகியும் தெனாலியும் நகல்கள், சந்தேகமில்லை - actually Mrs.Doubtfire-ஐ விட அவ்வை ஷண்முகி மிகவே நன்றாய் இருந்ததென்பது என் கருத்து :). இதெல்லாவற்றிலும் அதிகாமெடி Patch Adams-ஐ நினைவுபடுத்தும் நம் முன்னாபாயை ஆங்கிலத்தில் படமாக்கும் உரிமையை 20th Century Fox பணம் கொடுத்து வாங்கியிருக்கிறது.

பெத்தராயுடு said...

//தேவா, சிற்பி போன்றவர்களில் பாட்டுக்கும் ஒரிஜினல் பாட்டுக்கும் லிங்க் கொடுத்து ஒருத்தர் வலைத்தளமே போட்டிருக்காரு. இப்ப பெயர் தான் ஞாபகம் வரலை. //

http://www.itwofs.com போய் பாருங்க...

//பிற மொழி இலக்கியங்களை நாம் மொழி பெயர்த்துப் பயன் பெறுவது போல் இதனையும் கருதலாம் என்பது என் கருத்து.
திருட்டு, உரிமை போன்ற பிரச்சனைகளைத் தயாரிப்பாளர் உறிதிப் படுத்திக் கொள்ள வேண்டும். //

நல்ல படங்களை மொழிமாற்றம் செய்ய ஆர்வமிருந்தால், மூலப்படத்தின் உரிமையாளரிடமிருந்து உரிமையைப் பெற்று தயாரிக்க வேண்டும்.

பெருவாரியான படங்களில், முழுப்படமோ, சில காட்சிகளோ, பாடல்களோ ஏதோ ஒன்று சுடப்பட்டதாகவே இருக்கின்றன.

ஏன் இவ்வாறு திருடுகிறார்கள் என்பதற்கு சில காரணங்கள் உள்ளன.

1. ஹாலிவுட் படங்களின் உரிமையைப் பெற கோடிக்கணக்கில் பணம் கொடுக்கவேண்டும்.

2. நம்நாட்டில் காப்புரிமைச் சட்டம் வலுவாக இல்லாதது.

3. வழக்கு போட்டாலும் நீண்டநாள் இழுத்தடிக்கலாம் என்ற தைரியம்.

4. பட நாயகனுக்கு கோடிக்கணக்கில் கொட்டத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள், நல்ல கதாசிரியருக்கு/கதைக்கு ஒரு 2,3 லட்சம் ரூபாய்கூட தர முன்வராதது.

Anonymous said...

The Telugu movie "Stalin" is a copy of the holly wood movie "Pay Forward" - Director Murugadoss

In Gajini to Surya and Asin love schenes are copied from a Malayalam movie

Anonymous said...

The Telugu movie "Stalin" is a copy of the holly wood movie "Pay Forward" - Director Murugadoss

In Gajini to Surya and Asin love schenes are copied from a Malayalam movie

Anonymous said...

தெனாலி, அவ்வை சண்முகி மட்டுமில்லீங்க! ராஜபார்வை, மகளிர் மட்டும் உள்பட பல கமல் படங்கள் ஹாலிவுட்டிலிருந்த்து அடித்த ஈயடிச்ச்சான் காப்பி. அது புரியாமல் உயிர் மண்ணுக்கு உடல் தலைவருக்குன்னு சுத்துற ரசிகர் பட்டாளத்தை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது!

Anonymous said...

சுடுபவர்களுக்குள் மணிரத்தினம்/கமல் கெட்டிக்காரர்கள், படித்தவர்களாச்சே!!!
ஆங்கிலப்படத்தில் சுட்டால் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று ஸ்பானிய மொழிப்படங்களைச் சுடுகிறார் மணிரத்தினம்!!!!!
இவரின் 'ஆய்த எழுத்து', மெக்சிக்கோ படமான 'அமோரேஸ் பெர்ரோஸ்' (Amores Perros) இலிருந்து சுட்டது! அதில் சிலகாட்சிகளில் 'சிற்றி ஒஃப் காட்' (City of God) என்கின்ற பிறேசில் நாட்டுப்பட சாயலும் உண்டு!

அரை பிளேடு said...

நம்மள மாதிரி இங்கிலீஸ் தெரியாத ஆசாமிங்களுக்கு இவங்க பண்ற சர்வீஸை குத்தம் சொல்றியே நைனா..