Monday, May 22, 2006

தொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்


Thursday April 20, 2006


ஒருவழியாக பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்களின் 7 நாள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. வங்கி ஊழியர்கள் அவர்களின் ஓய்வூதியத்திற்காக போராடி வெற்றியும் பெற்றுள்ளனர். மிக்க மகிழ்ச்சி. ஆனால் இந்த ஏழு நாட்களும் மக்கள் பட்ட இன்னல்கள் எத்தனை. தோராயமாக 1,00,000 கோடி மதிப்புள்ள ட்ரான்ஸாக்ஷன்கள் நின்று போனதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பெருநகரங்கள் முதல் சிறு கிராமம் வரை இந்த வங்கி கிளைகள் இயங்குவதால், இந்த வேலை நிறுத்தம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழை பொதுமக்கள் முதல் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள வழியின்றி ஓய்வு பெற்றவர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள், மாத வருமானம் பெறுபவர்கள், மத்திய மாநில அரசு நிர்வாகங்கள் மற்றும் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் ஒவ்வொரு முறையும் தங்கள் உரிமையை நிலை நாட்ட வேலை நிறுத்தம் செய்யும் போதும் பாதிக்கப்படுவது பொதுமக்களே. இதற்கு தொழிற்சங்கங்கள் மட்டுமன்றி மத்திய மாநில அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும். ஒரு தொழிற்சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிடும் போது அதை தவிர்க்க தேவையானவற்றை அரசு மேற்கொள்ள வேண்டும். அப்படி தவிர்க்க முடியாமல் போனால், அதற்கான மாற்று வழிகளை உத்தேசித்து பொது மக்களுக்கு இன்னல் நேராமல் காக்க வேண்டும். நியாயமான கோரிக்கைகளை உடனடியாக ஏற்கவும், இல்லாத பட்சத்தில் வேலை நிறுத்தத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கவும் அரசு தயங்க கூடாது. பொது மக்களை இன்னலிருந்து காப்பாற்றுவதே ஒரு அரசின் தலையாய கடமையாகும். ஆனால் இப்போதெல்லாம் வேலை நிறுத்தம் ஆரம்பித்து ஓரிரு வாரம் அவதியுற்று பின்னர் பிரச்சனை தீர்க்கப்படுவது வழக்கமாகியுள்ளது.

தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தப் போரட்டத்தை, அரசாங்கத்தை மிரட்டும் கருவியாக பயன்படுத்தக் கூடாது. பேருந்து வேலை நிறுத்தத்தின் எப்படி ஒரு வங்கி ஊழியன் பாதிக்கப்படுகிறானோ, அப்படியே வங்கி வேலை நிறுத்ததின் போது பேருந்து ஊழியன் பாதிக்கப்படுகிறான் என்பதை உணர வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு, தமிழகத்தில் பேருந்து பணியாளர்கள் போனஸ் தொகையை உயர்த்த வேண்டி, சரியாக தீபாவளிக்கு ஒரு சில தினம் முன்பு வேலை நிறுத்தப்போரட்டத்தை ஆரம்பித்தார்கள். அரசாங்கத்தை மிரட்டி பணியவைக்கவே இப்படி தீபாவளிக்கு முன் இப்போரட்டத்தை ஆரம்பித்தார்கள். இப்படி அரசை மிரட்டும் எண்ணத்துடன் அறிவிக்கப்படும் போராட்டங்கள் பொது மக்களின் ஆதரவை இழக்கிறது. தொழிற்சங்கங்கள் தாமும் சமுதாயத்தின் ஒரு அங்கம் என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். ஒவ்வொரு முறையும் வேலை நிறுத்தப்போராட்டம் அறிவிக்கும் போதும், தம் சகோதர, சகோதரிகளை எவ்வளவு கொடுமைகளுக்கு உள்ளாக்கப் போகிறோம் என்பதை உணர வேண்டும்.

வேலை நிறுத்தப் போரட்டங்களுக்கும், அதனால் ஏற்படும் இன்னல்கள் மற்றும் இழப்புகளுக்கு அரசாங்கமும், தொழிற்சங்கங்களும் மட்டுமே காரணமாக இருக்க, எந்த விதத்திலும் சம்பந்த படாத பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவது துரதிஷ்டவசமானது. அரசாங்கமும், தொழிற்சங்கங்களும் நினைத்தால் நிச்சயம் வேலைநிறுத்தம் இல்லா இந்தியாவை உருவாக்க முடியும்.

5 comments:

வெளிகண்ட நாதர் said...

//வேலை நிறுத்தப் போரட்டங்களுக்கும், அதனால் ஏற்படும் இன்னல்கள் மற்றும் இழப்புகளுக்கு அரசாங்கமும், தொழிற்சங்கங்களும் மட்டுமே காரணமாக இருக்க, எந்த விதத்திலும் சம்பந்த படாத பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவது துரதிஷ்டவசமானது.// இந்த நிலை மாறினா தான் நாம் உருப்பட முடியும். ஒரு பொதுவுடமை உணர்வு இல்லேன்னா, இன்னும் பல வருஷம் கஷ்டபட்டுக்கிட்டிருக்க வேண்டியது தான்!

Nakkiran said...

இப்பதிவு சில நாட்களுக்கு முன் எழுதி கொஞ்சம் தாமதமாக பதிவு செய்யப்பட்டது. இது இப்போது வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களுக்கும் பொருந்தும். அவர்களின் போராட்டத்திற்கான காரணம் சரியோ தவறோ.. அதைப்பற்றி விவாதம் இல்லை. ஆனால் மருத்துவர் போராட்டம் எத்தனை உயிர்களைக் குடிக்கும். அதற்கு யார் பொறுப்பு. அரசாங்கமா? இல்லை மருத்துவர் சங்கமா?

Unknown said...

நம்ம நாட்டுல இதுதாங்க பிரச்சனை.அரசு ஊழியருக்கு ஏராளமா சலுகை குடுத்து அவங்களை போராட தூண்டுவதே தொழில்சங்கங்கள் தான்.அரசு ஊழியர் போராட்ட உரிமையை ஒரு 10 வருஷத்துக்கு தடை செய்து ஆட்குறைப்பு செஞ்சா தான் இந்தியா உருப்படும்னு எனக்கு தோணுது

Nakkiran said...

சோதனைப் பின்னூட்டம்

Nakkiran said...

ஒரு வழியாக டெல்லியில் மருத்துவர் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. என்ன வழக்கம் போல் மக்கள் தான் மூன்று வார காலம் அவதிக்குள்ளானர்கள். நான் சொல்லியபடி கொஞ்ச நாள் அவதியுற்ற பின் தான் இந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.