Wednesday, March 21, 2007

மருத்துவச் சுற்றுலா - 1

இந்தியா மென்பொருள் துறையில் ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கிறது. BPO துறையிலும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. என்னதான் சீனா மிரட்டிக் கொண்டிருந்தாலும் இத்துறைகளில் அது இந்தியாவை தோற்கடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல, தலையால் தண்ணி குடிக்க வேண்டியிருக்கும். இப்போது இந்தியாவின் அடுத்த இலக்கு மருத்துவச் சுற்றுலா. கடந்த 2005 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 500,000 அமெரிக்கர் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக வெளிநாடு சென்றுள்ளனர். இத்துறை மிகப்பிரமாண்டமான முறையில் முன்னேற்றம் காணப்போகிறது. இதிலும் முன்னணியில் இருப்பது இந்தியாதான். இத்துறையில் நமக்கு போட்டி சீனா அல்ல. சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற மற்ற சிறு ஆசிய நாடுகள் தான்.

அமெரிக்காவில் மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லதாவர் எண்ணிக்கை பல மில்லியன்களைத் தாண்டும். அவர்களுக்கெல்லாம் அமெரிக்காவில் அறுவை சிகிச்சையெல்லாம் கனவில் தான் நடக்கும். இணையத்தில் படித்த ஒரு எடுத்துக்காட்டு, அமெரிக்காவில் வாழும் 53 வயதான தச்சர் ஒருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய சுமார் 250,000 அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று கூறியுள்ளனர். அவருக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லை. அவரிடம் நிச்சயம் அவ்வளவு பணமில்லை. உடனே இந்தியாவிற்கு வந்து புதுடெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தங்கி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். டெல்லி மற்றும் தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்துவிட்டு ஊர் திரும்பினார். அவருக்கு அதற்கான செலவு 20,000 அமெரிக்க டாலர்கள். சுமார் 10 மடங்கு அமெரிக்க கட்டணத்தை விட குறைவு.
இதுவரை நிறைய அமெரிக்கர்கள் காஸ்மடிக் அறுவை சிகிச்சைகளுக்காக பிலிப்பைன்ஸ் மற்றும் பாங்காக் ஆகிய இடங்களுக்கு பறந்து கொண்டிருந்தார்கள். இனி மற்ற உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளுக்கும் அங்கு செல்வதற்குத் தயாராகிவிட்டார்கள்.

பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, சலுகையாக மெடிக்கல் இன்சூரன்ஸ்க்கான பிரீமியமும் அந்நிறுவனங்களே கட்டிவிடும். கடந்த ஆறு ஆண்டுகளில் இதற்காக அந்நிறுவனங்கள் செலுத்தும் தொகை சுமார் 85% உயர்ந்துள்ளதாம். இதன் மூலம் இன்சூரன்ஸ் கம்பெனிகள் கொள்ளை இலாபம் பார்த்து வருகின்றன. இதனால் சில நிறுவனங்கள் மருத்துவச் சுற்றுலாவை பணியாளர்களுக்கு முன்னிறுத்துகின்றனர். இந்த வகையை தேர்ந்தெடுக்கும் பணியாளர்கள், ஏதேனும் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தால் அவர்கள் இந்தியா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக அவர் குடும்பத்தில் ஒருவர் அவருடன் பயணிக்கலாம். இம்முறை தேர்ந்தெடுக்கும் பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையும், ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்கப்படுகிறது. இதனால் இந்நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பிரீமியத்தொகை கணிசமாக குறையும்.

இதுவரை மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லதாவர் மட்டுமே வெளிநாடுகளுக்குச் சென்று இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார்கள். இனி இது போல் பெரும் நிறுவனங்களில் வேலை செய்வோறும் மருத்துவச் சுற்றுலாவிற்காக வெளிநாடுகளுக்குச் செல்வார்கள். இப்பொழுதே ஆண்டிற்கு சுமார் 200,000 வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இது மேலும் பல மடங்காக பெருகும் என்பது நிபுணர்கள் கருத்து.

தொடரும்

1 comments:

சேதுக்கரசி said...

எங்கேப்பா ஸ்டெம் செல்லுக்கு அப்புறம் தொடரைக் காணோமே (பதிவையே காணோமே :-))ன்னு பார்த்தேன்... நல்ல பதிவு :-)