Monday, March 05, 2007

இன்னும் ஒரு வருடம் ஆகுமாம்...

காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வந்த போது, அட தீர்ப்பு சாதகமோ பாதகமோ எப்படியிருந்தாலும் சரி, முதலில் வந்த தீர்ப்பை நிறைவேற்றினால் போதும். சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று சொல்லுபவரிடம் இருந்து முதலில் 180TMC ஆவது வாங்கிடலாம், மிச்சத்தை அப்புறம் பார்த்துக்கலாம் என்று எண்ணினேன். அதற்கு முதலில் நடுவர் மன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டும் என்றார்கள். சரி அதற்கென்ன நம்மாட்கள் மத்திய அரசில் இருக்கிறார்களே சீக்கிரம் ஓரிரு மாதங்களில் முடித்து விடுவார்கள் என்று எண்ணினேன்.

இன்றைக்கு தினமலரில் வந்த செய்தியை பார்த்து அதிர்ந்து போனேன். நமது மத்திய நீர் வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ், நடுவர் மன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிட இன்னும் ஓராண்டிற்கு மேலாகும் என்று சொல்கிறார்.

முதலில் மேல்முறையீடு செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் 90 நாட்கள் அவகாசம் உள்ளதாம். இன்றைய தேதிக்கு தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களுமே மேல்முறையீடு செய்ய போவதாக அறிவித்துள்ளன. இவற்றின் மீது முடிவெடுக்க நடுவர் மன்றத்திற்கு ஓராண்டு வரை அவகாசம் உள்ளதாம். அதன் பிறகே, தீர்ப்பை கெஜட்டில் வெளியிடும் பிரச்சனை வருமாம். அதாவது அதன் பிறகு கூட இத்தீர்ப்பை கெஜட்டில் வெளியிடுவோம் என்று சொல்லவில்லை. 'கெஜட்டில் வெளியிடும் பிரச்சனை ' வரும் என்று தான் சொல்கிறார். சட்டப்படி தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை போலும்.

ஏற்கனவே 18 வருடங்களாக (ஏதோ இல்லாததை கண்டுபிடிப்பதை போல) ஆராய்ந்து ஏதோ தீர்ப்பை சொன்னார்கள். அதற்கு மேல் என்னய்யா மேல்முறையீடு.. ஒரு வருடம்... அப்படி 18 வருடங்களாக கண்டுபிடிக்காததை எப்படி இந்த ஒரு வருடத்தில் கண்டறிவீர்கள். சரி அப்படியே ஒரு வருடத்தில்(?) ஏதாவது முடிவெடுத்தால் அதை செயல்படுத்துவார்களா என்றால் அதற்கும் உத்தரவாதம் இல்லை. என்ன எழவு இது எனக்கும் ஒன்றும் புரியவில்லை. இன்னும் எத்தனை வருடம் தான் தமிழன் காத்துக்கிடப்பான். இதையெல்லாம் பார்த்தால் சில சமயம் நமது நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் மீது ஒருவிதமான வெறுப்புணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை.

0 comments: