Thursday, March 01, 2007

சென்னையில் ரியல் எஸ்டேட்

நான் 1999 மத்தியில் பொறியியல் படிப்பை முடித்து விட்டு எல்லோரையும் போலவே சென்னைக்கு வேலை தேடி வந்தேன். அப்போது தான் என் தந்தை அவரின் ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். அவருக்கு அப்பொழுது கிடைத்த மொத்த பணம் சுமார் 2 1/2 இலட்சம் ரூபாய். சரி வெறும் 5 அல்லது 6 % வட்டிக்கு வங்கியில் பணத்தை போட்டு வைப்பதை விட சென்னையில் எங்காவது வீட்டுமனை வாங்கலாமே என்று என் தந்தை எண்ணினார். சென்னையில் உள்ள ஒரு உறவினர் உதவியோடு வீட்டுமனை தேடினோம்.

சென்னை கொளத்தூரில் எங்கள் உறவினர் இருந்ததால் கொளத்தூரை சுற்றி தேடினோம். கையில் இருந்த பணத்திற்கு, பேரூந்து நிறுத்ததிலிருந்து 2 கி.மீ தூரம் வரை உள்ளே சென்றால் கூட இடம் எதுவும் கிடைக்கவில்லை. 4 இலட்சத்திற்கு குறைவாக ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. கடைசியாக குறைந்த பட்சமாக ஊரிலிருந்து அதிக தொலைவில் 3 1/2 இலட்சம் ரூபாய்க்கு ஒரு இடம் கிடைத்தது. ஆனால் தரகர் கட்டணம் மற்றும் இடம் பதிவு செய்யகட்டணம் என்று 4 இலட்சம் ஆகும் என்றதால் என் தந்தை நிலம் வாங்கும் ஆசையையே விட்டு விட்டார்.

2004ல் எனக்கு அமெரிக்கா வர வாய்ப்பு கிடைத்தது. அதற்கு ஒரிரு மாதங்கள் முன்பு மீண்டும் நிலம் வாங்கும் ஆசை எழுந்தது. போன தடவை சென்னை எல்லைக்குள்ளேயே பார்த்ததால் தான் நம்மால் முடியவில்லை என்றெண்ணி இந்த தடவை பார்த்தது சென்னையின் புற நகர் பகுதியான தாம்பரத்தில். தாம்பரம் பேரூந்து நிலையத்திலிருந்து முடிச்சூர் ரோடில் சுமார் 2லிருந்து 3 கி.மீ உள்ளே சென்று பார்த்தோம். விலை அப்போது 9 இலட்சம். எனக்கு தலைசுற்றியது. அமைதியாக விமானம் ஏறி அமெரிக்கா வந்து சேர்ந்தேன்.

கிட்டதட்ட 1 1/2 ஆண்டுகள் கழித்து 2005 ஆம் ஆண்டு இறுதியில் என் உறவினரிடம் தாம்பரத்தில் பார்த்த அதே வீட்டுமனையின் விலையைப் பற்றி விசாரித்தேன். அதன் விலை இப்போது 17 இலட்சம் என்றார். தாம்பரம்-வேளச்சேரி சாலை இப்பொழுது மிகவும் பிரபலமாக உள்ளது. அந்த சாலையில் விலை நிலவரம் என்ன என்று விசாரித்தேன். சேலையூரில் 16 முதல் 17 இலட்சம், மேடவாக்கத்தில் 18 முதல் 20 இலட்சம் என்றார். விக்கித்து போய் நின்றேன்.

கிட்டதட்ட 3 வருடங்களுக்கு பிறகு 2006 டிசம்பரில் (ஆம் இரண்டு மாதங்களுக்கு முன்னால் தான்) இந்தியாவிற்கு ஒரு மாத விடுப்பில் வந்தேன். பெற்றோர், உறவினர் ம்ற்றும் நண்பர்களுடன் இனிமையாய் 20 நாட்களை கழித்தேன். உண்மையிலேயே சென்னையில் வீட்டு மனை இந்த விலை விற்கிறதா? இல்லை நம் மக்கள் சும்மா சொல்கிறார்களா என என்க்கு சந்தேகம். ஏனென்றால் இவர்கள் சொல்லும் விலைக்கு பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் சாஃப்ட் வேர் இஞ்சினீயர்களாலே வாங்க முடியாதே. கடைசி பத்து நாட்களில் களத்தில் நேரடியாக குதித்து நான் அறிந்த உண்மை விலை நிலவரம்

ஒரு கிரவுண்ட் (2400 சதுர அடி) வீட்டு விலை

மதுரவாயல்- 35 இலட்சத்திற்கும் மேல்
மேடவாக்கம் - 30 இலட்சத்திற்கும் மேல்
தாம்பரம் - 30 இலட்சத்திற்கும் மேல்
கீழ்கட்டளை - 35 இலட்சத்திற்கும் மேல்
பள்ளிக்கரனை- 35 இலட்சத்திற்கும் மேல்
கூடுவாஞ்சேரி - 10 முதல் 12 இலட்சம்
இரும்புலியூர் - 28 இலட்சம்
பெருங்களத்தூர் - 25 இலட்சம்

இது 2006 டிசம்பர் நிலவரம் இப்பொழுது இன்னும் விலை ஏறி இருக்கலாம். உங்களுக்கு எப்படியோ... எனக்கு ஸ்..ஸ்..ஸ்... கண்ணை கட்டுதே...



இன்று மே, 04, 2007


கீழே உள்ள படம், இன்று தினமலரில் வந்துள்ளது


இந்த மேம்பாலம் அமைந்தால் இன்னும் விலை உயரும் அபாயம் உள்ளது. தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு கிரவுண்டின் இன்றைய விலை 45 இலட்சம்.

7 comments:

துளசி கோபால் said...

நீங்க சொல்றது ரொம்பச் சரி. இப்பெல்லாம் வீட்டுமனைகள் தீ பிடிச்ச விலை!

முகளிவாக்கம் அருகில் அரைகிரவுண்டு இடத்தில் புது வீடோடு சேர்த்து 42 லட்சம்.
வாங்கணுமான்னு தோணிப்போச்சு. ஏன்னா தி.நகருக்குப் போயிட்டு வரணுமுன்னா
ஊர்ப்பயணம் போல இருக்கும்:-)

Santhosh said...

உங்களுக்கு கண்ணை கட்டுது எனக்கு உலகம் சுத்துது.

வடுவூர் குமார் said...

ரூபாய்= இந்தோனிஷியா ரூபாய் ஆகிறது.கூடிய விரைவில் கோடி எல்லாம் தெருக்கோடியில் கிடைக்கும் என்று என் நண்பன் சொன்னான்.
பேசாமா பெருங்களத்தூருக்கும் ஸ்ரி பெரும்புதூருக்கு இடையில் நிறைய நிலம் இருக்கு.2.5 லட்சம் தான் ஆகும்.மீதி பணத்தில் நாமளே ஒரு ரயில் வண்டி வாங்கி டவுனுக்கு விட்டு விடலாம்.
வாழ்கை சுவாரஸ்யமாக போகிறது.
:-))

Nakkiran said...

துளசி கோபால் , சந்தோஷ் aka Santhosh , வடுவூர் குமார்...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Nakkiran said...

தாம்பரம் பகுதியின் மேம்பால வரைபடம் இணைக்கப் பட்டுள்ளது.

ரவி said...

இன்னும் பத்துவருடம் கழித்து பார்க்கவே வேண்டாம்...உலகம் அழியப்போவுது...எல்லாரும் உள்ள போவப்போறோம்...

koothanalluran said...

நம்பினால் நம்புங்கள்

1991 ல் தி.நகர் நார்த் உஸ்மான் தெருவில் (Opposite to Sowbagya showroom) ஒரு பிளாட் வாங்கினேன் 9 லட்சம் பத்திரச் செலவு எல்லாம் சேர்த்து 9.50 லட்சம் ஆனது. தற்போது என் வீட்டை 54 லட்சத்திற்கு கேட்கிறார்கள் 2 B/R Hall 2 balcony area 1100 sq ft