Friday, May 04, 2007

இந்த வாரம் ஓ பக்கங்கள்.. ஞாநி

கடந்த சில நாட்களில் நடந்த சில விஷயங்களில் எனக்குண்டான எரிச்சல், திரு.ஞாநி அவர்களின் கட்டுரையிலும் இருப்பதால் அதை அப்படியே வெட்டி ஒட்டியுள்ளேன்....

-------------------------------------------------------

ஏன் தமிழா, ஏன்? அன்புள்ள தமிழா,
‘தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்று நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை எதை மனதில் கொண்டு எழுதியிருந்தபோதும், நடைமுறையில், நம் குணம்தான் என்ன?
எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் ஓர் இனம் என்று நமக்கு ஒரு பெயர் வந்துவிட்டது. சிங்களவர் நம்மவரைத் துன்புறுத்தினாலும் உணர்ச்சிவசப்படுகிறோம். சிம்பு & நயன்தாரா பிரிந்தாலும் உணர்ச்சிவசப்படுகிறோம்.

உணர்ச்சிகள் இல்லாமல் மனிதர்கள் இருக்க முடியாதுதான். ஆனால், உணர்ச்சி மட்டுமே மனிதர் அல்ல. பகுத்தறியக் கற்றுக் கொள்ளும்படி முதுமையிலும் மூத்திரக் குழாயும் பக்கெட்டுமாகத் திரிந்து திரிந்து பிரசாரம் செய்தாரே பெரியார், அவர் சிலையை எவரோ சிறுமதியினர் உடைத்தாலும் உணர்ச்சிவசப்படுகிறோம். பெரியார் சொன்ன பகுத்தறிவின்படி பார்த்தால், அவரது சிலை உடைப்பை ஒளிந்திருந்து செய்வோரின் அற்ப செயல், பெரியார் அப்படி என்னதான் சொன்னார் என்று அவர் கருத்தை மறந்துவிட்ட தமிழருக்கும், அறியாத தமிழருக்கும் மறுபடியும் மறுபடியும் அவர் கருத்தை நினைவுபடுத்தத்தான் தன்னையறியாமலே உதவுகிறது.
எதிலெல்லாம் உணர்ச்சிவசப்பட வேண்டுமோ, அதில் விட்டுவிடுகிறோம். எப்போதெல்லாம் அறிவைப் பயன்படுத்த வேண்டுமோ, அப்போதும் நழுவவிடுகிறோம். எப்போதெல்லாம் உணர்ச்சிவசப்பட்ட மறு நொடியில் அதை ஒதுக்கிவிட்டு, அறிவைக்கொண்டு உணர்ச்சியைத் தூண்டிய பிரச்னையைத் தீர்க்க வேண்டுமோ, அதையும் செய்யத் தவறுகிறோம்.
மூன்று கொலைகள் அண்மையில் நடந்தன. கொல்லப்பட்ட மூவரும் தமிழர்கள். செய்தி அறிந்ததும் நாம் என்ன செய்தோம் என்று பார்ப்போம்.

ஒருவர் அமெரிக்காவில் கொல்லப்பட்டார். இருவர் மலேஷியாவில் கொல்லப் பட்டார்கள். தமிழ்நாட்டில் பத்திரிகை வாசிக்கும் பழக்கமும் டி.வி. பார்க்கும் பழக்கமும் உள்ள தமிழர்களிலேயே பெரும் பாலோருக்கு அமெரிக்காவில் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் வெறிகொண்ட கொரிய மாணவன் ஒருவனால் கண்மூடித் தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட 33 பேரில் ஒருவர் தமிழரான பேராசிரியர் லோகநாதன் என்ற செய்தி தெரியும். ஆனால், மலேஷியாவில் இருவர் கொல்லப்பட்ட செய்தி அந்த அளவு கவனம் பெற வில்லை.
லோகநாதன் கொல்லப்பட்ட ஏப்ரல் 16&க்கு ஒரு மாதம் முன்பு, திருவாரூர் அருகிலுள்ள முத்துப்பேட்டையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் சரவண காந்தி, தான் 12 வருடங்களாக வேலை பார்த்து வந்த மலேஷியா வில், மார்ச் மாதத்தில் மர்ம மான முறையில் இறந்தார். அவரின் உடலை இந்தியா வுக்குக் கொண்டுவர அவரது தாயும் உறவினர் களும் படாதபாடு பட்டார்கள். உடலில் காயங்கள் இருந்ததால், அதைப் பெற மறுத்து மார்ச் 15 நள்ளிரவு முழு வதும் முத்துப்பேட்டை காவல் நிலையத்தின் வாசலில் முற்றுகைப் போராட்டம் செய் தார்கள். மறுநாள் காலை, உயர் அதிகாரிகள் வந்து பிரேதப் பரிசோதனை செய்ய ஒப்புக்கொண்ட பிறகுதான், உள்ளூர் மக்கள் அமைதியானார்கள். இன்னும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வரவில்லை.
லோகநாதன் மறைந்து பத்து நாட்கள் கழித்து, மலேஷியாவில் ஒரு காட்டுப்பகுதியில் கண் டெடுக்கப்பட்டார் கும்பகோணத்தைச் சேர்ந்த 25 வயது கணேஷ் குமார். சுமார் 20 நாட்களாக அவருடைய முதலாளியால் சங்கிலியால் கட்டிப் போடப் பட்டு, சோறு தண்ணியில்லாமல் கொடுமைப்படுத்தப்பட்டவர் அவர். காட்டில் வீசி எறியப் பட்ட அவரை சில கிராமவாசி கள் கண்டெடுத்து மருத்துவ மனையில் சேர்த்தார்கள். அங்கே போலீஸிடம் வாக்குமூலம் கொடுத்த கணேஷ்குமார் இரு நாட்கள் கழித்து சிகிச்சை பயனின்றி ஏப்ரல் 27&ம் தேதி இறந்தார்.

இறந்த மூவரும் தமிழர்கள் தான். எனினும் வெவ்வேறான வாழ்க்கைப் பின்னணியும், பார்வை யும் கொண்டவர்கள். லோகநாதன் இங்கே உயர் கல்வி பெற்று, விரும்பி வெளிநாடு சென்று, அந்த கல்விச் சூழலுடன் முப்பதாண்டுகள் தன்னை ஐக்கியப் படுத்திக்கொண்டு அங்கேயே வாழ்ந்து, தன் மரணத்துக்குப் பின் அங்கேயே புதைக்கப்பட வேண்டும் என்று விரும்பியவர். எந்த மரணமும் நம் அஞ்சலிக்குரியதுதான்; எந்தக் கொடூர மரணமும் நம்மை வேதனைப் படுத்துவதுதான் என்பதற்கப்பால், தமிழரின் அறிவுத்திறனை உலகுக்கு உணர்த்தியவர் களில் ஒருவர் என்றவிதத்தில் அவருடைய அகால மரணத்துக்கு நாம் நிச்சயம் வருந்துவது சரியே.
அதே சமயம், சரவண காந்தியும் கணேஷ் குமாரும் வெளிநாடு செல்ல வேண்டுமென்று திட்டமிட்டு அதற்காகப் படித்து, உழைத்து, சென்று, அங்கேயே வாழ விரும்பியவர்கள் அல்ல. காவிரி பொய்க்காமல் இருந்திருந்தால், தங்கள் கிராமங்களிலேயே வாழ்க்கை முழுக்க அவர்கள் இருந்திருக்கக்கூடும். பஞ்சம் பிழைக்கவும், எப்படியேனும் தங்கள் ஏழ்மைக் குடும்பங்களைக் கரையேற்றவும் கருதி, கந்து வட்டிக்குக் கடன் வாங்கி, கொத்தடிமை வேலை களுக்காக மலேஷியா சென்ற தமிழர்கள் அவர்கள்.
சரவண காந்தியைப் போலவும் கணேஷ் குமாரைப் போலவும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மலேஷியாவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் பஞ்சம் பிழைக்கப் போய்க்கொண்டு இருக்கி றார்கள். இதில் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருப்பது தமிழர்கள்தான்.
இப்படிச் சென்றவர்களில் வருடந்தோறும் பலர் பிணங்களாகத் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். அம்மாக்களும் மனைவிகளும் அவர்களை அனுப்புவதற்குபட்ட பாட்டுக்குச் சற்றும் குறையாமல் அவர்களுடைய பிணங்களை இங்கே திரும்பக் கொண்டுவருவதற்கும் பட வேண்டியிருக்கிறது.
எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் தமிழகம் இதற்கு என்ன செய்கிறது? லோகநாதனின் மறைவுக்காக சட்டமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்படு கிறது. உடனடி பாஸ் போர்ட்டும் விசாவும் அளிக்கும் நியாயமான நடவடிக்கைகளுடன் நிறுத்திக்கொள்ளாமல், பொருளாதார வசதியுள்ள அவருடைய குடும்பத் தினர் அமெரிக்கா சென்று இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக அரசு இலவச விமான டிக்கெட்டுகள் வழங்குகிறது. சரவண காந்திகளின் குடும்பமோ காவல் நிலையத்துக்கு வெளியே மறியல் செய்து போராடி நீதி கேட்க வேண்டியிருக்கிறது.
ஏன் நாம் இப்படி இருக்கிறோம்? பேராசிரியர் லோகநாதனின் பரிதாபத்துக்குரிய கொலை & ஒருவகையில் விபத்துதான். ஆனால், தொழிலாளிகள் சரவண காந்தி, கணேஷ் குமார் மரணங்கள் விபத்துக்கள் அல்ல, திட்டமிட்ட கொலைகள். உழைப்பை உறிஞ்சிக்கொண்டு நம் தொழிலாளர் களைச் சக்கையாக்கி தூக்கி எறியும் வெளிநாட்டு முதலாளிகளைக் கேள்வி கேட்கவும் தண்டிக்கவும் நமது அரசாங்கங்களுக்கு திராணியில்லாத தால் தொடர்ந்து நிகழும் கொலைகள்.
உள்ளூரில் வேலைக்கு உத்தரவாதம் தரத் தவறிய நமது அரசுகள், வெளிநாடு செல்லும் தமிழருக்கு உயிருக்கேனும் உத்தரவாதத்தை தர வேண்டாமா? அங்கே உயிரிழப்போரின் இறுதிச் சடங்கை கண்ணியமாக சொந்த மண்ணில் நடத்த வேண்டு மென்று விரும்பும் ஏழைக் குடும்பங் களுக்கு அரசாங்கம் உதவிகள் செய்யாவிட்டாலும் தொல்லைகளே னும் தராமல் இருக்க முடியாதா?
வசதியற்றோர், வசதி படைத்தோர் இருவருக்கும் இடையே இருக்கும் இடைவெளியின் உறுத்தல் தானே, தென் கொரிய மாணவன் சோ&செங்& ஹ¨வை கொலை வெறிய னாக மாற்றியது? பென்ஸ் கார்களும் வைர நெக்லெஸ்களும் குவித்த பிறகும் உங்கள் பேராசை தணியவில்லையே என்று இரு கலாசாரங்களுக்கிடையே சிக்கித் தவித்த அவன் குரல் ஓல மிட்டதே.
ஏழைக்கொரு நீதி பணக்காரருக்கொரு நீதி என்பதை வாழ்க்கையில் மட்டுமல்ல, மரணத்திலும் பின்பற்றும் சமூக அநீதிக்கெதிராக அல்லவா தமிழா, நாம் உணர்ச்சிவசப்பட வேண்டும்?
வேட்பு மனுதாக்கல் செய்யும் போது, லட்சமும் கோடியுமாகச் சொத்துக் கணக்கு காட்டி, தேர்தல்களில் சில கோடிகளைச் செலவிட்டு, பதவியில் அமர்ந்திருக்கும் எம்.எல்.ஏ&க்களுக்கு, அரசு சென்னையில் இலவச வீட்டுமனை தர வேண்டும் என்று வெட்கமில்லாமல் அவர்கள் பேசும்போது, ஏன் தமிழா, நாம் உணர்ச்சிவசப்படுவதில்லை?
‘பருத்திவீரன்’ பட கிளைமாக்ஸ§க்குக் கண்ணீர் வடிக்கும் தமிழா... கணேஷ் குமார், சரவண காந்திகளுக்காகக் கண்ணீர் சிந்துவது எப்போது?
வருத்தத்துடன்,
கையாலாகாத ஒரு சக தமிழன்.

9 comments:

SathyaPriyan said...

இதே கருத்தை கொண்டு நான் வேறொரு பதிவில் எழுதிய பின்னூட்டம்.
------------------------------------------------------
பேராசிரியர் லோகனாதன் அவர்களின் மறைவு மிகுந்த கவலை அளிக்கிறது. அதே நேரத்தில், அவர் ஒரு சராசரி NRI அவ்வளவே. அவரது இறுதி ஊர்வலத்தில் கலத்து கொள்வதற்காக பல லட்சம் ரூபாய்களை தமிழக அரசு செலவு செய்வது தேவை இல்லாத ஒன்று. அவருக்கு இன்ஷூரன்ஸ் பல லட்சம் வரும். அவர்களால் அந்த செலவை ஏற்றுக் கொள்ள முடியாதா?

அதே நேரத்தில் காஞ்சிபுரத்தில் ஆளில்லா இரயில் க்ராசிங்கில் இப்பொழுது 12 பேர் 6 மாதங்களுக்கு முன்னால் 25 பேர் இறந்திருக்கிறார்கள். இவர்கள் குடும்பத்தினர் அமெரிக்க போகிர செலவில், 10 ரயில் க்ராசிங்களில் கேட் போட்டு விடலாம்.

அமெரிக்க தமிழரின் உயிர் என்றால் உயர்வு, இந்தியத் தமிழரின் உயிர் என்றால் குறைச்சலா?

Nakkiran said...

இதில் ஒரு கொடுமையென்னவென்றால், இறந்த பிறகும் தன் உடலை இந்தியாவிற்கு எடுத்து வர வேண்டாம் என்று சொல்லி வைத்துள்ளார் அந்த பேராசிரியர்.. தன் உடலை அமெரிக்காவிலேயே புதைக்க சொல்லி இருக்கும் அந்த அமெரிக்க பக்தருக்காக, அவருடையை ஊரைச் சேர்ந்தவர்கள் ஒரு நாள் கடையடைப்பை நடத்தியிருப்பது வேதனை...

ஏன், எதுக்கு செய்யனும்னு ஒரு கேள்வி கேக்க கூடாதா?.. இப்போது அவர் குடும்பம் தொடர்ந்து அமெரிக்காவில் தான் இருக்கப் போகிறது.. அவர்களுக்காக் இந்த பைத்தியக்காரன் ஏன் ஒரு நாள் கடையடைத்து தன் வருமானத்தை இழந்தான்.. இது சரியான முட்டாள் தனம்...

----------------------
அடுத்தது, சட்டமன்ற உறுப்பினர்கள்...

தன் தலைவன்/வி புகழுரதும், அடுத்தவனை ஏசுறதும்.. ஆளை தூக்கி வெளியே போடுறதும், வெளிநடப்பு செய்யறதும், செறுப்பு அடிக்கிறது, குண்டூசி டப்பா தூக்கி அடிக்கிறது.. இதுதான் இவர்கள் சட்டமன்றத்தில் ஆத்தும் மக்கள் பணி...

ஆனா எந்த விஷயத்துல சண்டை போட்டாலும் தனக்குன்னு வந்துட்டா ஒன்னு சேர்ந்துக்கிறாங்கோ, அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாத உறுப்பினர்கள், தங்களுக்கு காலனி கட்ட அரசு செலவில், ஒவ்வொருத்தருக்கும் 2 கிரண்டு இடமும், 25 இலட்சம் கடனும் தரனுமாம்... இதுக்கு தெருவிலே போய் பிச்சை எடுக்கலாம் மானங்கெட்டவர்கள்..

Santhosh said...

ஞானி சரியாக சொல்லி இருக்காரு. இருக்குறவனுக்கு ஒரு நியாயம் இல்லாதவனுக்கு ஒரு நியாயம் கேட்பார் யாரும் இல்ல.

Nakkiran said...

SathyaPriyan மற்றும் சந்தோஷ் aka Santhosh

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

//அதே நேரத்தில், அவர் ஒரு சராசரி NRI அவ்வளவே. //

அவர் NRI என்பது கூட சந்தேகமே.. 30 வருடமாக அமெரிக்காவில் இருப்பவர், அமெரிக்க குடியுரிமை நிச்சயம் வாங்கி இருப்பார்.. ஒரு அமெரிக்கருக்காக இந்திய-தமிழனின் வரிப்பணம் செலவிடப்படுகிறது...

Anonymous said...

இதில் ஒரு கொடுமையென்னவென்றால், இறந்த பிறகும் தன் உடலை இந்தியாவிற்கு எடுத்து வர வேண்டாம் என்று சொல்லி வைத்துள்ளார் அந்த பேராசிரியர்..

is it true?

Anonymous said...

well said ngani !!!

Nakkiran said...

///இதில் ஒரு கொடுமையென்னவென்றால், இறந்த பிறகும் தன் உடலை இந்தியாவிற்கு எடுத்து வர வேண்டாம் என்று சொல்லி வைத்துள்ளார் அந்த பேராசிரியர்..

is it true? //

இறந்த பிறகு தன்னை வெர்ஜீனியா டெக்கிலேயே புதைக்க வேண்டும் என்று ஏற்கனவே சொல்லியிருந்ததாக அவ்ர் குடும்பத்தார் சொல்லியுள்ளார்கள்.

Anonymous said...

For god sake, Virginia Tech is not a cemetery except for a day, but a university.

மணிகண்டன் said...

உலகளவில இந்த துப்பாக்கிச் சூடு விவகாரம் விவாதிக்கப்பட்டதால cheap publicityகாக தி.மு.க நடத்துன கூத்து. எவ்வளவோ தமிழர்கள் வெளிநாடுகள்ல இறந்து போறாங்க. அவங்க குடும்பத்துக்கு எல்லாம் என்ன பண்ணாரு இந்த கருணாநிதி? முப்பது வருஷமா அமெரிக்கால இருந்த குடும்பம் பொருளாதார வசதில எப்படி இருக்கும்னு ஒரு குழந்தைக்கு கூட தெரியும். அப்படி இருக்க எதுக்கு இலவச விமான டிக்கெட் தரனும்?