Monday, March 05, 2007

மாடுயுலர் கிச்சன்...







பாட்டி தரையில் உட்கார்ந்து விறகு அடுப்பில் சமைத்து போட்டு சாப்பிட்டு இருக்கிறேன். அம்மா நின்று கொண்டே LPG அடுப்பில் சமைத்து போட்டு பார்த்து இருக்கிறேன். இன்றும் எங்கள் வீட்டில் சமையலறை கொஞ்சம் அழுக்காகத்தான் இருக்கும். எண்ணைய் கறை, திறந்து கிடக்கும் அலமாரிகள், மளிகை சாமான்கள் நிரப்பிய அலுமினியம் மற்றும் சில்வர் டப்பாக்கள், சுவரில் மாவுச்சிதறலோடு கிரைண்டர், மூடி வைத்த தண்ணீர் தவலைகள், அரிவாள் மனை.. ம்..ம்.. என்ன இருந்தாலும் அந்த வாசமே தனி தான்...



இனிமேல் அதுபோல் சமையலறை இருக்க இனி வரும் மக்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இனியெல்லாம் மாடுயுலர் மயம். மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொரு வாழ்க்கை மாற்றம் தான் மாடுயுலர் கிச்சன். 10 வருடங்களுக்கு முன்பு மிகப் பெரும் பணக்காரர்கள் மேலை நாடுகளிலிருந்து சமையலறையை அப்படியே இறக்குமதி செய்து தங்கள் வீடுகளில் அமைத்துக் கொள்வர். இம்முறை சிறிது நாட்களிலேயே தோல்வி அடைந்தது. இறக்குமதிக்கு ஆகும் அதிக செலவு, அதிக கால நேரம், இந்தியாவில் அதை பொருத்தும் போது வரும் நடைமுறைச்சிக்கல் போன்றவற்றால் இம்முறையை மக்கள் நிராகரிக்கத் தொடங்கினர். ஆனால் இப்பொழுது நிலமையே வேறு. பல உள்ளூர் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்தும், பல சுயமாகவும் இத்தொழிலில் வெற்றிக் கொடி நாட்டியும் வருகின்றனர்.




சமையலறையை பகுதி பகுதியாக செய்து இன்ஸ்டால் செய்து கொள்வதுதான் மாடுயுலர் கிச்சன். ஏதாவது ரிப்பேர் செய்ய வேண்டுமென்றாலும் அந்த ஒரு பகுதியை மட்டு கழற்றிக் கொண்டு போய் பழுது பார்த்து மறுபடியும் வந்து மாட்டிவிடுவார்கள். இப்போது உங்களுக்கு டிஷ் வாஷர் வாங்க விருப்பமோ வாய்ப்போ இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். மாடுயுலர் கிச்சன் இருந்தால் நீங்கள் விருப்பப் பட்டபோது வாங்கி உங்கள் சமையலறையில் எளிதில் பொறுத்தி விட முடியும். சமையலறையின் எல்லா இயந்திரங்களையும் எளிதில் பொருத்திவிடக்கூடிய அளவில் இதை வடிவமைத்து இருப்பர். இருக்கும் குறைவான இடத்தை முழுமையாக உபயோகப்படுத்தி நிறைய பொருட்களை நாம் சமையலறையில் வசதியான வகையில் வைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைப்பதே மாடுயுலர் கிச்சனின் வெற்றிக்கான ரகசியம். சொல்லவே தேவையில்லை மாடுயுலர் கிச்சனின் அழகுதான் நம் இல்லத்தரசிகளை அதனிடத்தே ஈர்ப்பது. இத்தோடு, இதை நிறுவ இரண்டு மூன்று நாட்களே போதும் என்பது மற்றுமொரு சிறப்பு



மாடுயுலர் கிச்சன், சுமார் 75000 ரூபாயிலிருந்து, 25 இலட்சம் ரூபாய் வரை எல்லாவிதமான விலைகளிலும் நிறுவலாம். எல்லாம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் டிசைனை பொறுத்தது. சராசரியாக ஒரு 8*10 அடி மாடுயுலர் சமையலறை அமைக்க சுமார் 1.75 முதல் 2 இலட்சம் வரை செலவாகலாம். இப்பொழுது புதிதாக கட்டும் எல்லா அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மாடுயுலர் கிச்சன் நிறுவுகிறார்கள். இந்த மாடுயுலர் கிச்சன் வியாபாரத்திற்கு இந்தியாவில் மிகப்பெரும் எதிர்காலம் உள்ளதாக கணிக்கிறார்கள். இதன் அழகும், விலையும் நிச்சயம் பிரம்மிக்க வைக்கின்றன.

4 comments:

துளசி கோபால் said...

இப்பெல்லாம் கிச்சன் அழகா இருந்தாத்தான் சமைக்கவே மூடு வருது. கிச்சன் பிஸினெஸ்
ரொம்பப் பெருசாதான் போச்சு. நமக்குத் தெரிஞ்ச நண்பர்( கோபால் கூட வேலை செய்தவர்)
வேலையை விட்டுட்டு இங்கிலாந்திலிருந்து அடுக்களை வாங்கி விக்கறார். பணம் கொழியுது.
எல்லாம் pom styleஆச்சே:-))))

வீடு கட்டும்போதும் கணிசமான தொகை 20% அடுக்களைக்கே ஆகிருதுங்க.

Nakkiran said...

சரியா சொன்னீங்க துளசி மேடம்

சேதுக்கரசி said...

நல்ல கட்டுரை.

அமெரிக்காவில் இப்படித்தான்.. பாத்திரம் பண்டமெல்லாம் கதவுகளுக்குள்ளே தான் இருக்கும். countertop எனப்படும் அடுப்படித் திண்ணை மீது ஒரு நான்கைந்து பொருட்கள் காணப்பட்டால் பெரிய விசயம். "தவத்தவ" என்று எல்லாப் பக்கமும் சட்டி முட்டிப் பொருட்களாகப் போட்டு வைக்காமல் அனைத்தையும் அதனதன் இடத்தில் நேர்த்தியாக வைத்திருக்கவும் "மாட்யூலர் கிட்சன்" உதவும்.

Anonymous said...

தரையிலேயே உட்கார்ந்து சமையல் செய்தால், பாட்டியானாலும் இளமையாக இருக்கலாம் என்று சொல்கிறீர்களா ? :-)