Wednesday, November 22, 2006

ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...4

2003 மத்தியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி அமெரிக்காவில் சுமார் 400,000 எம்ப்ரையோஸ்கள்(embryos) உபரியாக உள்ளது இவை அனைத்தும் தனியார் கருத்தரிப்பு நிலையங்களில் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. முதலில் இவ்வளவு எம்ப்ரையோஸ் உபரியானதன் காரணம் என்னவென்று பார்ப்போம்.

இயற்கையாக கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பில்லாத தம்பதியினருக்காக செயற்கை முறையில் ஆய்வகத்தில் கருத்தரிக்க செய்து பின்னர் அதை பெண்ணின் உடலில் செலுத்தி குழந்தை பெற்றுக் கொள்ள உதவுவதே கருத்தரிப்பு நிலையங்களின் பணி. இதற்காக வரும் தம்பதியினரில், பெண்ணுக்கு சில மருத்துவ முறைகள் செய்து அவரிடம் இருந்து தரமான 24 சினை முட்டைகளை எடுப்பர். பின்னர் ஆணிடமிருந்த பெறப்பட்ட விந்தணுவின் மூலமாக ஆய்வகத்தில் அந்த 24 முட்டைகளையும் கருத்தரிக்கச் செய்வர். மூன்று நாட்களுக்கு பிறகு 24 எம்ப்ரையோஸ் ரெடி. அதிலிருந்து ஒரு 4 எம்ப்ரையோஸ்களை எடுத்து பெண்ணின் கருப்பைக்குச் செலுத்துவர். நான்கு எம்ப்ரையோஸ்களில் ஏதாவது ஒன்று குழந்தையாக அல்லது 2 இரட்டைக் குழந்தையாக மாறும். மிச்சமுள்ள எம்ப்ரையோஸ்களை எதிர்கால தேவைக்காக உடனடியாக திரவ நைட்ரஜனில் மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாப்பாக சேமிப்பர்.

அப்படி முதல்முறை செலுத்தப்பட்ட எம்ப்ரையோஸ்கள் சிலபல காரணங்களால் குழந்தையாக மாறாவிட்டாலோ, அல்லது இரண்டாவது குழந்தை வேண்டுமென்று நினைத்தாலோ, சேமித்து வைக்கப்பட்ட எம்ப்ரையோஸ்களிலிருந்து ஒரு 4 எடுத்து மறுபடியும் பெண்ணின் உடலில் செலுத்துவர். இந்த செய்முறைகளின் போது சில எம்ப்ரையோஸ்கள் அழிந்து போகும் வாய்ப்பும் உண்டு. எப்படி பார்த்தலும் 16 முதல் 20வது எம்ப்ரையோஸ்கள் வரை உபரியாகவிடுகின்றன. இப்படி உபரியாவதை சில கருத்தரிப்பு நிலையங்கள் பத்திரமாக பாதுகாக்காமல் முதலிலேயே அழித்துவிடுகின்றன. சில பெற்றோர் பத்திரமாக கருத்தரிப்பு நிலையங்களின் உதவியுடன் பாதுகாத்து வருகின்றனர்.

இப்படி மிச்சமடைந்த 400,000 எம்ப்ரையோஸ்கள் தான் இப்போது அமெரிக்காவின் தலைவலி.
இவ்வளவு எம்ப்ரையோஸ்களை அழிப்பதா? அல்லது ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு அளிப்பதா? இல்லை தத்து கொடுப்பதா? இது தான் மக்கள் முன்னுள்ள கேள்வி.
குழந்தையில்லா மற்ற பெற்றோருக்கு எம்ப்ரையோஸ்களை தத்து கொடுக்கலாமென்றால், அதை பெறுவதிற்கு மக்கள் மனதில் விருப்பமில்லை. தமக்கு சம்பந்தமே இல்லாத குழந்தையை சுமந்து பெற்றுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. தவிர அவர்கள் தன்னுடைய எம்ப்ரையோஸ்களை உருவாக்க வ்ழியிருக்கும்போது ஏன் அடுத்தவருடையதை நாட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். எனவே இதை அழிக்காமல் ஸ்டெம்செல் ஆராய்ச்சிக்கு அளிக்கலாம் என்று ஒரு பிரிவினர் கருதுகின்றனர்.

ஆனால் மனித நோய்களை குணப்படுத்த மனித கொல்லமுடியாது என்பது ஒரு பிரிவினரின் வாதம். அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் வாதமும் அதே. ஆம் எம்ப்ரையோஸ் என்பது எதிர்கால மனிதனே, எனவே அதை ஒரு மனித உயிர் போன்றே கருத வேண்டு என்கின்றனர் ஒரு பிரிவினர். ஒரு சிலரோ இது மனிதனுக்கு முந்தைய பருவம் இதை மனிதனாக கருதக்கூடாது, எனவே இதை ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். இதற்கு மட்டும் அரசாங்கம் உதவியளித்தால், எம்ப்ரையோஸ்களிடமிருந்து பெருமளவில் ஸ்டெம்செல்கள் பிரித்தெடுக்கப்பட்டு மிகப்பெரியளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்படும். ஆனால் ஏதோ ஒரு மாநில உயர்நீதிமன்றத்தில் எம்ப்ரையோஸ் மனிதனே என்று தீர்ப்பு கூட வந்ததாக கேள்வி.

அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், இது வரை எம்ப்ரையோஸ்களிடமிருந்து ஏற்கனவே பிரித்தெடுக்கப்பட்ட ஸ்டெம்செல்களை வேண்டுமானால் ஆராய்ச்சிக்குட்படுத்தலாம். ஆனால் இனி புதிதாக எம்ப்ரையோஸ்களை அழித்து ஸ்டெம் பிரித்தெடுக்க அனுமதியில்லை என்று சொல்லியுள்ளார். இந்த நிபந்தனையுடன் தான் ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு அவர் நிதிஉதவி அளித்துள்ளார். மக்க்ளே இதில் நம் பங்கு, ஆராய்ச்சி குறித்த முடிவுகளை அவ்வப்போது தெரிந்து கொள்வதோடு அரசாங்கத்திம் முடிவுக்கும் பொறுமையாக காத்திருப்பதே. இறைவனைத்தவிர அனைத்திற்கும் பதில் கொடுக்கும் வல்லமை பொருந்தியதாக இருப்பது அறிவியல் மட்டுமே.

5 comments:

சேதுக்கரசி said...

நெறைய இருக்குதுங்க எழுத... நேரமிருக்கப்ப எழுதறேன். இப்போதைக்கு உள்ளேன் ஐயா மட்டும் :)

சேதுக்கரசி said...

நீங்கள் கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டிருப்பது "ஐ.வி.எஃப்" (IVF - In Vitro Fertilization) எனப்படும் "டெஸ்ட் டியூப்" குழந்தை உருவாகும் முறை.

எம்ப்ரையோ = கரு (தமிழாக்கம்)

//பெண்ணுக்கு சில மருத்துவ முறைகள் செய்து அவரிடம் இருந்து தரமான 24 சினை முட்டைகளை எடுப்பர்//

24 என்று ஒரு திட்டவட்டமான எண்ணிக்கை கிடையாது :-) 24 என்பது மிகவும் நல்ல எண்ணிக்கை. பல பெண்களுக்கு சுமார் 10-15 வரலாம். பல பெண்களுக்கு 5க்கும் குறைவாகக் கூட வரும். பெண்ணின் வயது, கையாளப்பட்ட மருத்துவ முறை, மருத்துவரின் சாமர்த்தியம் போன்ற பல காரணங்களால் இந்த எண்ணிக்கை மாறுபடும்.

//மூன்று நாட்களுக்கு பிறகு 24 எம்ப்ரையோஸ் ரெடி//

இதுவும் கியாரண்டி இல்லை. அனைத்தும் கருவாவது என்பது கிட்டத்த நடக்காத காரியம். பெரும்பாலானவை கருவாகும் என்று தான் சொல்லமுடியும். சிலசமயம் ஒன்றுமே கருவாகாமல் போகவும் வாய்ப்புண்டு. இதற்கும் பெண்ணின் வயது, முட்டையின் தரம், ஆணின் விந்தணுவின் குணாதிசயங்கள், கையாளப்பட்ட மருத்துவ முறை போன்ற பல factor-கள் காரணமாகலாம்.

//அதிலிருந்து ஒரு 4 எம்ப்ரையோஸ்களை எடுத்து பெண்ணின் கருப்பைக்குச் செலுத்துவர்//

இதுவும் ஒரு திட்டவட்டமான எண்ணிக்கையல்ல. பெண்ணின் வயது, கருவின் தரம், மருத்துவரின் வழக்கம், எத்தனை நாட்கள் ஆன கரு (1 முதல் 5 நாட்கள்) போன்ற factor-கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, 1 முதல் 5 அல்லது அதிகபட்சம் 6 கருக்கள் வரை கருப்பைக்குள் செலுத்தப்படும். ஒரு average-ஆக வேண்டுமானால் 3 அல்லது 4 எனலாம். ஆனால் கேஸுக்குக் கேஸ் மாறுபடும்.

//தன்னுடைய எம்ப்ரையோஸ்களை உருவாக்க வ்ழியிருக்கும்போது ஏன் அடுத்தவருடையதை நாட வேண்டும் என்று எண்ணுகிறார்கள்//

கரு தானம் என்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் கருவின் உண்மையான பெற்றோரின் அனுமதியுடன் மட்டுமே. சிலரால், அவர்கள் என்ன முயன்றாலும் கரு உற்பத்தி செய்யவேமுடியாது. அப்படிப்பட்ட பிரச்சினைகள் உடையவர்கள் இதுபோன்ற கரு தானத்தை ஏற்றுக்கொள்வார்கள்.

//ஸ்டெம்செல் ஆராய்ச்சிக்கு அளிக்கலாம் என்று ஒரு பிரிவினர் கருதுகின்றனர்//

இதுவும் கருவின் உண்மையான பெற்றோரின் ஒப்புதல் இருந்தால் தான் நடக்கும்.

Nakkiran said...

சேதுக்கரசி,

கலக்குறீங்க போங்க... நிறைய படிக்கிறீங்கன்னு புரியுது

VSK said...

சேதுக்கரசி அவர்கள் சொல்லி இதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் திரு. "நெற்றிக்கண்".

சேதுக்கரசி அவர்கள் செயற்கைக் கரு தரிப்பு[IVF] பற்றி மிக அருமையாகச் சொல்லியிருக்கிறார்.

எவ்வளவு கருக்களை அனுப்பலாம் என்பது குறித்து மட்டுமோரிரு கருத்துகள் சொல்ல விரும்புகிறேன்.

அதிகக் கருக்கள் [embros] செலுத்தினால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் என 10 வரைக்கும் கூட அனுப்பி வந்தனர் முதலில்.

ஆனால், இதன் மூலம் பல குழந்தைகள் உருவாகும் ஆபத்தும்,[Multiple pregnancies] குறைப் பிரசவமும்,[abortion]பருவத்திற்கு முன் பிறப்பும்,[pre-mature birth] பிறப்புக் கோளாறுகளும் [birth defects] ஏற்படுவதால், உலகின் பல நாடுகள் இதனை வரயறுக்கும் சட்டங்களைக் கொண்டு வந்திருக்கின்றன.

UK, NewZealand போன்ற நாடுகளில் அதிக பட்சம் 2 கருக்கள் தான் செலுத்த முடியும்.

இது 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், 35 - 37 வயதுக்குள் 2 - 3 கருக்களும், 38 - 40 க்கு 4 -ம், 40க்கு மேல் 5 வரை செலுத்த அறிவியல் வல்லுநர்கள் ஆலோசனை சொல்லுகிறார்கள்!

நன்றி.
தாமதத்திற்கு மன்னிக்கவும்!

குமரன் (Kumaran) said...

மேலோட்டமா இதுவரை படிச்சது இப்ப இங்கே படிக்கிறப்ப நல்லா புரியுது. நன்றி நக்கீரன்.