Wednesday, September 05, 2007

மற்ற மதத்தினர் ஏன் தமிழ் பெயர் வைப்பதில்லை?

இந்த வார தமிழ்மண நட்சத்திரம் திரு வரவனையான் அவர்களின் தமிழ் பெயர் சூடு(ட்)வோம் என்ற பதிவினை படித்த போது என்னுள் எழுந்த கேள்வி


மற்ற மதத்தினர் ஏன் தமிழ் பெயர் வைப்பதில்லை?


இது எந்த மதத்தவரையும் குற்றம் சொல்லவதற்காக எழுதப்படவில்லை. தமிழின் மேலுள்ள பற்றின் காரணமாக மட்டுமே எழுந்த கேள்வி. நான் என் மகளுக்கு பலத்த எதிர்ப்புக்களுக்கிடையே(வீட்டுலதான்) தூய தமிழ்பெயர் வைத்துள்ளேன். அதனால் இங்கு அமெரிக்காவில் நான் படும் இன்னல்கள் சொல்லிமாளாது. அமெரிக்கரும் சரி தமிழரல்லாத இந்தியரும் சரி, மருத்துவமனையிலும் சரி, மகளின் பள்ளியிலும் சரி மகளின் பெயர் படாதபாடு படுகிறது. எனினும் அது ஒரு சுகமானசுமை. ஒரு பெருமிதம், ஒரு கர்வம். அதை அனுபவித்து பார்த்தால்தான் புரியும்.


ஆனால், இந்து மதத்தினர் மட்டுமே தமிழில் பெயர் சூட்ட வேண்டுமா என்ன? ஏன் இசுலாமியரும், கிருத்துவரும் ஏன் தமிழில் பெயர் சூட்ட மறுக்கிறார்கள். தமிழ்ப் பெயர்களெல்லாம் இந்து மதப்பெயர்கள் அல்லவே. என்க்கு தெரிந்த நண்பர் ஒருவர் அவர் குழந்தைகளுக்கு 'தென்றல்', 'அறிவு' என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த பெயர்களில் எந்த மதமும் இல்லையே. ஏன் எல்லாரும் இசுலாமியப் பெயரோ அல்லது ஆங்கிலப் பெயரோ வைக்க வேண்டும். ஏன் ஒரு நல்ல தமிழ்பெயர் சூட்டக்கூடாதா?. ஏதேனும் காரணமிருக்கிறதா?தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கிச் சொல்லவும்.

50 comments:

வவ்வால் said...

மிகசரியான கேள்வி, இதனை கேட்டால் பிற மதத்தினரை அவமரியாதை செய்வது என சொல்வார்கள் என பெரும்பாலோர் சொல்வார்கள் என பொதுவாக எவரும் இதனைக்கேட்பதில்லை.

நான் இதனை நேரிடையாக சிலரிடம் கேட்டு மனத்தாங்கல் ஏற்பட்டது தான் மிச்சம். அதன் பிறகு இது குறித்து பேசுவதே இல்லை. மீண்டும் நீங்கள் நினைவுப்படுத்திவிட்டீர்கள்.

பெரும்பாலோர் சொல்வது இது தான் தமிழ் உணர்வு மனதில் இருக்கிறது என்பார்கள், அதற்கும் மேல் பேசி சிக்கல் ஆக்காமல் வாய் மூடிக்கொள்ள நேரிடும்.

அக்காலத்தில் பலருக்கும் பெற்றோர் வைப்பது தான் பெயர் அவர்கள் அக்காலத்தில் வைத்தை என்ன செய்வது, ஆனால் வருங்காலத்தில் மற்றவர்கள் மாற்றி பெயர் சூட்டலாம்.

Machi said...

நல்ல கேள்வி. இசுலாமிய & கிறுத்துவ தமிழ் அன்பர்கள் பதில் கூறினால் நன்றாக இருக்கும்.

ஜோ/Joe said...

கிருத்துவர்கள் தமிழ் பெயர் வைப்பதில்லயா ? ஹூம். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை பார்த்து விட்டு தேவைப்பட்டால் மீண்டும் வருகிறேன்.

Anonymous said...

இசுலாமியர்கள் தமிழில் பெயர் வைக்கக் கூடாது என்று எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லை. எப்படி பச்சை இசுலாமிய நிறம் என்பது போல் ஒரு கருத்து நிலவுகிறதோ அது போல் தான் இதுவும். இந்த விஷயத்தில் முஸ்லிம்களுக்கே கூட தெளிவு இல்லை என்பது தான் உண்மை. தமிழில் பெயர் வைத்தாலும் இசுலாமிய கோட்பாடுகளுக்கு மாறாக இல்லாமல் இருந்தால் அந்த பெயர்களில் எந்த தவறும் இல்லை. அரபியில் பெயர் வைத்தாலும் அந்த பெயர் இசுலாமிய கோட்பாடுகளுக்கு மாறாக இருப்பின் அத்தகைய பெயர்களை தவிர்ப்பது தான் சிறந்தது. இதில் மொழியால் எந்த தடையும் இல்லை. எந்த மொழியையுமே இசுலாம் ஒதுக்குவது இல்லை

✪சிந்தாநதி said...

உங்கள் கேள்வியே தவறு...

'மதத்தினர்' மதப்பெயர்தான் சூட்டுவார்கள். மதத்தை விட பண்பாட்டை, மொழியை நேசிப்பவர்கள் எந்த நம்பிக்கையாளர்களாக இருந்தாலும் பெயர்சூட்டத் தடையில்லை. பலமதம் சார்ந்த பலரும் மதமற்ற பொதுப்பெயர் சூட்டியும் உள்ளனர்.

இன்னொன்று...

பெயர் சூட்டுதல் சார்ந்து மதச் சடங்குகள் இருக்கும் நிலையில் மதபுரோகிதர்களின் ஆலோசனையின் பேரிலோ, முன்னோர் பெயர் வைப்பது, பெரியவர்களால் சூட்டப் படுவது என்ற சூழ்நிலைகளிலதான் இந்து மதம் உட்பட எல்லா மதங்களிலும் மதப்பெயர்கள் சூட்டப்படுகின்றன.

இதிலிருந்து வெளிவர முடியாத அளவுக்கு கட்டுண்டவர்கள் எந்த மதத்தில் இருந்தாலும் அவர்களால் பொதுப்பெயர்களைச் சூட்ட முடியாது.

இதில் எந்த மதமும் விதிவிலக்கல்ல

ramachandranusha(உஷா) said...

கிருத்துவர்களில் கத்தோலிக்கர்களில் தமிழ் பெயர் சாதாரணம். என் வகுப்பிலேயே செல்வி என்ற பெண் இருந்தாள். இரட்டை பெயர் இருக்கும் முதல் பெயர் இந்து/ தமிழ் பெயராகவும் அடுத்து பைபிளில் இருந்து எடுத்த பெயராகவும் இருக்கும். பொதுவாய் முதல் பெயரில் கூப்பிடுவார்கள். சரியா ஜோ :-)

said...

பிரகாஷ், ரமேஷ், சதீஷ், சுதீஷ், ஆகாஷ், பிரபாத், கனேசன், குமரேசன், சுந்தரலிங்கம் இவையெல்லாம் தூய தமிழ் பெயர்களா இவற்றுக்கு ஆரோக்கியசாமி, அந்தோனிசாமி, சாகுல் அமீது எந்த விதத்தில் குறைச்சல்.. மாற்றி கொண்டவர்களை பற்றித்தான் பேசுகிறீர்கள் என்றால் எந்த இந்துக்கள் தங்கள் பெயரை தமிழில் மாற்றிக்கொண்டார்கள் என்று எண்ணிப்பாருங்கள், தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உணர்கின்றவர்கள்தான் தங்கள் பெயரை மாற்றிக்கொன்டிருக்கிறார்கள், காலம்காலமாக சாதீய படுகுழியில் இந்து மதத்தால் வதைக்கப்பட்ட, வர்ணாசிரம எதிர்த்து போராடியதையே தங்கள் வரலாறாக கொண்ட அதனை இப்போது உணர்கிற ஒடுக்கப்பட்ட மக்களும், இன்னும் முற்போக்கு சிந்தனைகளால் தான் இந்து இல்லை என்று உணர்கிற பகுத்தறிவாளர்களும்தான் தங்கள் பெயரை மாற்றிக்கொள்கிறார்கள், ஆனால் நீங்கள் அவர்களை மீண்டும் இந்து நுகத்தடியில் இழுத்துப் பூட்டி, 'அவாளும் இந்துக்கள்தான்' என்று சங்கராச்சாரி போல பேசுகிறீர்கள். திராவிட இயக்கத்தின் ஆரம்ப்கால்ந்தொட்டே தமிழுக்கென்று தமிழர்கென்றும் வீதியில் இறங்கி போராடிய இசுலாமிய, கிருந்துவ மதத்தில் பிறந்த எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள் அந்த சமயங்களில் தமிழுக்காக தங்கள் பெயரை மற்றும மாற்றிக்கொண்டு இல்லத்தில் உட்கார்ந்து இலக்கியம் படித்துக்கொண்டிருந்த இந்துக்களும் இருந்திருக்கிறார்கள்..

ஸ்டாலின்

ஜோ/Joe said...

djmiltonஉஷா,
நீங்கள் சொல்லுவது சரி தான் .எங்கள் ஊரில் மாசில்லாமணி ,இயேசு தாசன் ,செல்வி ,செல்வன் ,ஆரோக்கிய சாமி ,ஆரோக்கிய மேரி ,அன்பு ,குமார் மற்றும் ராஜா ,ராணி ,கீதா போன்ற பொதுப்பெயர்கள் கத்தோலிக்கர்களிடையே சர்வ சாதாரணம் .பிரச்சனை என்னவென்றால் இவர்கள் பெயரை கேட்டால் அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று பலர் அடையாளம் காண்பதில்லை ..உதாரணத்துக்கு அரசியலில் உள்ள குமாரதாஸ் ,தா.பாண்டியன் ,கலைஞரின் முரட்டு பக்தர் தூத்துகுடி பெரியசாமி ,அவர் மகள் கீதா ஜீவன் போன்றோர் கிருத்தவர்கள் என்று தெரியுமா ? தெரியாதா ? அல்லது பீட்டர் அல்போன்ஸ் மட்டும் தான் தெரியுமா ? சரி அதை விடுங்கள் ..நற்செய்தி கூட்டம் நடத்துகிற தினகரன் என்ன இந்துவா?

ஜோ/Joe said...

உஷா,
கத்தோலிக்கர்களில் மட்டுமல்ல ,புரட்டஸ்டாண்டு மதத்தினர் நிறைய பேர் தினகரன் ,தங்கமணி ,வேதமணி ,பெரியசாமி போன்ற பெயர்களை வைத்திருப்பதை காணலாம்.

நம்பி.பா. said...

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே, மறந்திருக்க மாட்டீர்கள்,
ராஜா, கிருஷ்ணன், மகேஷ்வரி, விக்னேஷ் போன்ற பெயர்களும் தமிழ்ப் பெயரல்லவே?

இந்து மதமும் பிற மதம் என்று சொல்கிறீர்களா?
பலவீனமான தலைப்புடன் கருத்தைப் பதிந்திருக்கிறீர்களே, சரியா?

Nakkiran said...

நிறைய நல்ல மாற்று கருத்துக்கள் பின்னூட்டங்களில் வருகின்றன. அனைத்தையும் வாசித்துக் கொண்டே வருகிறேன்.

வவ்வால்
குறும்பன்
ஜோ / Joe
சாதிக் (உண்மையாளன்)
சிந்தாநதி
ramachandranusha(உஷா) said...
ஸ்டாலின்
நம்பி.பா.

அனைவருக்கும், தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. விரைவில் என் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிக்கிறேன்.

Yogi said...

மற்ற மதத்தினரும் தமிழில் பெயர் வைக்கத்தான் செய்கிறார்கள். நண்பர் பிரின்ஸ் அவர்களது அண்ணனின் மகளுக்கு 'தமிழீழம்' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். சாதாரணமாக யாரும் தமிழ்நாட்டில் இந்தப் பெயரை வைக்கமுடியாது.
http://princenrsama.blogspot.com/2007/09/blog-post_04.html

Unknown said...

மற்ற மதத்தினர் ஏன் தமிழ் பெயர் வைப்பதில்லை? ....

யார் அந்த மற்ற மதத்தினர் ?
இந்து (சனாதன ) மதம் தவிர்த்தவர்களா?

அப்படியானால் இந்து (சனாதன ) மதம் சார்ந்தவர்கள் வைத்துள்ள பெயர்கள் தமிழ்ப் பெயர்களா? ஏன் காமடி செய்கிறீர்கள்?

பாலாஜி பத்ரி - தமிழ்ப் பெயரா ? மதப் பெயரா? சாதிப் பெயரா?

மொக்கைத் தேவர் - தமிழ்ப் பெயரா ? மதப் பெயரா? சாதிப் பெயரா?

பாயும் புலி பண்டார வன்னியன் - தமிழ்ப் பெயரா ? மதப் பெயரா? சாதிப் பெயரா?

இவை எல்லாம் சாதி / வருணம் சார்ந்த பெயர்கள். தமிழ் எழுத்துக்களில் எழுதப்படுவது எல்லாம் தமிழ்ப்பெயர்கள் அல்ல.


நீங்கள் சொன்ன இந்து (சனாதன ) மதப் பெயர்கள் கீழ்க்காணும் மசாலாக்கள் கலந்த ஒரு கலவை.

கடவுள் அவதாரம் / புராண கதா பாத்திரங்கள்
சாதி அடையாளம்
நியுமராலாஜி
ஜாதகம்
நட்சத்திரம்

etc..
**

மதத்தையும் அதன் உட்பிரிவான சாதிகளையும் விரும்புபவர்கள் அல்லது அதை வைத்து அடையாளம் தேட நினைப்பவர்கள் அல்லது எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் அப்பா அம்மா வழிப் பெயர்களை வைப்பவர்கள் என்று பல கணக்குகள் உண்டு.

எல்லாம் இது அவர்களின் நம்பிக்கை மற்றும் குழு அடையாளம். இது எல்லா மதத்திற்கும் பொருந்தும்.

**

பிடித்த தலைவர்கள் பெயரை வைப்பதும்(சே அல்லது பெரியார்) பிடித்த ஒரு நடிகனின் (ரஜினி அல்லது திரிஷ) பெயரை வைத்துக் கொள்வதும் ஒன்றே.
அவரவர் விருப்பம் அவரவற்கு.

**

தென்றல், வெண்ணிலா, கயல்விழி, நிலா ...போன்ற பெயர்கள் வேண்டுமானால் மதம்/சாதியை வெளிப்படுத்தாத தமிழ்ப்பெயர்கள் என்று சொல்லலாம்.

***

தமிழா ? சாதியா ? மதமா ?

ஒரு கூட்டத்தில் மேற்சொன்ன மூன்று அடையாளங்களில் ஏதேனும் ஒன்றை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம் என்றால் எத்தனை இந்து,கிறித்துவர்,இஸ்லாமியர்கள் தங்கள் மத அடையாளத்தை விட முன்வருவார்கள்?

அல்லது எத்தனை பார்ப்பனர்,தேவர்,பிள்ளைமார்,செட்டியார்,வன்னியர்... தங்கள் அடையாளத்தை இழக்க முன் வருவார்கள்?

மனிதன் ,ஏதேனும் ஒரு குழுவில் தன்னை இணைத்துக் காட்ட பல அடையாளங்களைத் தாங்க வேண்டியுள்ளது.

"சுஜாதா" எந்தப் பெயரில் இருந்தாலும் பார்ப்பன மாநாட்டுக்கு போகத்தான் செய்வார். அது போல் "டாக்டர்" தமிழாகி "மருத்துவரா"னுலும் வன்னிய அடையாளத்தை விட மாட்டார். :-)

மதம்,சாதி உள்ளவரை பெயர்களில் அதன் வெளிப்பாடும் இருக்கும். இது அனைத்து மதங்களுக்கும்.

Anonymous said...

என்னய வச்சி யாரும் இங்கே காமெடி கீமெடி பண்ணலியே ...?

- கான்ஸ்டெண்டயின் ஜோஸப் பெஸ்கி

சயந்தன் said...

எனக்குத் தெரிந்த இருவரின் பெயர்
இவோன் தமிழினி
எலன் யாழினி

nayanan said...

நல்ல தேடலை ஏற்படுத்தும் பதிவு.
அனைவரின் சிந்தனையைத் தூண்டும் பதிவு. சாதிக்கின் மறுமொழி அருமை.
பாராட்டுகள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

அஞ்சாநெஞ்சன் said...

இது ஒரு பெரிய மேட்டர் இல்லை பிரதர்! பெரும்பாலான இந்துக்கள் தமிழ்ப் பெயர் வைப்பதில்லை என்பது தான் உண்மை. அவற்றில் பெரும்பான்மையானவை வட மொழிச் சொற்களே. முஸ்லிம்கள் தங்களது வேத நூல் குர்ஆன் அரபியில் இருப்பதால், அரபிப் பெயர் வைக்கின்றனர். அதோடல்லாமல், தமிழ்ப் பெயர்களோ அல்லது பிற வடமொழிப் பெயர்களோ வைத்தால் பிறர் தம்மை முஸ்லிம் என்று உணர மாட்டார்கள் என்ற எண்ணம் வேறு. முஸ்லிம் என்று உணர வில்லை யெனில், சாதிக்களையெல்லாம் கேட்டு சொல்ல வேண்டியிருக்கும்...

Unknown said...

// ... நற்செய்தி கூட்டம் நடத்துகிற தினகரன் என்ன இந்துவா? //

இல்லை அவர் கிறித்துவர் :-) அவரின் முழுப்பெயர்.

Duraisamy Geoffery Samuel Dhinakaran

FYI:
http://www.dgsdhinakaran.com/

ஜோ,
நீங்களே சொன்னது போல் முழுப்பெயரும் தெரிந்தால் தவிர Last Name வைத்து சிலரை கிறித்துவ மதத்தினர் என்று சொல்ல முடியாது. இட ஒதுக்கீட்டுக் காரணக்களுக்காக எனது நண்பர்கள் பலரும் அவர்களின் பூர்வாசிரமப் பெயர்களைத் இன்னும் தாங்கிக் கொண்டுள்ளனர் மதம் மாறிய பின்னாலும்.

துக்கடா Lions Club-ல் சேரும் ஒருவரே Lions என்று த ன் பெயருக்கு முன்னாள் போட்டு தான் சார்ந்துள்ள இயக்கத்தைக் காட்டிக் கொள்கிறார். மதம் விரும்பிகள் அவர்கள் மதம் சார்ந்த பெயர்களை வைத்துக் கொள்வது அவர்களின் விருப்பம்.

Yogi said...

எங்கள் ஊரில் செய்யதம்மாள் கல்லூரி நடத்துபவர்களின் பெயர்
சின்னத்துரை,
செல்லத்துரை.

இவர்கள் இசுலாமியர்கள்தான்.

Anonymous said...

பெரும்பாலும் முஸ்லிம் கள் தங்களை அடையாளம் காட்டும் நோக்குடந்தான் இஸ்லாமிய பெயரினை சூட்டுகின்றனர்

PRABHU RAJADURAI said...

பிரபு ராஜதுரை என்பது தமிழா? வடமொழியா அல்லது ஆங்கிலமா?

சரி, வெள்ளையர்கள் யாரும் ஏன் ஆங்கிலோ சாக்ஸன் பெயர் வைத்துக் கொள்ளாமல், ஜியார்ஜ், சாம், பெஞ்சமின், ஜோசப், ஆபிரகாம் என்று ஆசிய பெயர்களை வைத்துக் கொள்கின்றனர்?

Anonymous said...

//Ex. பெஸ்கி said...
என்னய வச்சி யாரும் இங்கே காமெடி கீமெடி பண்ணலியே ...?

- கான்ஸ்டெண்டயின் ஜோஸப் பெஸ்கி//

எனது பின்னூட்டத்தை வெளியிட்டதற்கு நன்றி!

- வீரமாமுனிவர்

Sundar Padmanaban said...

பிரபுஜி

உங்களுக்கு நூறாயுசு. இந்தப் பதிவைப் படிக்கும்போது உங்களைத்தான் கூப்பிடலாம்னு நெனச்சேன் - நீங்களே வந்துட்டீங்க! :-) நன்றி.

நெற்றிக்கண் ஸார்!

பெயர் வைப்பது பெற்றோர்கள் அவர்களது நம்பிக்கையைச் சார்ந்து செய்யும் ஒரு காரியம். அவர்களது நம்பிக்கைகள் பலூன் மாமா குறிப்பிட்டது போல // கடவுள் அவதாரம் புராண கதா பாத்திரங்கள்
சாதி அடையாளம்
நியுமராலாஜி
ஜாதகம்
நட்சத்திரம்//

என்பதோடு பிடித்த நபர்கள், தலைவர்கள், போன்று எத்தனையோ விதங்களாக இருக்கலாம்.

எத்தனையோ பேர் பெற்றோர் வைத்த பெயர்களை பல்வேறு காரணங்களுக்காக (மத மாற்றம், நியூமராலஜி, காதலியின் விருப்பம்!) மாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கல்யாணத்தின்போது புகுந்தவீட்டுப் பெயர் என்று மணமகளுக்குப் பெயர் சூட்டும் வைபவம் ஒன்று இந்து திருமணங்களில் இருக்கிறது (பெண்கள் இனிஷியலை மாற்றுவதோடு இல்லாமல் பெயரையே மாற்ற நேரிடுவது கொடுமை! ஏன் ஆண்கள் இனிஷியலை மாற்றிக்கொள்ளக் கூடாது?) - மணக்கமுடியாத காதலியின் பெயரை மணமுடித்த மனைவிக்குச் சூட்டி ஆறுதல்படும் ஆத்மாக்களும் உண்டு என்று நம்புகிறேன்! :-).

வித்தியாசமான பெயர்களைக் கேட்கும்போது ஆஹா நமக்கு இம்மாதிரி வித்தியாசமான பெயரை வைக்காது விட்டார்களே என்றும் தோணியிருக்கிறது - சிறுவயதில் - மதங்கள் பற்றிய புரிதல்கள் இல்லாத வயதில் - கழுத்தில் சிலுவை டாலர் அணிந்துகொள்ளவேண்டும் என்ற - - ஆசையைப் போல் - ஏன் இன்றும் அந்த ஆசை இருக்கிறது - அதோடு புலிநகத் தாயத்தும்!

"மற்ற மதத்தினர் ஏன் தமிழ்ப் பெயர் வைத்ததில்லை" என்பதில் 'தமிழ்' என்ற வார்த்தையை எடுத்து எந்த மொழியின் பெயரையும் போடலாம்! :-)

இதே கேள்வியை தீவிர மதசார்புடையவர்கள் - 'நம்/மற்ற மதத்தினர் ஏன் மதப் பெயர்களை வைப்பதில்லை?' என்றும் கேட்கலாம் :-)

பெயரில் என்ன இருக்கிறது - என்று என்றோ மரத்தடியில் உரையாடியது நினைவுக்கு வருகிறது.

Nakkiran said...

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. இந்துமதப் பெயர் தமிழ்பெயராக முடியாதா????? தெரிந்தவர்கள் விளக்கவும்..

முருகன், பவளவண்ணன், ஆண்டாள், திருவேங்கடம் இவையெல்லாம் தமிழ்பெயர்கள் இல்லையா???...

இங்கு வந்த பல பின்னூட்டங்கள், இந்து மத பெயரெல்லாம் தமிழ்பெயராக இருக்கமுடியாது என்பது போல இருக்கிறது.. அது தவறு என்பது என் கருத்து...

Agathiyan John Benedict said...

// இந்து மதத்தினர் மட்டுமே தமிழில் பெயர் சூட்ட வேண்டுமா என்ன? ஏன் இசுலாமியரும், கிருத்துவரும் ஏன் தமிழில் பெயர் சூட்ட மறுக்கிறார்கள். //

ஆசிரியரின் இந்த வசனம் அவரின் அறியாமையைக் காட்டுகிறது. இந்து மதத்தினரிடம் தமிழ் அல்லாத (அல்லது) புரிந்துகொள்ளவே முடியாத எத்தனையோ பெயர்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதுபோல கிறிஸ்தவர்கள் மத்தியில் எவ்வளவோ தமிழ்ப் பெயர்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆதலால், இந்தத் தலைப்பின் கீழ் விவாதிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. பெயரைத் தமிழில் வைப்பதனால், எள் முனையளவு கூட மாற்றம் உண்டாகப்போவதில்லை.

துணுக்கு: நான் கிறிஸ்தவனாக இருந்தும், அமெரிக்காவில் வசிப்பவனாக இருந்தும், எல்லோரும் அழைப்பதற்கு எளிதான பெயரைத்தான் என் மகளுக்கு சூட்டியிருக்கிறேன். யாருமே உச்சரிக்கமுடியாத பெயரை உங்கள் மகளுக்கு சூட்டியதற்காக, உங்கள் மகள் உங்களை வைய்யும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
நன்றி.

வவ்வால் said...

//முருகன், பவளவண்ணன், ஆண்டாள், திருவேங்கடம் இவையெல்லாம் தமிழ்பெயர்கள் இல்லையா???...//
நக்கீரன் ,
நீங்கள் சொன்னதை
நிறைய பேர் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்று தான் தெரிகிறது. கடவுல் , பெயரோ முன்னோர்கள் பெயரோ வட மொழி , பிரமொழி கலவாத தமிழ் சொற்களைக்கொண்ட்ட பெயர்களை சூட்டலாம் என்று தான் நீங்கள் சொன்னதாக நான் எடுத்துக்கொண்டேன்.

அப்படி பார்க்கையில் கடவுள் மறுப்பு எண்ணம் கொண்டவர்கள் மட்டும் தான் தூய தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்வது எடுபடாது.

ஆண்டாளின் ஒரு பெயர் தான் பூங்கோதை சூடிக்கொடுத்த சுடர் கொடியாள் , பூங்கோதை அல்லது சுடர் கொடி என்று பெயர் வைப்பது நம்பிக்கைக்கு நம்பிக்கை கூடவே தூய தமிழ் பெயர் ஆகிறதே! ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.

எனவே தமிழில் பெயர் வைப்பதை இப்படி மதம் , அது இதுவென்று சொல்லி கொச்சைப்படுத்த வேண்டாம்.

//ஆசிரியரின் இந்த வசனம் அவரின் அறியாமையைக் காட்டுகிறது. இந்து மதத்தினரிடம் தமிழ் அல்லாத (அல்லது) புரிந்துகொள்ளவே முடியாத எத்தனையோ பெயர்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதுபோல கிறிஸ்தவர்கள் மத்தியில் எவ்வளவோ தமிழ்ப் பெயர்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆதலால், இந்தத் தலைப்பின் கீழ் விவாதிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. பெயரைத் தமிழில் வைப்பதனால், எள் முனையளவு கூட மாற்றம் உண்டாகப்போவதில்லை.//

பெனடிக்ட் உங்கள் அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளீர்கள் , வேறு எதுவும் சொல்வதற்கில்லை. ஏங்க உங்க பெயர் தமிழில் கூட இல்லை இந்தியாவிற்கே சொந்தமானது இல்லை அன்னிய மண்ணில் இருந்து வந்த பெயர் , நீங்கள் எல்லாம் தமிழ் பெயர் வைப்பதால் எதுவும் மாறாதுனு சொல்லாமா வேற என்னத்த சொல்விங்க...

தமிழ் அல்லது தமிழ் மண் சார்ந்த பெயர்கள் வைக்க வேண்டும் என்பது நம் பாராம்பரியத்தின் அடையாளம் அழியாமல் இருக்க உதவும் என்பதே எனது எண்ணம்!

Anonymous said...

/யாருமே உச்சரிக்கமுடியாத பெயரை உங்கள் மகளுக்கு சூட்டியதற்காக, உங்கள் மகள் உங்களை வைய்யும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
நன்றி./

ஜான் பெனடிக்ட் என்ற பெயரை தமிழகத்தில் எத்தனை பேர் சரியாக உச்சரிப்பார்கள்?

அதை பற்றி நீங்கள் கவலைப்பட்டீர்களா? இல்லை. அப்புறம் ஏன் சார் உங்கள் வாரிசு கவலைபடப்போகிறது? அர்னால்ட் ஷ்வார்சனேகர், புஷின்ஸ்காஸ் போன்ற பெயர்களை மாற்றாமல் தானே அவர்கள் அமெரிக்காவில் வந்து ஜெயித்தார்கள்?

குழந்தைக்கு பெயர் வைப்பது நம் விருப்பம்.அந்த பெயரோடு அவர்கள் ஜெயித்து காட்டுவார்கள்.கட்டாயம் தகப்பனை சபிக்க மாட்டார்கள்.

Raveendran Chinnasamy said...

Parents name their kids according to their customs ( caste & religions). India n names can not be used in call center to appease clients . SO whats in the name .

I know muslims especialy Tamil muslims ( rawthers ?) name their kids with tamil based .

As others pointed out there is no concrete evidence to say other religions ( except hindus ) name non tamil names .

Agathiyan John Benedict said...

"பெயரால்" ஒரு இனம் வாழ்ந்திடப்போவதுமில்லை; வீழ்ந்திடப்போவதுமில்லை. நல்ல தமிழ்ப் பெயர் வைத்திருப்பார்கள், ஆனால் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாமல் இருப்பார்கள். இதுதான் கொடுமை. இந்தக் கொடுமையைப் போக்கும் திசையில் உங்களின் சக்தியைச் செலவழியுங்கள். அதுதான் தமிழுக்கும், தமிழினத்துக்கும் நீங்கள் செய்யும் சிறப்பான தொண்டாக இருக்கும்.

ஜீவி said...

திரு.பெனிடிக்ட்டின் செப்.6 தேதிய
பின்னூட்டத்தின் தொடர்பாக எழுந்த
எண்ணவோட்டம்:
ஒரு மொழி அழகுருவது, அந்த மொழியின் வாக்கிய அமைப்புகளால் என்றால்,எழுத்துப் பிழைகள் அற்று எழுதுவது அதற்கு அழகான அணிகளைப் பூட்டுவதற்கு சமமாகும். பேசும் போது அந்த மொழிக்கே உரித்தான இசைபடப் பேசுதல், அந்த மொழியைச் சீராட்டுதலுக்கு சமமாம்.
மொழியின் மேல் இருக்கும் ஆர்வம்,
அந்த மொழியைக் கையாளுவதில் இல்லாதது வருந்தத் தக்கதே. அந்தக்
காலத்தில், 'முரசொலி' ஏடு, இறுதி அச்சிடலுக்கு முன்னால்
கலைஞர் பார்வைக்கு வருமாம்; அந்த நேரத்து, அச்சுப்பிழைகளைத் திருத்துவதற்கே மிகுந்த நேரம் எடுத்துக்கொண்டு, பொறுமையாகத்
திருத்துவாராம். பிழைகளுடன் தமிழ்
மொழி அச்சாவது அவரால் சற்றும்
பொறுத்துக் கொள்ளமுடியாது; அதில் அவர் உறுதியுடன் இருந்தார் என்று
கேள்விப்பட்டிருக்கிறேன்.

துளசி கோபால் said...

//எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. இந்துமதப் பெயர் தமிழ்பெயராக
முடியாதா????? தெரிந்தவர்கள் விளக்கவும்..//

நம்ம வீட்டில் சிலம்பரசி. அவ்வை என்ற பெயர்கள் வச்சுருக்காங்க. அக்காவின் கணவர் தமிழரசுக் கழகம்
ஆதரளவாளர். திருமணமும் அப்போ ம.பொ.சி. தலைமையில் நடந்தது. இந்துக்கள்தான். இத்தனைக்கும்
தாய்மொழி தெலுங்கு!

அரை பிளேடு said...

ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும் அது ரோஜாவாகத்தான் இருக்கும்.

பெயரில் என்ன இருக்கிறது. எண்ணங்களும் உணர்வுகளும் வாழும் நெறிகளும்தான் முக்கியம்.

அரை பிளேடு said...

தமிழுணர்வு பெயரில் இருப்பதைவிட உணர்விலும் வாழ்க்கையிலுமே வேண்டும்.

Agathiyan John Benedict said...

அண்ணன் வவ்வால் அவர்களே,

//உங்க பெயர் தமிழில் கூட இல்லை இந்தியாவிற்கே சொந்தமானது இல்லை அன்னிய மண்ணில் இருந்து வந்த பெயர் , நீங்கள் எல்லாம் தமிழ் பெயர் வைப்பதால் எதுவும் மாறாதுனு சொல்லாமா//

அ...உ...ன்னா,உடனே நீங்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள்; வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள்; சொந்த மண்ணுக்கு எதிரானவர்கள் என்ற இதே ஒப்பாரியைக் கேட்டுக் கேட்டு புளிச்சுப்போன ஊத்தாப்பம் மாதிரி ஆகிப்போச்சு பொளப்பு-:) இது மாதிரி சராசரிகளுக்காகவே நான் எழுதிய இந்தப் பதிவைப் படியுங்கள்.

நக்கீரன் அவர்களே,
நடிகர், நடிகைகளைக் காணக் கூடும் கூட்டம் போல, இதுபோன்ற தலைப்புகளுக்கு கூட்டம் வேண்டுமானால் அதிகம் வரலாம். ஆனால் உருப்படியாக ஒன்றும் விளையப்போவதில்லை. எனவே தயவுசெய்து இந்தப் பதிவுக்கு ஒரு முடிவு கட்டுங்கள். நன்றி.

வவ்வால் said...

வாங்க சராசரிக்கும் மேலான பெனடிக்ட்,

புளிச்சு போனது உங்கள் சிந்தனை தான் வேற என்னத்த சொல்ல! தமிழ் நாட்டில்குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க சொல்வதும் பாவம் தான் அய்யா!

சினிமாவுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லி அரசியல் செய்பவர்களுக்கு தான் இங்கு ஆதரவு கிடைக்கும் , ஒரு நல்ல நோக்கத்தில் யாராவது சொன்னால் பழிச்சொல் தான் கிடைக்கும்!

தமிழ்னு சொன்னாலே ஏன் சார் இப்படி நெருப்ப மிதிச்சா போல பதறுகின்றீர்கள்!

ஜோ/Joe said...

பெனடிக்ட்,
இவ்வளவு உதாரணங்கள் விளக்கம் சொன்னாலும் வேண்டுமென்றே குதர்க்கம் பேசும் வவ்வால் போன்றவர்களிடம் விவாதம் செய்வது வீண் வேலை .கிறிஸ்தவர்களின் தமிழ் பற்றுக்கு வவ்வால் போன்றவர்களிடம் சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியம் இல்லை ..வேறு வேலை இருந்தால் பாருங்கள்.

Nakkiran said...

திரு John P. Benedict அவர்களே.. கொஞ்சம் பொறுமையாய் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

திரு வவ்வால் சொல்வதை முழுமையாக புரிந்து கொண்டு மறுமொழி எழுதுங்கள்... அவர் ஒன்றும் இந்தியாவில உள்ள கிருத்துவர் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்று சொல்லவில்லை. உங்கள் பெயர் ஒரு வெளிநாட்டுப் பெயர் என்றுதான் சொல்லியிருக்கிறார்.. அது உண்மைதானே..

உங்கள் பதிவை படித்தேன்... மத்ததிற்கெல்லாம் நான் தமிழ்கலாச்சாரத்தை கட்டி காக்கிறோம் என்று நீட்டமாக எழுதிவிட்டு தமிழ்பெயர் என்பது மட்டும் அவசியமற்றதாகிவிட்டதா???. உங்கள் பதிவில் சொல்லப் பட்டுள்ள முக்கிய கலாச்சாரங்களை விட தமிழ்ப் பெயர் என்பது எந்த விதத்தில் குறைந்தது...


//நடிகர், நடிகைகளைக் காணக் கூடும் கூட்டம் போல, இதுபோன்ற தலைப்புகளுக்கு கூட்டம் வேண்டுமானால் அதிகம் வரலாம். ஆனால் உருப்படியாக ஒன்றும் விளையப்போவதில்லை//

உங்களுக்கு எதுவும் பயனில்லை என்று நினைக்கலாம்.. நான் பல நல்ல கருத்துக்களை பின்னூட்டங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்...


//பெயரைத் தமிழில் வைப்பதனால், எள் முனையளவு கூட மாற்றம் உண்டாகப்போவதில்லை//

இது நிச்சயம் தவறான கருத்து.. வேட்டி கட்டுவதால் என்ன மாற்றம் வரப்போகிறது.. எல்லாம் பேண்ட் போடுங்கள்.. பொங்கல் கொண்டாடுவதால் என்ன வரப்போகிறது எல்லாரும் ஹாப்பி நியூ ஹியர் கொண்டாடுங்கள்... இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்..

பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு... பெயரிலே கலாச்சாரம் இருக்கிறது ஒரு identity இருக்கிறது... தொல்காப்பியன் என்ற பெயரை கேட்டவுடன் அவன் தமிழன் என்கிற ஒரு அடையாள்ம் கிடைக்கிறது... ஆகாஷ் என்றோ.. ஜோசப் என்றோ ஷாகுல் என்பதிலோ மத அடையாளம் கிடைக்கலாம்..ஆனால் தமிழனென்ற அடையாள்ம் கிடைக்காது.. அது தான் வேண்டும் என்று நினைப்பது தவறென்று சொல்லவில்லை...ஆனால் தமிழ்ப் பெயர் வைப்பதால் என்ன இலாபம் என்று கேட்கிறீர்களே அதை தான் தவறு என்கிறேன்..

இதில் நான் கலாச்சாரத்தை கட்டி காக்கிறேன்.. தமிழை வளர்க்கிறேன் என்று பதிவு வேறு.. போங்க சார்...

ஜோ/Joe said...

நக்கீரன்,
"மற்ற மதத்தினர் ஏன் தமிழ் பெயர் வைபதில்லை" என்று மொட்டையாக கேட்டீர்கள் .கிறிஸ்தவர்களும் தமிழ் பெயர் வைக்கிறார்கள் என்பதை விளக்கமாக சொல்லியாகி விட்டது .குறைந்த பட்சம் அதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள் . இந்துக்கள் தங்கள் கடவுளர்களின் பெயர்களை வைத்துவிட்டால் அது தமிழ் பெயராகி விடாது .மதம் சாராத சுத்த தமிழ் பெயர் வைப்பதில் கிறிஸ்தவ தமிழர்கள் இந்து தமிழர்களுக்கு ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல .

தமிழர்கள் தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடே .என் பெற்றோருக்கு அந்த சிந்தனை இல்லாமல் போனாலும் ,எனக்கு அந்த சிந்தனை இருக்கிறது .என் மகனுக்கு நான் தமிழ் பெயர் தான் வைத்துள்ளேன்.

Nakkiran said...

//பெனடிக்ட்,
இவ்வளவு உதாரணங்கள் விளக்கம் சொன்னாலும் வேண்டுமென்றே குதர்க்கம் பேசும் வவ்வால் போன்றவர்களிடம் விவாதம் செய்வது வீண் வேலை .கிறிஸ்தவர்களின் தமிழ் பற்றுக்கு வவ்வால் போன்றவர்களிடம் சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியம் இல்லை ..வேறு வேலை இருந்தால் பாருங்கள்//

நீங்களும் தவறாகவே புரிந்து கொண்டுள்ளீர்கள்... கிருத்துவரும், இசுலாமியரும் தமிழ்ப்பெயர் வைப்பதில்லை என்று நான் சொன்னேன்.. அது தவறு கிருத்துவரும் தமிழ்ப்பெயர் வைக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள்.. அதை யாரும் மறுத்து சொல்லவில்லை.. ஆனால் பெனடிக்ட் தமிழ்ப்பெயர் வைப்பதால் ஒரு பிரயோசனமுமில்லை என்கிறார்.. அதைதான் வவ்வால் தவறு என்கிறார்..
நானும் தவறு என்கிறேன்...

//கிறிஸ்தவர்களின் தமிழ் பற்றுக்கு வவ்வால் போன்றவர்களிடம் சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியம் இல்லை//
இந்த பிரச்சனை எங்கிருந்து வந்தது...

அப்படியென்றால் தமிழ்ப்பெயர் வைப்பதால் ஒரு பிரயோசனமுமில்லை எனும் பெனடிக்டின் கருத்து உங்களுக்கு சம்மதமா?? கொஞ்சம் விளக்கவும்..

முன்னரே சொல்ல நினைத்து மற்ந்துவிட்டேன்.. சாதிக் (உண்மையாளன்) மிக நன்றாக இசுலாமியரின் சார்பாக கருத்து சொல்லியுள்ளார்.. மிக்க நன்றி..

Nakkiran said...

ஜோ
என் சென்ற பின்னூட்டம் உங்களின் கடைசி பின்னூட்டத்தை படிப்பதற்கு முன் போடப்பட்டது...


//.கிறிஸ்தவர்களும் தமிழ் பெயர் வைக்கிறார்கள் என்பதை விளக்கமாக சொல்லியாகி விட்டது .குறைந்த பட்சம் அதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள் //

எப்போதே ஒப்புக்கொண்டேன்.. பின்னூட்டத்தில் தான் தெரிவிக்கவில்லை,, இப்போது தெரிவிக்கிறேன்....

//. இந்துக்கள் தங்கள் கடவுளர்களின் பெயர்களை வைத்துவிட்டால் அது தமிழ் பெயராகி விடாது//

மிகத்தவறு...ஆன்மீகத்தமிழ் கேள்வி பட்டதில்லையா நீங்கள்.. சுத்த தமிழில் இருக்கும் பாசுரங்கள் மற்றும் இறை நூல்களை அறிந்ததில்லையா.. தமிழ் ஆன்மீகமும் ஒன்றை ஒன்றை வளர்த்து வந்துள்ளது என்று நான் மிகவும் நம்புகிறேன்...கிருபானந்தவாரியார் ஒரு நல்ல எடுத்துக்காட்டு...


//.மதம் சாராத சுத்த தமிழ் பெயர் வைப்பதில் கிறிஸ்தவ தமிழர்கள் இந்து தமிழர்களுக்கு ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல//

மதம் சார்ந்தே கூட வையுங்கள் ஆனால் தமிழ் பெயர் வையுங்கள்... .

//தமிழர்கள் தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடே .என் பெற்றோருக்கு அந்த சிந்தனை இல்லாமல் போனாலும் ,எனக்கு அந்த சிந்தனை இருக்கிறது .என் மகனுக்கு நான் தமிழ் பெயர் தான் வைத்துள்ளேன். //

மிக்க மகிழ்ச்சி.. பெரிதும் பாராட்டுகிறேன்...புரிதலுக்கு நன்றி

ஜோ/Joe said...

//மதம் சார்ந்தே கூட வையுங்கள் ஆனால் தமிழ் பெயர் வையுங்கள்... .//
கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும் .இந்துக்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தின் ,குல தெய்வத்தின் பெயரை வைக்க விரும்புகிறார்கள் . அதே போல் கிறிஸ்தவர்களும் தாங்கள் புனிதர்களாக நம்பும் பெயரை வைக்கிறார்கள் .இந்து ராமதாசன் என்றால் கிறிஸ்தவன் இயேசு தாசன் என்கிறார்கள் .இந்து முருகனடிமை என்றால் கிறிஸ்தவர்கள் இயேசடிமை என்று வைக்கிறார்கள் ,மரிய இருதயம் என்று வைக்கிறார்கள் .அண்டனி என்பதை கூட பெரும்பாலும் அந்தோணி என்று வைக்கிறார்கள் ..ஐயா! செந்தில் ,முருகேசன் என்றெல்லாம் இந்து கடவுள் பெயர் தாங்கி வைத்தால் மட்டும் தான் தமிழ் பெயரா ? அந்தோணி அடிமை என்றால் கூட குறை சொல்வீர்களா ஐயா ? அப்படியென்றால் ஜோசப் ,பெனடிக்ட் போன்ற கத்தொல்லிக்க புனிதர்களின் பெயரை தமிழ் படுத்தி தர முடியுமா ?

வவ்வால் said...

நன்றி நக்கீரன்,

நான் சொன்னது என்னவென்று நீங்களே விளக்கிவிட்டீர்கள் , நான் அவரது பெயர் தான் அன்னியம் என்று சொன்னேன் , நபர்களையே அல்ல என்பது அவருக்கு புரிந்தால் சரி.

கடவுள் பெயரிலும் தமிழ் பெயர்கள் இருக்கிறது என்பதை சொன்ன பிறகும் அதையே சொல்கிறார்களே!

எதன் சார்ந்த பெயரோ தமிழ் பெயராக இருந்தால் போதும் என்பது தான் இங்கே பேசப்படுகிறது மதம் எல்லாம் அல்ல!

ஜோ மற்றும் பெனடிக்ட் ஏன் இப்படி அதீதமாக உணர்ச்சிவசப்படுகிறார்கள். எனக்கும் இவர்கள் யாரிடம் இருந்தும் நல்ல பையன் சான்றிதழ் தேவைப்படவில்லை :-))

Agathiyan John Benedict said...

நன்றி திரு. ஜோ அவர்களெ.

அண்ணன் வவ்வால் அவர்களே,
நீங்க ரொம்ப நல்ல பையன் தான்... இதுல என்ன சந்தேகம்...? -:))

வவ்வால் மற்றும் நக்கீரனார் அவர்களே,
பல தளங்களில், பல தடவைகளில், பல கோணங்களில், பல்வேறுபட்ட நபர்களால் விவாதிக்கப்பட்டு எதையுமே சாதித்திடாத புளிச்சுபோன பழைய பண்டம் தான் இந்தத் தலைப்பு. உங்களுக்கு வேண்டுமானால் புதிதாகத் தோன்றலாம். "பெயரளவில்" தமிழனாக இருப்பதைவிட, "செயலளவில்" தமிழனாக இருப்பது தான் தமிழுக்குக் கிடைக்கும் "உண்மையான பயன்". நண்பர் ஜோ சொன்னது போல, என் நேரத்தை வீண் விவாதத்தில் வீணாக்க விரும்பவில்லை.

நக்கீரனார் அவர்களே,
இந்தக் கூத்தை நீங்கள் தொடர விரும்பினால்...
//இந்து மதத்தினர் மட்டுமே தமிழில் பெயர் சூட்ட வேண்டுமா என்ன? ஏன் இசுலாமியரும், கிருத்துவரும் ஏன் தமிழில் பெயர் சூட்ட மறுக்கிறார்கள்.//
என்ற வசனங்களை முதலில் நீக்கிவிட்டு, அதாவது, எல்லாத் தமிழர்களையும் தமிழில் பெயர் சூட்டிக்கொள்ளச் சொல்லி பொதுவாக வேண்டுகோள் விடுக்கும் வகையில் வசனங்களை மாற்றித் தொடருங்கள். ஒரு பண்பட்ட எழுத்தாளன் அப்படித்தான் எழுதுவான்.

உங்கள் அனைவரின் நேரத்திற்கும் நன்றிகள் பல.

Sundar Padmanaban said...

துளசிக்கா, வெளவால்

//அவ்வை//

'வெளவால்' 'ஒளவை' 'ஐயா' ஒன்று ஒளகாரத்தையும் ஐகாரத்தையும் உபயோகிக்காமல் ஏன் அவ்வை, வவ்வால், அய்யா, அய்யப்பன் என்று எழுதுகிறார்கள்? யாராவது விளக்குவார்களா?

ஒரு படத்தில் விவேக்கும் (யாகவா) மயில்சாமியும் தொலைக்காட்சியில் தோன்றும் நிகழ்ச்சியில் 'நீ ஒளவையாரையே ஒ-ள-வை-யார் னு படிக்கறவன்' என்று ஓட்டுவார். அம்மாதிரி தவறாகப் படிக்காமலிருக்க ஒள -வை அவ் - என்று எழுதுகிறார்களோ? ஆனால் 'ஐயா' வை ஏன் அய்யா என்று எழுதவேண்டும்?

நன்றி.

Anonymous said...

//அப்படியென்றால் ஜோசப் ,பெனடிக்ட் போன்ற கத்தொல்லிக்க புனிதர்களின் பெயரை தமிழ் படுத்தி தர முடியுமா ?
//
திருச்சி செயிண்ட் ஜோஸப் கல்லூரி தற்போது புனித வளனார் கல்லூரி என்று வழங்கப்படுகிறது.

வவ்வால் said...

சுந்தர்,
//வெளவால்' 'ஒளவை' 'ஐயா' ஒன்று ஒளகாரத்தையும் ஐகாரத்தையும் உபயோகிக்காமல் ஏன் அவ்வை, வவ்வால், அய்யா, அய்யப்பன் என்று எழுதுகிறார்கள்? யாராவது விளக்குவார்களா?//

இந்த எழுது சீர் திருத்தம் கொண்டு வந்தது பெரியார் , அவர் அப்படி செய்யக்காரணம் , அச்சு அடிக்கும் போது குறைவாக பயன்படும் இந்த எழுத்துகளுக்காகவும் தனி அச்சு வார்க்க வேண்டும் ,அச்சுகோர்க்கவும் சிரமம் அதற்கு பதில் ஏற்கனவே இருக்கும் எழுத்துகளை கொண்டு அதே ஒலியை தரும் வண்ணம் எழுதலாம் என கொண்டுவந்து அப்படியே அவரது விடுதலைப்பத்திரிக்கையும் வெளிவந்தது.

ஐ கூட சிலர் ஜ எனப்படிக்க வாய்ப்புள்ளது அல்லவா?

Machi said...

//'ஐயா' வை ஏன் அய்யா என்று எழுதவேண்டும்?//
வற்றாயிருப்பு சுந்தர், இவ்வாறு எழுதலாம் இது தவறில்லை என்று இராம.கி அய்யாவும் தன் பதிவில் கூறியிறுக்கிறார்.


//அப்படியென்றால் ஜோசப் ,பெனடிக்ட் போன்ற கத்தொல்லிக்க புனிதர்களின் பெயரை தமிழ் படுத்தி தர முடியுமா ? //
எப்படி ஆண்டனி அந்தோணி ஆனாரோ அது போல தான் :-) தமிழ் & கிறுத்துவத்தில் புலமையுடையர்கள் தான் தமிழ்படுத்த முடியும்.

இயக்குனர் சந்திரசேகர், அவர் மனைவி சோபா, அவர்கள் மகன் நடிகர் விஜய் கூட கிறுத்துவர் தான். நடிகர் விக்ரம் கூட கிறுத்துவர் தான்.

தமிழ் பெயருள்ள இசுலாமியர்கள் உள்ளதாக எனக்கு தெரியவில்லை.

//"பெயரளவில்" தமிழனாக இருப்பதைவிட, "செயலளவில்" தமிழனாக இருப்பது தான் தமிழுக்குக் கிடைக்கும் "உண்மையான பயன்"//
உண்மை பெனடிக்ட், "பெயரளவில்" என்பதைவிட "பெயரில்" வைப்பது செயல் ஆகாதா?

கண்ணனை கேனன் என்றும் தேவியை தெவி என்றும் தான் உச்சரிக்கிறார்கள்.

//அமெரிக்கரும் சரி தமிழரல்லாத இந்தியரும் சரி, மருத்துவமனையிலும் சரி, மகளின் பள்ளியிலும் சரி மகளின் பெயர் படாதபாடு படுகிறது.//
அவங்க உங்க பெயரை சரியாக உச்சரிக்கிறார்களா? :-)
அவங்க எந்த தமிழ் பெயரை தான் சரியாக உச்சரிக்கிறார்கள் :-))

பலத்த எதிர்ப்புக்களுக்கிடையே உங்கள் மகளுக்கு தமிழ் பெயர் வைத்தமைக்காக பாராட்டுக்கள்.

வாசகன் said...

//மற்ற மதத்தினர் ஏன் தமிழ் பெயர் வைப்பதில்லை? //

அப்படின்னா, நீங்கள் சார்ந்த மதத்தினர் (எந்த மதம்னு தெரியாது) அனைவரும் தமிழில் தான் பெயர் வைத்துக்கொள்கிறார்களா?

தலைப்பில் -மற்ற- என்ற சொல்லை நீக்குவதே நேர்மையாக இருக்கும்!

நீக்கிவிட்டால் 'மதத்தினர் ஏன் தமிழ்(ப்) பெயர் வைப்பதில்லை?' என்று ஆகும்.

கேள்வியிலேயே விடை வைத்திருக்கும் வினா இது!

Sundar Padmanaban said...

//இந்த எழுது சீர் திருத்தம் கொண்டு வந்தது பெரியார் //

இது எனக்குச் செய்தி. நான் இது வரை எழுத்துச் சீர்திருத்தம் என்றால் வாத்து வடிவ னை, ளை போன்றவைகளை மாற்றியது என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். எழுத்து மட்டும்தான் அச்சிடுவதற்கு வசதியாக மாற்றப்பட்டிருக்கிறது என்று நம்பியிருந்தேன். ஆனால் அய், ஐ இரண்டிற்கும் - அதே போல் அவ், ஒள இரண்டிற்கும் ஒலி வேறுபாடுகள் இருக்கின்றனவே (அது சரி. ள,ழ,ல வை ஒழுங்காக உச்சரிப்பதற்கே பெரும்பாடு படும் தமிழருக்கு இம்மாதிரி நுண்ணிய வேறுபாடுகளைச் சொன்னால் புரியுமா என்று தெரியவில்லை.). இதை ஏன் சீர்திருத்தவேண்டும் என்று புரியவில்லை.

ஏற்கனவே சில ஒலிகளுக்கு தமிழில் எழுத்துகள் இல்லை என்றொரு குறை நீண்ட நாட்களாக இருக்கிறது (F - போன்றவை). அதையும் வடமொழி எழுத்துகளுக்குத் தமிழ் எழுத்து உருவாக்கி (ஹ, ஸ, ஷ போன்றவை) உருவாக்கிச் சமாளித்து வருகிறோம். இருப்பதை ஏன் ஒழிக்க வேண்டும் என்று புரியவில்லை.

வாத்து னை-யை னை-யாக்கியதில் உச்சரிப்பு/ஒலி சிதைக்கப்படவில்லை. அதே போலவே ஊ, ஓ, ஏ, ஆ, ஈ போன்ற உயிரெழுத்துகளை எடுத்துவிட்டு உ, ஒ, எ, அ, இ போன்றவையோடு துணைக்கால் போட்டாலும் உச்சரிப்பு சிதையாது. ஆனால் ஐ-யை அய் என்பதிலும் ஒள
விற்கு அவ் என்று சொல்வதிலும் உச்சரிப்பு வேறு படும். 'ஒளடதம்' என்பதை 'அவுடதம்' என்றா எழுத / உச்சரிக்க முடியும்?

//ஐ கூட சிலர் ஜ எனப்படிக்க வாய்ப்புள்ளது அல்லவா//

வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஜ என்பது தமிழ் எழுத்து இல்லை (உயிர், மெய், உயிர்மெய்). ஆதலால் அந்தப் பிரச்சினை பரவலாக இல்லை. என்னையும் சுந்தரராசு என்றுதான் ஆச்சிகளும் அப்பத்தாக்களும் விளிப்பார்கள்! :-)

என்னமோ போங்க.

இழையிலிருந்து விலகுகிறேன் - ஆதலால் இதோடு நாம் நிறுத்திக் கொள்ளலாம் - இன்னொரு பொருத்தமான இழையில் (அல்லது இழையைத் துவங்கிப்) பேசலாம்.

நன்றி வவ்...சட்... வெளவால்.

Anonymous said...

////வாசகன் said...
//மற்ற மதத்தினர் ஏன் தமிழ் பெயர் வைப்பதில்லை? //

அப்படின்னா, நீங்கள் சார்ந்த மதத்தினர் (எந்த மதம்னு தெரியாது) அனைவரும் தமிழில் தான் பெயர் வைத்துக்கொள்கிறார்களா?

தலைப்பில் -மற்ற- என்ற சொல்லை நீக்குவதே நேர்மையாக இருக்கும்!

நீக்கிவிட்டால் 'மதத்தினர் ஏன் தமிழ்(ப்) பெயர் வைப்பதில்லை?' என்று ஆகும்.

கேள்வியிலேயே விடை வைத்திருக்கும் வினா இது!

Saturday, September 08, 2007 5:58:00 AM ////

VERY GOOD.