Friday, July 27, 2007

இந்தியாவில் இந்தியனாய் இருத்தல்

திரு.மோகன்தாஸ் அவர்களின் பெங்களூரில் இந்தியனாய் இருத்தல் பதிவை படித்த போது, எனக்கும் இது போன்ற அனுபவங்கள் சில நான் பெங்களூரில் இருந்த ஆறே மாதத்தில் பல நடந்தது ஞாபகத்திற்கு வந்தது.


நானும் என் நண்பனும் பெங்களூரில் மாநகர பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். ஏதேதோ பேசிக்கொண்டிருந்தபோது எங்கள் பேச்சு இளையராஜா இசை மீது திரும்பியது. நானும் என் நண்பனும் இருவருமே இளையராஜா ரசிகர்கள் என்பதால் அவரைப் பற்றி பெருமையாகவும், அவரின் சில அற்புத தமிழ் சினிமா பாடல்களை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். தீடீரென் என் அருகில் இருந்த ஒரு பயணி, கன்னடத்தமிழில், "நீ இருப்பது கர்நாடகா.. சம்பாரிப்பது கர்நாடகா, பேசறுது மட்டும் தமிழ்நாட்டை பத்தி... ஏன் திரும்பி தமிழ் நாட்டுக்கே போக வேண்டியது தானே" என்று செல்லமாக மிரட்டினார். அப்போது தான் நாங்கள் பயணித்து கொண்டிருக்கும் சூழ்நிலையை நான் உணர்ந்தேன். என் நண்பன் உணர்ச்சிவசப்பட்டு இந்தியா, சுதந்திரம், பேச்சுரிமை என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டான். ஏதாவது பிரச்சனையானால் எங்களுக்கு ஒரு ஆதரவு வார்த்தைக் கூட கிடைக்காது என்பதை உணர்ந்த நான் என் நண்பனை அடக்கி கூட்டி வந்தேன்.


இன்னொரு சம்பவம், அதற்கு முன்னால் ஒரு சின்ன நோட். நான் கன்னடம் தெரியாத, கால்குறை இந்தி (இப்போ அரைகுறை.. நண்பர்கள் மூலமா கத்துக்கிறேன்) , தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த தமிழன். அன்று என் பைக்கில் எங்கோ பெங்களூரின் வடபகுதிக்குச் செல்ல வேண்டியிருந்தது. நண்பன் குத்துமதிப்பாக வழி சொல்லியிருந்தாலும் சரியாக தொலைந்து விட்டேன். சரி என்று வழியில் போனவரை மடக்கி முகவரியைச் சொல்லி வழி கேட்டால் அவர் தெளிவாக கன்னடாவில் விளக்க ஆரம்பித்தார். அவரை தடுத்து அய்யா நமக்கு கன்னடம் தெரியாது என்று சொன்னேன். என்னை ஒரு 5 வினாடிகள் உற்று பார்த்துவிட்டு தமிலா?? என்றார். ஆமாம் என்று சொன்னேன். உடனே, போய் தமிழ்நாட்டுல போய் அட்ரஸ் கேட்டுக்கோ என்று சொல்லிவிட்டு ஒரு எரிச்சல் பார்வை பார்த்தபடி நடையைக் கட்டினார்.


அதன்பிறகு நான் எப்போதும் பெங்களூரில் வசிப்பதை விரும்பியதில்லை. இதுகுறித்து நான் பல தடவை பெங்களூர்வாழ் தமிழ் நண்பர்களிடம் பேசியபோது அவர்கள் என் கருத்தை மறுத்தே வந்தனர். நாங்கள் பல வருடங்களாக இங்கு உள்ளோம் எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என சொல்வார்கள். சிலசமயம் நான் தான் தவறான எண்ணம் வைத்துள்ளேனோ? என்று கூட எண்ணியதுண்டு. இன்று திரு.மோகன்தாஸ் பதிவை பார்த்த போது, என் எண்ணத்தில் எந்த தவறும் இல்லை என்று விளங்கியது.


சரி, அதற்கு ஏன் இந்த தலைப்பு என்கிறீர்களா? இதே கருத்தை நான் ஒரு வட இந்திய நண்பனிடம் ஏதோ ஒரு விவாதத்தின் மீது சொன்ன போது அவன் நக்கலாய் சிரித்தபடி, மெட்ராஸில் நான்- டமிலியன்ஸ எப்படி ட்ரீட் பண்ணுவாங்க தெரியுமா என்றான். மேலும் நடந்த விவாத்தில், அடுத்த மாநில மக்களின் நம் தமிழ்நாட்டை/சென்னையை பற்றிய எண்ணங்கள்


1) தமிழ்நாட்டில் தமிழரல்லாதோர் வாழமுடியாது

2) இந்தியையும், இந்தியாவையும், மற்ற மாநிலத்தவர்களையும் வெறுப்பவர்கள். தனிநாடு கேட்பவர்கள்.

3) மரியாதை தெரியாதவர்கள். யாரையும் மரியாதையாக விளிக்கமாட்டார்கள்

4) சென்னை ஆட்டோஒட்டுநர்கள் ஏமாற்று பேர்வழிகள்

5) தமிழரல்லாதோர் இந்தியில் பேசினால், இந்தி தெரிந்தாலும் தமிழில் தான் பதில் சொல்வார்கள்.

6) சென்னை, ஒரு மக்கள் வாழமுடியாத காலநிலையை கொண்டுள்ளது

7) தமிழரல்லதோர், சென்னையில் வசிக்க விரும்ப மாட்டார்கள். அப்படியே கட்டாயம் ஏற்பட்டாலும் அதை ஒரு தண்டனையாகத்தான் நினைப்பார்கள்.


என்னால் இது போன்ற கருத்துக்களை ஒப்புக்கொள்ளவே / ஜீரணிக்கவே முடியவில்லை. எனக்கு தமிழ்நாடும் சென்னையும் சொர்க்கம். நீங்கள் எண்ணுவது தவறு என்று அவருக்கு விளக்க பலமாக முயற்சித்தேன். விவாதத்தின் முடிவில், பிறமாநிலத்தவர் தமிழகத்தை பற்றி இப்படி தான் எண்ணுகிறார்கள் அவர்களின் எண்ணங்களை மாற்றுவது மிகக் கடினம் என்பதை மிகுந்த மன பாரத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது. இதுதான் இந்தியா... பல கலாச்சாரம், இனம், மதம், மொழி இருப்பதால் பிரச்சனை ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்துகொண்டே தான் இருக்கும் என்பதை ஒப்புக்கொள்வதை தவிர வேறு வழியில்லை..

12 comments:

வவ்வால் said...

அய்யா மற எந்த மானிலத்தவரையும் விட அடுத்த மொழி பேசுவோரிடம் அதிக மரியாதை காட்டுவதில் சென்னை வாழ் மக்கள் முன்னிலை வகிக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

அதற்கு காரணம் நம் ஆட்களுக்கு இருக்கும் ஆங்கில மோகம் , யாராவது தமிழ் அல்லாத மொழி பேசி விலாசம் விசாரித்தால் தெரியாது என்று சொல்லாமல் யு கோ லெப்ட் அப்ரம் ரைட் என்று வழி சொல்வார்கள் சென்னையில், மற்ற மாநிலத்தில் அப்படி இல்லை. அன்னிய மொழி பேசுபவனை எதிரியாக இங்கே பார்க்கும் மனோபாவம் இல்லை. இல்லை என்றால் இத்தனை ஆர்ய பவன், உடுப்பி ஹோட்டல்கள் இருகுமா?

Thekkikattan|தெகா said...

நக்கீரன் மற்றும் வவ்வாலுடன் ஒத்துப் போகிறேன். தமிழகத்தை பொறுத்த மட்டும் கண்டிப்பாக பிற மாநிலத்தவருக்கும், வெளி நாட்டவருக்கும் நல்ல மரியாதையுடன் கூடிய வரவேற்புள்ளது என்பதே எனது புரிதலும்.

எனக்கும் சில தனிப்பட்ட அனுபவங்கள் உண்டு. ஒரு முறை நான் வட இந்தியா சென்ற பொழுது, நீ மாதராஸியா என்று கேவலமாக விளிக்கப்பட்டு, அவர்களுக்குள் கேலி பேசியதை கண்ணுற்றேன். பிறகு, படித்தவர்கள் போல் காட்சியளிக்கும் மக்களிடையே வழி கேட்டு விசாரிக்கும் பொழுதும் கூட விடாது ஹிந்தியிலேயே பதிலுரைத்ததையும் நினைவு கூர்கிறேன்.

பிறகு ஒருவர் பீகாரி, ரிஷிகேசம் ரயிலில் சந்தித்தப் பொழுது வங்கியில் வேலை பார்க்கும் அவர் எப்படி ஆங்கிலத்தை துணைக் கல்வியாக பள்ளிகளில் வைப்பதை தடை செய்ய வேண்டுமென்று ஆணித்தரமாக பேசிக்கொண்டு வந்ததோடு, எனக்கு ரிஷிகேசத்தில் தங்கும் வசதி செய்து தருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி வந்தவர், நான் பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு பாடமாக வைப்பதின் மூலம் என்ன பிரயோசனமென்று பேசுவதைக் கேட்டு, ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியதும் ஆள் காணமல் போயே விட்டார். இப்படியாக உள்ளது எனது "இந்தியர்" என்ற பயணங்களின் ஊடே அறிந்து கொண்ட இந்தியா.

சின்னப் பையன் said...

தண்ணீருக்காக நாம் அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதாலேயே இப்படி செய்கிறார்கள் என்றால், ஒரே வழி, வெள்ளம் வந்து அவர்கள் அணைகளை திறந்து தாராள மனதுடன் தண்ணீர் விடும்போது, இப்போது எங்களுக்கு வேண்டாம், பிறகு வாங்கிக்கொள்கிறோம் என்று தமிழ்னாட்டுக்கு தண்ணீர் வரும் வழிகளை அடைத்து விட வேண்டும். இப்படி செய்ய முடியுமா என்று தெரியவில்லை... ஆனால், செய்தால், அவர்கள் நம்மை வெறும் ஒரு வடிகாலாக பயன்படுத்தாமல் இருக்க வைத்து, நம்மை மதிக்கும்படி செய்யவைக்கலாம்...

Anonymous said...

ஒரு தமிழனாக பின்வருவற்றை வழிமொழிகிறேன்.

// 4) சென்னை ஆட்டோஒட்டுநர்கள் ஏமாற்று பேர்வழிகள்
// 6) சென்னை, ஒரு மக்கள் வாழமுடியாத காலநிலையை கொண்டுள்ளது

தமிழனாகவே இதையும்..

// 7) தமிழரல்லதோர், சென்னையில் வசிக்க விரும்ப மாட்டார்கள். அப்படியே கட்டாயம் ஏற்பட்டாலும் அதை ஒரு தண்டனையாகத்தான் நினைப்பார்கள்.

இதில் தமிழரல்லாதோர் என்பதற்க்கு பதிலாக, சென்னையில் பிறக்காதோர்/ வாழக் கட்டாயப்படுத்தப்படாதோர் என்று படித்துக்கொள்ளவும்

துளசி கோபால் said...

யாருங்க தமிழ்நாட்டைப் பத்தி இப்படியெல்லாம் சொன்னது?

தமிழ் சினிமாவைப் பாருங்க, தமிழ் தெரியாதவங்கதான் கதாநாயகிகளா
நடிக்கறாங்க. நடிப்பு மட்டுமா ஆடறதுக்கு, குழு நடனம் எல்லாத்துக்கும்
'மும்பை மாடல்ஸ்'தான்.

இவ்வளோ என்னாத்துக்கு, உதித்நாராயணனையே பாட வச்சுப் புண்ணியம்
கட்டிக்கிட்டவங்க நம்மாளுங்கதானே?

தமிழ்நாட்டுலே தமிழனா இல்லேன்னாத்தான் மதிப்பு கூடுதல்(-:

பின்னூட்டத்துலே இந்த 'பூச்சாண்டி' சொன்னதை அடிக்கடி வீட்டுலே சொல்லிப் புலம்புவேன்.
இப்ப இங்கே அவர் எழுதுனதைப் பார்த்ததும் 'அட! நம்மளை மாதிரியே நினைக்கிறவர்'னு
இருக்கு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எனக்குத் தெரிந்த 2 பிரன்சுப் பெண்கள் தமிழ்நாடு,கர்நாடகா,கேரளா,டெல்லி சென்றவர்கள்.
தங்களுக்குப் பிடித்த இடம் சென்னை, அதுவும் தோசை சாம்பார் பற்றி
10 வருடத்தின் பின்பும் பேசுகிறார்கள்.

Unknown said...

தமிழர் அல்லாதோருக்கு மரியாத குடுக்குறதுல தமிழன் எப்போமே டாப்புதான்.

TBCD said...

பொதுவாக தமிழ் நாட்டைப் பற்றி பரவலாக இது போன்ற குற்றச்சாட்டு உண்டு..
எந்த ஊருக்கு போறோமோ..அந்த் இடத்துக்கு தகுந்தவாறு நாம் அந்த மொழியே குறைந்த அளவிளேனும் கற்றுக்கொள்ள வேன்டும்... ஆனால், தமிழன் கன்னடம் பேசினாலும் அங்கே இழிவு படுத்தப்படுவான் என்பது தான் வேதனைக்குரிய விடயம்...
இது குறித்து நான் எழுதிய பதிவு
அடி தமிழன !

Hariharan # 03985177737685368452 said...

2) இந்தியையும், இந்தியாவையும், மற்ற மாநிலத்தவர்களையும் வெறுப்பவர்கள். தனிநாடு கேட்பவர்கள்.

3) மரியாதை தெரியாதவர்கள். யாரையும் மரியாதையாக விளிக்கமாட்டார்கள்

இது சென்னை மாநகரம் + சென்னையை சுற்றி 100கி.மீ சுற்றளவிலான தமிழ்நாடு என்பது சரியாக இருக்கும்

4) சென்னை ஆட்டோஒட்டுநர்கள் ஏமாற்று பேர்வழிகள்

இது மறுக்க முடியாத 95% உண்மை


6) சென்னை, ஒரு மக்கள் வாழமுடியாத காலநிலையை கொண்டுள்ளது

கொஞ்சம் மாத்தி மக்கள் வாழமுடியாத நதிகளைக் கொண்டுள்ளது என்பது 200% உண்மை

7) தமிழரல்லதோர், சென்னையில் வசிக்க விரும்ப மாட்டார்கள். அப்படியே கட்டாயம் ஏற்பட்டாலும் அதை ஒரு தண்டனையாகத்தான் நினைப்பார்கள்.

தமிழர்களேகூட இப்படி நினைப்பதில்லையாமா??

1991 ஆகஸ்டில் நடந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வருகிறது. ராஜஸ்தானின் அஜ்மீர் நகரில் வேலை சம்பந்தமான ப்ளாண்ட் பயிற்சிக்குச் சென்ற சமயம், ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு இரண்டு மாதங்களே ஆகியிருந்த நிலையில் எங்கள் தொழிற்சாலையில் இருந்த சீக்கியர் ஒருவர் நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்றதும் ஹிந்தியில் தமிழ்நாட்டில் மழை இனி பெய்யாது என்று சபித்தார்...

நான் மொழிப்போர் கட்டாயத் தியாகியானதால் ஹிந்தியில் பதில் சொல்ல முடியவில்லை...

மனசுக்குள் ராஜீவ் காந்தியைக் கொன்னது இந்திய-தமிழ்நாட்டுக்காரன் இல்லய்யான்னு சொல்லணும்ற ஃபீலிங்கை ஆஸ்கர் ஆக்டிங்கா செஞ்சுகாட்டினாலும் முடியலை...

போய்யா உங்காளு சிங் ஒருத்தர் மெய்க்காப்பாளரா இருந்துட்டே இந்திரா காந்தியைப் சுட்டுப்பொசுக்கினப்புறமா பஞ்சாப்ல பஞ்சமா வந்துச்சுன்னு மனசுக்குள்ள ஒரு டயலாக் ஓடிச்சு..
(துடிப்பான ராஜீவ்காந்தி செத்ததுல நிஜமாவே நிறைய வருத்தம் உண்டு எனக்கு.)

இணைப்புக்காக ஒரு இந்திய மொழியா ஏற்கனவே பல மாநிலங்களில் பேசப்படும் ஹிந்தி தமிழகத்திலும் புழக்கத்தில் இருந்தா அது நமக்கு நல்லதுதான்.

vaalvasaava said...

sir ungala madiriye elorum ninaithal namma indiya yendha pudungiyum onum seiya mudiyadhu nice

Nakkiran said...

வவ்வால்
Thekkikattan|தெகா
Boochandi
அட, பேரா முக்கியம்?
துளசி கோபால்
யோகன் பாரிஸ்(Johan-Paris)
தஞ்சாவூரான்
TBCD Hariharan # 03985177737685368452
vaalvasaava

உங்கள் அனைவருக்கும்,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

K.R.அதியமான் said...

நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது

இந்தியர்களான நாம், நேர்மை மற்றும் உண்மை போன்ற மிக முக்கிய குண நலன்களை, சுதந்திரத்திற்குப் பிறகு இழந்துள்ளோம். ஊழல் பெருகியுள்ளது. அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. வாக்களிக்கும் பொதுமக்கள் பணம் மற்றும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு வாக்குகளை விற்கின்றனர். மக்களுக்க ஏற்ற அரசாங்கமே அமையும் என்பது பொது விதி.

சோசியலிசக் கொள்கைகள், உயர்ந்த லட்சியம் உள்ள தலைவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. சித்தாந்தம் என்பது வேறு, நடைமுறை என்பது வேறு. "நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தானாலும் உண்டாகிறது" என்பது ஒரு பழமொழி.

பணக்காரர்கள் மீது மிகக் கடுமையான வரி விதித்து அதை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் செலவு செய்ய முயன்ற சோசியலிஸக் காலங்களில் உச்சக்கட்டமாக 98 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டது (1971). மனிதனின் இயல்பான குணம் சுயநலம். தனக்கு ஒரு லாபம் அல்லது ஆதாயம் முழுமையாகக் கிடைத்தால் மட்டுமே ஒரு செயலை முழு மனதுடனும், ஊக்கத்துடனும் செய்வான். அச்செயலினால் கிடைக்கும் லாபத்தைப் பாதுகாக்க சட்டத்தை மீற முற்படுவான். அதனால் நேர்மை குறையும்.

அதுதான் இங்கு நடந்தது. வருமான மற்றும் உற்பத்தி வரிகளை ஏய்க்க முற்பட்டனர் முதலாளிகள். அதிகாரிகள் அதற்குத் துணை போயினர். பெர்மிட், லைசன்சு தருவதற்கு லஞ்சம் கேட்டனர் அரசியல்வாதிகள். கடமையை செய்யாமல் உரிமையை மட்டும் கருத்தாக கேட்டனர் அமைப்பு சார்ந்த மற்றும் அரசாங்க அமைப்புகளைச் சார்ந்த தொழிலாளர்கள். லைசன்ஸ் மற்றும் கட்டுப்பாடுகளால் கடுமையான பற்றாக்குறை உண்டானது. சிமிண்டு இன்று எளிதாக கிடைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் சிமண்ட் உற்பத்தியில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததால் கடும் பற்றாக்குறை. கருப்பு மார்க்கெட், லஞ்சம், பதுக்கல், கடத்தல், இன்று கேட்க தமாஸாக இருக்கிறதா? பழையக் கருப்பு வெள்ளைப் படங்களில் வில்லன்கள் சிமிண்ட், சர்க்கரை மற்றும் பருத்தி நூல் பேல்களை பதுக்கி வைப்பர். கடத்துவார்கள்!

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தனியார் உற்பத்தி வேண்டிய அளவு பெருக தாரளமாக அனுமதிக்கப்பட்டவுடன் இன்று அந்த மாதிரியான தமாஸ் காட்சிகள் இல்லை. உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை மேம்படுத்தி விடலாம். ஆனால் இழந்த குணங்களை மீண்டும் உயிர்ப்பிக்க பல காலமும் பல தலைமுறைகளும் பிடிக்கும் போல் தெரிகிறது.

சர்வ சாதாரணமாக நாம் அனைவரும் அரசாங்க விதிகளையும் சட்டங்களையும் மீறும் தன்மையைப் பெற்று விட்டோம். அளவுக்கு அதிகமான வருமான வரியை ஏமாற்ற ஆரம்பித்து இன்று அனைத்து வரிகளையும் ஏமாற்றுவதை ஒரு கலையாகக் கற்றுள்ளோம். சாலை விதிகள், மென்பொருள் மற்றும் சினிமா துறைகளின் காப்புரிமை விதிகளை மீறுகின்றோம். திருட்டு விசிடி, மென்பொருள்களையும் பயமின்றி கூச்சமின்று பயன்படுத்துகிறோம்.

வேலை செய்யாமலேயே ஊதியம், தகுதி இல்லாமலும் மான்யம், இலவசங்களுக்காக தன்மானத்தையும் நேர்மையையும் இழந்துள்ளோம். பிச்சைக்காரப் புத்தி மிகவும் அதிகரித்துள்ளது. ஓசியில் கிடைச்சா பினாயிலைக் கூட குடிக்கத் தயாராக உள்ளோம். ஒரு LPG சிலிண்டருக்கு அரசாங்கம் நமக்கு ரூபாய் 200 மான்யமாக, இனாமாக தருவதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். குறைக்க முற்பட்டால் எதிர்க்கிறோம்...

http://nellikkani.blogspot.com/