Monday, May 18, 2009

தமிழனை அழிப்பவர் யார்?

தமிழன் இத்தனை நாள் சாதியால், மதத்தால், பொருளாதாரத்தால் பிளவு பட்டிருந்தான் என்று கவலை கொண்டோம். அதனால் பல பிரச்சனைகளில் ஒற்றுமையற்று அடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் இன்றோ கட்சியால் பிளவுண்டு கிடக்கிறோம். அதற்கு நாமளித்துக் கொண்டிருக்கும் விலை ஈழத்தில் ஒவ்வொரு நொடியும் விழும் பிணங்கள். சாதியால் பிளவுண்ட போது கூட இவ்வளவு பெரிய விலை கொடுக்கவில்லை, மதத்தால் பிளவுண்ட போது கூட இவ்வளவு பெரிய விலை கொடுக்கவில்லை. ஆனால் கட்சியால் பிளவுண்டிருக்கும் போது அளித்துக் கொண்டிருக்கும் விலை கொடியது.

கட்சி பேதங்கள் மறந்து இப்பிரச்சனைக்காக ஒட்டு மொத்த தமிழினமும் கடந்த ஆண்டே போராடியிருந்தால் இப்பேரவலம் தவிர்க்கப் பட்டிருக்கும். கலைஞர் ஏதோ கொஞ்சம் போல போராடிய போது அம்மா ஈழத்தமிழருக்கு எதிராக அறிக்கை விடுத்து கலைஞருக்கு தெம்பூட்டிவிட்டார். இப்பொழுது தேர்தலுக்காக தமிழீழம் என்று முழங்கிய அம்மையார் அன்றே முழங்கியிருந்தால் கலைஞரும் இன்னும் தீவிரமாக போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார். அல்லது பா ம க ஆவது ஒழுங்காக கலைஞருக்கு ஆதரவளித்திருந்தால், அவருக்கு காங்கிரசின் தயவு தேவைப்பட்டிருக்காது.

ஒட்டு மொத்த தமிழககட்சிகளும் காங்கிரசை தீண்டதகாத கட்சியாக்கிருந்தால் சோனியா இன்று சீக்கியரிடம் பம்முவது போல தமிழரின் காலில் விழுந்திருப்பார். அல்லது தமிழக மக்களாவது எட்டு எம்பிக்களை காங்கிரசுக்கு அளிக்காமலிருந்திருந்தால் தமிழன் மானமிக்கவன் என்று பயந்திருப்பார். ஈழத்தில் நாம் விளையாடினால் அடுத்த தேர்தலில் நமக்கு தமிழகத்தில் ஒரு வாக்கு கூட விழாது என்று உணர்த்தியிரு்ந்தால் சோனியா பயந்திருப்பார். சீக்கியரிடம், கன்னட மக்களிடம் இருக்கும் ஒற்றுமை நமக்கு இருந்திருந்தால் சோனியா இலங்கைக்கு உதவி செய்ய யோசித்திருப்பார். சம்பந்தமே இல்லாத இங்கிலாந்தும் அமெரிக்காவும் கடைசி நேரத்திலாவது கூக்குரலிட இந்தியாவில் ஆட்சிபிடித்த மமதையில் சோனியா. தமிழனுக்கு சுரணையிருந்தால் அன்னையென்று ஒரு கருணையற்ற பெண்மணியின் காலடியில் வீழ்வானா? தமிழகத்தில் நுழைய அனுமதிப்பானா?


இனி எல்லா அரசியல்வாதிக்களுக்கும் இனி தைரியம் தான். ஈழத்தமிழனை விடு, இந்திய தமிழனை அடித்துக் கொன்றாலும் கட்சி பேதங்களால் ஒற்றிமையின்றி கிடக்கும் அந்த இனத்திலிருந்து எந்த நாயும் ஏனென்றுக் கேட்கப் போவதில்லை. ஏற்கனவே சிறிலங்கா கடற்படையால் சுட்டுக் கொல்லபட்டுக் கொண்டிருக்கும் தமிழக மீனவருக்காக கேள்வி கேட்க ஆளில்லை. முல்லை பெரியாரில் குரல் கொடுக்க ஆளில்லை. காவிரியில் தண்ணீர் விட ஆதரவில்லை. பாலாற்றைக் காப்பாற்ற ஆளில்லை. சேது சமுத்திர திட்டத்தைக் காப்பாற்ற ஆளில்லை.

எல்லாவற்றிலும் நாம் தோற்பதற்கு காரணம் ராஜபக்சேவோ, பொன்சகாவோ, சோனியாவோ, எடியூரப்பாவோ, ராஜசேகர் ரெட்டியோ, அச்சுனாந்தனோ அல்ல. எல்லாவற்றிலும் நாம் தோற்பதற்கு காரணம் கலைஞரும், ஜெயலலிதாவும், ராமதாசும் மற்ற தமிழக அரசியல்வாதிகளும், அவர்களின் கட்சியில் இருக்கிறோம் அல்லது அவர்களை பிடிக்கும் என்பதற்காக சுயமாக யோசித்து எது நல்லது எது கெட்டது என்று பி்ரித்துணராமல் கண்மூடித்தனமாக அவர்களை ஆதரிக்கும் நாம் தான். சாதி மத பேதங்களை எதிர்த்து போராடவேண்டியதை விட கட்சி பேதங்களை எதிர்த்து போராட வேண்டிய நிலையில் இன்று நாம் உள்ளோம்.
நம் தோல்வியை எதிரி தீர்மானிக்கவில்லை, நாம் தான் தீர்மானிக்கிறோம்.

0 comments: