Tuesday, October 23, 2007

தற்காலிக அகதி...

அமெரிக்கா கலிஃபோர்னியா மகாணம் சாண்டியோகோ நகரில் ஞாயிறு இரவு முதல் காட்டுத்தீ பரவி வருகிறது. இரண்டுநாட்களாக எரிந்தும் இன்னும் தீ அணைந்தபாடில்லை. அமெரிக்கா வரலாற்றிலேயே இது ஒரு மிகப்பெரிய தீ விபத்து என்று சொல்கின்றனர்.

http://www.latimes.com/sports/football/nfl/la-me-sdfire23oct23,1,5108638.story?coll=la-headlines-sports-nfl


சுமார் 1250 வீடுகளுக்கு மேல் எரிந்து சாம்பலாயின. சுமார் 240 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு தீ பரவியுள்ளது. நேற்று ஒரே நேரத்தில் மொத்தமாக எட்டு இடங்களில் தீ பரவியது. அதிர்ஷ்ட வசமாக நகரின் நேர்த்தியான செயல்பாடுகளால் ஒரே ஒருவர் தான் உயிரிழந்திருக்கிறார். அது கூட அவர் வெளியேற மறுத்ததால் தான் என்கின்றன தகவல்கள்.


நேற்று வரை நாங்கள் வசிக்கும் பகுதி, விருப்பப் பட்டால் வெளியேறலாம் என்ற வரையறையில் இருந்தது. இன்னும் சில மணிநேரங்களில் கட்டாய வெளியேற்றம் இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். தேவையான் முக்கிய பொருட்களை மூட்டை கட்டி காரில் அடைத்து வைத்து அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருந்தேன். சிலர் அறிவிப்புக்காக காத்திராமல் தாமாகவே வெளியேறினர்.


நல்ல வேளையாக இன்று எங்கள் பகுதியில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. எனவே வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை. வீடிழந்த பலரின் நிலைமை மிக பரிதாபம். ஒவ்வொரு வீடும் சுமார் 500 ஆயிரத்திலிருந்து 800 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பு இருக்கும். இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என்றாலும் எவ்வளவு கிடைக்கும். வீட்டிலிருந்த பொருட்களுக்கு பணம் கிடைக்குமா தெரியவில்லை. அதுவரை அவர்கள் எங்கு தங்குவார்களோ தெரியவில்லை.


நாங்கள் தங்கியிருப்பது வாடகை வீட்டில். அதுவும் அயல்நாட்டில். வெளியேறச்சொன்னதோ தற்காலிகமாகத்தான். அதற்கே மனம் பட்டபாடு இருக்கிறதே... திரும்பி வரும்போது அந்த வாடகை வீடு இருக்குமா? ஆசையாய் வாங்கி வைத்த பொருட்கள் இருக்குமா? அப்போது ஒருகணம் ஈழத்தமிழரை நினைத்து பார்த்தேன். எப்போது திரும்புவோம் என்றே அறியாமல் பிறந்த நாட்டை விட்டு, சொந்தங்களை விட்டு, இருக்கு சொத்துக்களை விட்டு மற்ற நாடுகளுக்கு புலம் பெயரும் போது அவர்களின் மனது என்ன பாடுபடும்.

எப்போதும் டி.இராஜேந்திரை காமெடியனாகவே பார்த்து பழகிய எனக்கு இந்த வீடியோவில் மட்டும் ஹீரோவாக தெரிந்தார்

1 comments:

Sundar Padmanaban said...

//அப்போது ஒருகணம் ஈழத்தமிழரை நினைத்து பார்த்தேன்//

உங்களுக்கு அந்த ஒரு கண நேரத்தைச் செலவழிக்க மனம் வந்திருக்கிறது - வலியின் துளியைத் தொட நேர்ந்ததால். பலருக்கு இன்னும் அவ்வொரு கண நேரம் கிடைக்கவில்லை. கிடைத்தாலும் செலவழித்து உணர மனமில்லை.