Thursday, November 09, 2006

அமெரிக்காவில் வைத்தியம்

எல்லாம் நல்லாதான்யா இருக்கு இந்த நாட்டுல... டெக்னாலஜியெல்லாம் நல்லாதான் முன்னேறி இருக்கு... ஆனா என்ன வைத்தியம்/வைத்தியரை பார்க்கிறதுதான் உலகமகா பிரச்சனையா இருக்கு.

ஒரு ஜுரம்னு போன் பண்ண, 102 டிகிரிக்கு மேல் 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து இருந்தா போன் பண்ணு இல்லனா டைலினால், மோர்ட்ரின் சாப்புட்டு தூங்குனு சொல்லாறாங்கோ... அப்பா 3 நாளா ஒரே தலவலி, ஜலதோஷம் படுத்துது.. என்னன்ன கொஞ்சம் பாத்து சொல்லுப்பானா... 2 வாரம் கழிச்சி அப்பாயிண்ட்மெண்ட் தராங்கோ... சரி கஷ்டம் தாங்காம அர்ஜண்ட்கேர் போனா, 4 மணி நேரம் காக்க வைக்கிறாங்கோ. என்னடா இது நமக்கு பின்னாடி வந்தவங்க எல்லாம் டாக்டர பார்த்துட்டு போறாங்கோ.. நம்மல ஏன் இன்னும் கூப்பிடலன... புரியாம போய் கேட்டா, FIFO கான்சப்ட் அர்ஜெண்ட் கேர்ல கடையாது.. நம்மளையும், நம்ம வியாதியையும் பொறுத்து அவங்களுக்கா எப்ப வைத்தியம் பண்ணலாம்னு தோணுதோ அப்பதான் கூப்பிடுவாங்களாம்...

குழந்தைங்க பாடு இன்னும் கொடுமை... குழந்தைக்கு சளி புடிச்சா இங்க மருந்தே இல்ல.. ஏதோ பார்மசில கவுண்ட்டர்ல விக்கிரத வாங்கி ஊத்த சொல்லறாங்கோ.. நம்ம புள்ளக அத ஒரு ஸ்பூன் குடிச்சிட்டு இன்னும் தான்னு அடம்புடிக்குதுங்கோ..அது ஏதோ ஜூசு மாதிரி இருக்குது... பாட்டில் காலி ஆகுரது தான் மிச்சம்.. சளி அதுவா மனசு வச்சு புள்ளய விட்டு போனாதான் ஆச்சு...

அப்பா புள்ள காலைலிருந்து வாந்தி எடுக்குது.. கொஞ்சம் அப்பாயிண்ட்மெண்ட் கொடுங்கோனு போன் பண்ணா, புள்ள தண்ணி குடிக்குதா.. ஒன்னுக்கு போகுதா.. அப்ப சரி.. நாளைக்கு வரைக்கும் வாந்தி நிக்கலனா போன் பண்ணுங்கோ பார்க்கலாம்னு சொல்றாங்கோ... அப்போ நாளை வரைக்கும், புள்ள வாந்தி எடுக்கிறத பார்த்துக்கிட்டா உக்கார முடியும்.

எந்த வியாதிக்கும் அவ்வளவு சீக்கிரம் மருந்தே கொடுக்க மாட்டேங்குறாங்கோ... எல்லாம் தானா சரியாபோகணும்... பாடி ரெசிஸ்டன்ஸ் இருக்கணும்னு எல்லா வியாதியும் முத்தி போன பிறகு தான் பிரிஸ்கிரிப்ஷனையே தொடராங்கோ... ஒரு ஆண்டிபயாடிக் கொடுக்குறதுக்கு ஏதோ Atom பாம் தர மாதிரி யோசிச்சு ப்ரிஸ்கிரைப் பண்றாங்கோ... இது நல்ல விஷயமா கூட இருக்கலாம் ஆனா அதுவரைக்கும் வியாதில அவஸ்தை படபோறது நாம தான்... அதிலும் குழந்தைங்க கஷ்டபடறது தாங்க முடியல....

அடுத்த பிரச்சனை இந்த இன்ஷுரன்ஸ்... எத்தன தடவ படிச்சாலும் புரியவே கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டு இந்த கவரேஜ் டீடெய்ல்ஸ் எழுதி வச்சியிருப்பாங்க... ஏதாவது பிரச்சனைனா உடனே டாக்டர் கிட்ட போரத விட்டுட்டு, இது இன்ஷுரன்ஸ்ல கவர் ஆகுமா ஆகாதானு உக்காந்து ரிசர்ச் பண்ணனும்... இப்படித்தான், ஒரு டாக்டர் பேச்ச நம்பி இன்ஷுரன்ஸ்ல கவர் ஆகும்னு நினைச்சி ஒரு சின்ன மைனர் சர்ஜரி பண்ணிகிட்டேன்.. கடைசில இது கவர் ஆகாதுன்னு சொல்லி $2000 தலைல கட்டிட்டாங்கோ...நம்ம ஊர்ல பண்ணியிருந்தா Rs 10000/- தான் ஆயிருக்கும்.. என்னத்த சொல்லரது.. இனி எந்த டாக்டரையும் நம்ப கூடாது புரிஞ்சிக்கிட்டேன்.. ஆனா, அதுக்கான செலவு $2000... ம்ம்ம்ம்... அட சும்மா டாக்டர பாத்து ஹாய் சொன்னா, அடுத்த வாரம் $150 பில் வருது...

நான் சொல்ல வரதெல்லாம் ஒன்னு தான்.. வைத்தியம் பாக்கிறத கொஞ்சம் சுலபமா ஆக்குங்க... ஏற்கனவே நொந்து போயிருக்கிற நோயாளியை அதிக மருத்துவ செலவாலயும், கடின மருத்துவ முறையாலும் நோக அடிக்காதீங்கன்றதுதான்... சொல்ல மறந்திட்டேன்.. இவங்ககிட்ட பல நல்ல விஷயங்களும் இருக்கு.. ஆனா இந்த பதிவு புலம்புறதுக்காகனு எழுதுனதுனால ஒன்லி குறைகள்......

இப்படிப்பட்ட சமயத்துல நம்ம ஊரை நினைச்சி பார்த்துகிறது... நாம நினச்சப்ப ஏதோ சொந்தகாரங்க வீட்டுக்கு போற மாதிரி டாக்டர் வீட்டுக்கு போவோம்.. அவரும் ரொம்ப பிகு பண்ணாமா பார்த்து மருந்து ஊசியெல்லாம் கொடுப்பாரு... இங்க இவங்க படுத்தர பாடு இருக்குதே... சொர்க்கமே என்றாலும் அது...............

23 comments:

oosi said...

கலக்கல் பதிவு !!! கரெக்டா புட்டு புட்டு வெச்சிருக்கீங்க !!


Emergency poitu vanthappuram Billu paathaaley thalaya sutthum :-(

துளசி கோபால் said...

ஊசியும் போட்டு, பாட்டில்லே தண்ணி மருந்தும் கொடுத்து, வெறும் அஞ்சு ரூபாய்
மட்டும் வாங்குன டாக்டர் நினைவுக்கு வரார்.

( அவர் டாக்டரே இல்லைன்னு அப்புறம் பலவருஷம் கழிச்சுத் தெரியவந்துச்சு.
ஆனா ஜுரம் போயிருச்சே!)

வடுவூர் குமார் said...

உடம்புக்கு எதிப்புத்தன்மை வரவேண்டும் என்று இழுத்தடிக்கிறார்களா?எனக்கென்னவோ சரியாகத்தான் படுகிறது.முனுக்குன்னா மாத்திரை சாப்பிடும் எண்ணம் வரக்கூடாது.என்ன கஷ்டத்தை குழந்தனாலும் அனுபவிச்சுத்தான் ஆகவேண்டும் அதை நாம் கண் முன்னால் பார்க்க நேரிடும் போது கஷ்டமாக இருக்கும்.
ஜலதோஷமா,தலைவலியா? பிடிங்க நீராவி,சின்ன சின்ன கை வைத்தியங்கள் நேரத்துக்கு கை கொடுக்கும்.
யோவ்! அனுபவிச்சுப்பார் என்கிறீர்களா?
என்ன செய்வது?
நான் அனுபவிச்சதை எழுத எனக்கு தெரியவில்லையே??!!
:-))

Anonymous said...

சூப்பர் புலம்பல்ங்க, ச்சே சூப்பர் பதிவுங்க. ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க!

-விநய்*

Unknown said...

Good post.

I took an insurance and then had a visit with a dentist.Finally the insurance company refused to cover dental expenses:-(

Anonymous said...

When my daughter was sick I had a same experience with regular doctors.

So I went to Homeopathic doctor. He helped us very much.
Also cost is very very low.

Nakkiran said...

oosi

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...



வானமே எல்லை

நான் கூட இந்த அர்ஜண்ட்கேர் பக்கமே போரதில்லை..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...


துளசி கோபால்

நம் ஊரு டாக்டரெல்லாம் சூப்பரில்ல... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...



வடுவூர் குமார்
நீங்க சொல்லறது எல்லாம் சரி... ஆன குழந்தைங்க கஷ்ட படறத பார்த்துகிட்டு நம்மால ஒன்னும் பண்ண முடியாம நிக்கிறது ரொம்ப கொடும..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...



விநய்*

யார்கிட்டயாவது புலம்புனும்னு முடிவு பண்ணி எழுதியது...:) தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Nakkiran said...

செல்வன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

அனானி..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

சேதுக்கரசி said...

இப்படிப்பட்ட வைத்திய முறை கடுப்படிக்கும் தான்... ஆனாலும் இதையெல்லாம் யோசிச்சுப் பாருங்க:

பொதுவா, டைலனால், மோட்ரின் (ஐபூப்ரோஃபென்) பொல fever reducer போதுமானது தான். அதையும் மீறிப்

போகலைன்னாத் தான் மருத்துவரைப் பார்க்கணும். நம்ம ஊர்ல மூணு நாளாக் காய்ச்சல்னா உடனே ஏதோவொரு

ஊசி போடுவாங்க, அது என்ன ஊசின்னு கூடக் கேட்டுக்கமாட்டோம்! குளிக்காதே, போர்வையப் போத்திக்கிட்டுத்

தூங்கும்பாங்க. ஆனா உண்மையில, அமெரிக்கால சொல்ற மாதிரி இளஞ்சூடான தண்ணில குளிச்சா நல்லது.

செஞ்சு பாருங்க, it works. குழந்தைகளுக்கும் இது பொருந்தும்.

//ஜலதோஷம் படுத்துது.. என்னன்ன கொஞ்சம் பாத்து சொல்லுப்பானா... 2 வாரம் கழிச்சி அப்பாயிண்ட்மெண்ட்

தராங்கோ//

ஆமா, தெரியாமத்தான் கேட்கிறேன்.. ஜலதோஷத்துக்கெல்லாம் எதுக்கு மருத்துவர் கிட்டப் போறீங்க.. ம்? Treated

cold goes in one week, untreated cold goes in 7 days - கேள்விப்பட்டதில்லையா? (அதுவும் வயசாக வயசாக

அது 2 வாரத்துக்கும் மேல கடுப்படிக்கும் தான்.) அப்படியும் சரியாகலைன்னாத் தானே பிரச்சினை? சளிப்

புடிச்சவுடனே டாக்டர் கிட்ட ஓடணும், ஸ்ட்ராஆஆஆங்கா மருந்து சாப்பிடணும்னா அதுக்கு நம்மூரு தான் சரி.

//குழந்தைக்கு சளி புடிச்சா இங்க மருந்தே இல்ல.. ஏதோ பார்மசில கவுண்ட்டர்ல விக்கிரத வாங்கி ஊத்த

சொல்லறாங்கோ//

தேவையில்லாம ஆன்ட்டிபயாட்டிக் தர்றது நல்லதுங்கிறீங்களா? பாக்டீரியாவால வர்ற நோய்களுக்குத் தான்

ஆன்ட்டிபயாட்டிக் கேட்கும். வைரஸால வர்ற நோய்க்குக் கேட்காது. சளி, பொதுவா வைரஸால தான் வரும்.

சளியானது காது இன்ஃபெக்ஷனா மாறினாத்தான் பிரச்சினை. குழந்தைகளுக்கு ear infection வர வாய்ப்புகள்

அதிகம். காதில் இன்ஃபெக்ஷன் வந்தா அதன் அறிகுறிகளை வச்சே நமக்கு அதுதான்னு சந்தேகம் வந்துடும்,

அப்புறம் மருத்துவர் கிட்டப் போனா அதை கன்ஃபர்ம் பண்ணிட்டு அதுக்கு ஆன்ட்டிபயாட்டிக் கொடுப்பாங்க.

ஆக மொத்தத்தில் வைரஸால வர்ற சளியைப் போக்க பாக்டீரியாக்களை மட்டுமே கொல்லும் சக்தி படைத்த

ஆன்ட்டிபயாட்டிக் கொடுத்தாத் தான் உண்டுன்னு ஒத்தைக் காலில் நிக்கிற பேஷண்டுகளை நினைச்சாப் பாவமாத்

தான் இருக்கு.

//சளி அதுவா மனசு வச்சு புள்ளய விட்டு போனாதான் ஆச்சு//

அப்பாடா இப்பத்தான் பாயின்ட்டைப் பிடிச்சிருக்கீங்க. சளி தன் due course-ல தான் போகும்! நீங்க மருந்து

சாப்பிடறதால ஒண்ணும் அது அவசரமா ஓடீறாது!

//அப்பா புள்ள காலைலிருந்து வாந்தி எடுக்குது.. கொஞ்சம் அப்பாயிண்ட்மெண்ட் கொடுங்கோனு போன் பண்ணா,

புள்ள தண்ணி குடிக்குதா.. ஒன்னுக்கு போகுதா.. அப்ப சரி.. நாளைக்கு வரைக்கும் வாந்தி நிக்கலனா போன்

பண்ணுங்கோ பார்க்கலாம்னு சொல்றாங்கோ... அப்போ நாளை வரைக்கும், புள்ள வாந்தி எடுக்கிறத

பார்த்துக்கிட்டா உக்கார முடியும்.//

இதுக்கு என்ன விளக்கம் கொடுக்கிறதுன்னு தெரியல. ஆனா உடனே ஆன்ட்டிபயாட்டிக்கை வச்சு அமுக்காம அது

தன்னால இம்ப்ரூவ் ஆகுதான்னு பார்க்கிறது தான் புத்திசாலித்தனம். பொதுவா, குழந்தைகள் இரண்டொரு முறை

வாந்தி எடுத்தவுடனே கொஞ்சம் கொஞ்சமா தன்னால சரியாயிடும். சரியாகலைன்னாத் தான் பிரச்சினை. வயித்தால

போறதும் அப்படித்தான். வாந்தி, வயித்தால - இது ரெண்டுக்கும் பத்தியம் + நீர் ஆகாரம் தான் முதல் படி மற்றும்

அதி முக்கியம். பத்தியமா இருந்தும் சரியாகலைன்னாத் தான் மருந்துக்குப் போகணும். டயரியாவுக்கு எத்தனை

தான் மருந்து கொடுத்தாலும் அது வரக் காரணமாயிருந்த toxins உடம்பிலிருந்து வெளியேற வெளியேறத் தான்

அது குறையும். toxins வெளியேற ஒரே வழி - உங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ.. பாத்ரூம் தான்! உடனே

விழுந்தடிச்சு மருந்தைக் கொடுத்தை பாத்ரூம் போறதை அடக்கிட்டா அப்புறம் எங்கேயிருந்து டாக்ஸின்

வெளியேறும்?! stomach bug அப்படின்னு ஒண்ணு இருக்கு. அது வந்தா 3 முதல் 5 நாளாகுமாம் போக.

அதுவரைக்கும் மருத்துவர் கண்டுக்கவே மாட்டாங்க. 5 நாள்ல போகலைன்னாத் தான் மருந்து. அதை விட்டுட்டு,

மருந்தைக் கொடுத்து முதல்லயே நம்ம system-ஐ அமுக்கறதால ஒரு பிரயோசனமும் இல்ல.

//பாடி ரெசிஸ்டன்ஸ் இருக்கணும்னு எல்லா வியாதியும் முத்தி போன பிறகு தான் பிரிஸ்கிரிப்ஷனையே

தொடராங்கோ//

"முத்திப் போன பிறகு" அப்படின்றதை ஏற்கமுடியல. தானா சரியாகலைன்னாத் தான் தராங்கன்னு வேணா

சொல்லலாம். இப்படித்தான் அரிப்பு, தடிப்பு, இதுக்கெல்லாம்... hives அப்படின்னு சொல்வாங்க. சில

மணிநேரங்களில் தோலில் தோன்றும் தடிப்பு/hives தன்னால சரியாகும். அது சரியாகறதுக்குண்டான histamine-

blockers-ஐ நம்ம உடம்பே தயாரிக்கும். அப்படியும் சரியாகலைன்னாத் தான் Benadryl மாதிரி ஒரு antihistamine /

histamine-blocker சாப்பிடணும். அத விட்டுட்டு நம்ம உடம்பு தானா fight பண்ணக்கூடிய சக்தியை மருந்தைக்

குடுத்து அமுக்கக்கூடாது.

//ஒரு ஆண்டிபயாடிக் கொடுக்குறதுக்கு ஏதோ Atom பாம் தர மாதிரி யோசிச்சு ப்ரிஸ்கிரைப் பண்றாங்கோ... இது

நல்ல விஷயமா கூட இருக்கலாம்//

ஏன்னா ஆன்ட்டிபயாட்டிக் குடுக்குறதுல பல எதிர்மறை விளைவுகள் இருக்கு.

//ஒரு டாக்டர் பேச்ச

நம்பி இன்ஷுரன்ஸ்ல கவர் ஆகும்னு நினைச்சி ஒரு சின்ன மைனர் சர்ஜரி பண்ணிகிட்டேன்.. கடைசில இது கவர்

ஆகாதுன்னு சொல்லி $2000 தலைல கட்டிட்டாங்கோ...நம்ம ஊர்ல பண்ணியிருந்தா Rs 10000/- தான்

ஆயிருக்கும்.. என்னத்த சொல்லரது.. இனி எந்த டாக்டரையும் நம்ப கூடாது புரிஞ்சிக்கிட்டேன்.. ஆனா,

அதுக்கான செலவு $2000... ம்ம்ம்ம்//

இன்சூரன்ஸ்ல கவர் ஆகும்னு "நினைச்சா" போதாது. உறுதி செஞ்சிக்கணும் முதல்ல! 800 நம்பர் எதுக்குத் தராங்க? ஓசி கால் தான், ஒரு போனைப் போட்டு இதைக் கூடக் கேட்டுக்கலைன்னா அது நம்ம தப்பு தான்...

//அட சும்மா டாக்டர பாத்து ஹாய் சொன்னா, அடுத்த வாரம் $150 பில் வருது//

சும்மா டாக்டரைப் பார்க்க 150 டாலர்னு பீலா விடாதீங்க.. ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்! உங்க co-pay-ஐ மீறி பில் வந்தா (1) கவர் ஆகாத சர்வீஸ் (2) அல்லது தவறான பில் - இது ரெண்டில் ஒண்ணாத் தான் இருக்கமுடியும்.

Nakkiran said...

சேதுக்கரசி

நீங்கள் சொல்லும் பல கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன்.. ஆனால் சில விஷயங்களில் எனக்கு இன்னும் சந்தேகம் உண்டு...

//cold goes in one week, untreated cold goes in 7 days - கேள்விப்பட்டதில்லையா?//
பிரச்சன என்னன்ன பலமுறை இந்த சாதாரண ஜலதோஷம் ஒரு மாதம் வரை கூட நீடிக்கிறது.. அதுவரை குழந்தை தூங்குவது முதல் சாப்பிடுவதை வரை பிரச்சனைதான்.
சரியோ தவறோ.. நம்மூரில் ஜலதோஷம் வந்தால் மருந்து குடுத்து 3 நாட்களில் குணப்படுத்தி விடுகிறார்களே...

இன்னொரு விஷயம் எனக்கு புரிஞ்சதே இல்ல.. இந்த ஊருல உடம்பு ஹீட் ஆயிடுச்சி இல்ல கோல்ட் ஆயிடுச்சி என்ற கான்செப்டே இல்லையே.. ஆனா அது நம்ம ஊருல சரியா work பண்ணுற மாதிரி தான் இருக்கு

//800 நம்பர் எதுக்குத் தராங்க? ஓசி கால் தான், ஒரு போனைப் போட்டு இதைக் கூடக் கேட்டுக்கலைன்னா அது நம்ம தப்பு தான்...
//

இதுல என்ன பிரச்சனனா, இது என் நண்பருக்கு நடந்தது.. இது போல சர்ஜரி செய்ய போறேன்னு கால் பண்ணி கேட்டாங்கோ... ஒகே it is covered னு சொல்லிட்டாங்கோ.. ஆனா கடைசியில.. only surgeory covered.. but not the anesthesiaனு சொல்லி அவருக்கு அனஸ்தீசியா பில் 600$வந்தது.. இது மாதிரி விஷயமெல்லாம் முதல் முறை அனுபவிப்பர்களுக்கு எப்படி தெரியும்.. நான் சொல்வது என்னவென்றால்.. எதுக்கெல்லாம் பில் போட போகிறோம் தெரிஞ்ச டாக்டரே இன்சுரன்ஸ்ல விசாரிச்சு சொன்ன நோயாளிக்கு உதவியா இருக்கும் இல்ல..

உங்க விளக்கத்த படிச்ச பார்த்த, நம்மூருல பண்ற மருத்துவ முறையே தவறு என்ற எண்ணம் தான் வருது....

//சும்மா டாக்டரைப் பார்க்க 150 டாலர்னு பீலா விடாதீங்க.. ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்! உங்க co-pay-ஐ மீறி பில் வந்தா (1) கவர் ஆகாத சர்வீஸ் (2) அல்லது தவறான பில்//

குழந்தை இல்லாத வரை ஆஸ்பிடல் போனதே இல்லை.. அனுபவம் இல்லை...குழந்தைக்கு பிறகு ஆஸ்பிடல் செல்ல வேண்டியிருக்கிறது.. இன்ஷுரன்ஸ்ல எனக்கு பல விஷயங்கள் புரிவதில்லை.. ஒவ்வொரு முறையும் கொஞ்சம் இழந்த பின் தான் கற்றுக் கொள்கிறேன்..

என்னை பொறுத்தவரை மருத்துவம் என்பதில், நம்மூரில் மனதிருப்தியும் பணத்தை பற்றிய பயமும் இல்லாமல் இருக்கிறது... இங்கு எனக்கு இன்னும் ஆஸ்பிடல் என்றால் nightmare தான்..

எனக்கு இன்னும் பல கசப்பான அனுபவங்கள் உண்டு மேடம்.. என்னுடய சில தவறுகளும், குழப்பமான இன்சுரன்ஸ் மற்றும் மருத்துவ முறைகளும்.. இந்தியாவில் இருந்து வந்துள்ளதால் உள்ள கல்சுரல் டிஃப்ரன்ஸ் தான் இதற்கான் காரணங்கள்...

சேதுக்கரசி said...

நக்கீரன், அப்பாடா நல்லவேளை என் பின்னூட்டத்தைப் பார்த்து உங்களுக்குக் கோவம் வரலை.. அந்த sportive மனப்பான்மை வாழ்க! என்னடா இது யாரோ தெரியாத ஒருத்தர் பதிவுல போய் ஸ்ட்ராங்கா எழுதிட்டோமோன்னு ஒரு சின்ன வருத்தம் வந்துருச்சு நேத்து :-)

//சரியோ தவறோ.. நம்மூரில் ஜலதோஷம் வந்தால் மருந்து குடுத்து 3 நாட்களில் குணப்படுத்தி விடுகிறார்களே...//

உண்மை தான். ஆனா இங்கே அதை விடுத்து, குழந்தைக்கு வெதுவெதுப்பான நீரில் குளியல், ஷவரைத் திறந்துவிட்டுக் கொஞ்சம் "ஸ்டீம்"-இல் இருக்கவைக்கிறது இப்படி விசயங்களை செய்யறதால சளி படுத்தும் பாடு கொஞ்சம் குறையும் தான். இருமல், வரட்டு இருமல், இப்படி இருந்தாலும் "ஓவர் தி கவுண்ட்டர்" மருந்து இருக்கு. அதுவும் சரிவரலைன்னாத் தான் மேற்கொண்டு கவனிப்பு. எனக்கொருமுறை வரட்டு இருமல் ரொம்பப் படுத்திச்சு. பிரிஸ்கிரிப்ஷன் இல்லாம வாங்கக்கூடிய ஸ்ட்ராங்க் இருமல் மருந்து ஒண்ணை 3 நாள் சாப்பிடச் சொன்னாங்க, அதைச் சாப்பிட்டும் போகலைன்னாத் தான் மருத்துவரைப் பார்க்க வரச்சொன்னாங்க. 3 நாள் அதைச் சாப்பிடறதுக்குள்ள வரட்டு இருமல் ஓடியே போச்சு. இப்படிப்பட்ட படிப்படியான மருத்துவத்தை ஏத்துக்கிறதே நல்லதுன்னு நினைக்கிறேன், அதாவது எடுத்த எடுப்பிலேயே ஸ்ட்ராங்காப் போறதை விட.

//இன்னொரு விஷயம் எனக்கு புரிஞ்சதே இல்ல.. இந்த ஊருல உடம்பு ஹீட் ஆயிடுச்சி இல்ல கோல்ட் ஆயிடுச்சி என்ற கான்செப்டே இல்லையே..//

எனக்கும் தான் இது இன்னும் புரியவேயில்ல (ஹிஹி)

//only surgeory covered.. but not the anesthesia//

இப்படிப்பட்ட தருணங்களில் அந்தக் குறிப்பிட்ட சர்ஜன் அல்லது அனஸ்தீஸியாலஜிஸ்டை அணுகி, கோரிக்கை விடுத்தா அவங்க ஃபீஸை waive பண்ணுவாங்க சிலசமயம். கேட்டுப் பார்த்தா நடக்க வாய்ப்பிருக்கு, கேட்கிறதால we don't lose anything. சொன்னா நம்பமாட்டீங்க.. என் கணவர் இங்கே மாணவரா வந்தப்ப, கஞ்சப்பட்டுக்கிட்டு ஒரு வருசத்துக்கும் மேல இன்சூரன்ஸ் கட்டவேயில்ல. எங்க கெட்ட நேரம், அப்பப் பார்த்து செமத்தியான ஒரு மேஜர் ஆப்பரேசன் அவசியம் பண்ணவேண்டியதாப் போச்சு. சர்ஜன் அவர் கட்டணத்தை முழுசா "வெயிவ்" பண்ணிட்டார். ஆனா அனஸ்தீஸியாலஜிஸ்ட் "வெயிவ்" பண்ணல. அதனால அவருக்கும் மருத்துவமனைக்கும் மட்டும் payment plan போட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக் கட்டிமுடிச்சோம். எனக்கு இன்சூரன்ஸ் கவரேஜ் இல்லாத ஒரு சர்வீஸ் செய்யவேண்டிவந்தப்ப, தள்ளுபடி கிடைக்குமான்னு கேட்டேன், சரின்னு அந்த ஒரு குறிப்பிட்ட procedure மட்டும் நான் அங்கே பலமுறை செஞ்சாலும் ஒவ்வொரு முறையும் 50% தள்ளுபடி கொடுத்தாங்க. இந்த மாதிரி சிலசமயங்களில் நமக்காகக் கொஞ்சம் பரிஞ்சு பண்ணுவாங்க. அதுவும் நடக்கும் அமெரிக்கால.

//எதுக்கெல்லாம் பில் போட போகிறோம் தெரிஞ்ச டாக்டரே இன்சுரன்ஸ்ல விசாரிச்சு சொன்ன நோயாளிக்கு உதவியா இருக்கும் இல்ல..//

மருத்துவரைக் கேட்டா எனக்குத் தெரியாதுன்னு சொல்லிடுவார். ஏன்னா உங்க பிளான் வேற என்னோட பிளான் வேற. எல்லா பேஷண்டுகளுக்கும் வேற வேற மாதிரி இன்சூரன்ஸ் பிளான் இருக்கிறதால மருத்துவருக்கு எப்படித் தெரியும்... நீங்க தான் கேட்டுக்கணும், உங்க பொறுப்பு தான்னு சொல்லிக் கைகழுவிடுவாங்க. அவங்களுக்கு ஏற்கனவே எத்தனையோ liability உண்டு, அதுல இந்த லயபிலிட்டியை வேற அவங்க தோள்ல சுமக்க முன்வரமாட்டாங்க. நாளைக்கு அவங்க சொன்னதுக்கு மாறா இன்சூரன்ஸ்ல எதுனாச்சும் நடந்துச்சுன்னா நம்ம அவங்களை மாட்டிவிட்ருவோம்னு அவங்களுக்குத் தெரியாதா என்ன.

உங்க குழந்தை கொஞ்சம் வளர வளர நீங்களே அடிக்கடி மருத்துவர் கிட்டப் போறதையும் அடிக்கடி அவங்க கிட்டப் பேசறதையும் குறைச்சிடுவீங்க.. பெற்றோர் என்ற முறையில் உங்க அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க மருத்துவரை அணுகறது குறையும். நாமளே அவங்க உதவி இல்லாம கவனிச்சுக்க ஆரம்பிப்போம், மீறிப் போனாத்தான் மருத்துவரைக் கூப்பிடுவோம். நான் இப்ப ஊருக்குப் போனப்ப என் 4 வயசு மகள் மொஸைக் தரைல ணங்குன்னு இடிச்சிக்கிட்டா. அரை நொடியில ஒரு சின்ன எலுமிச்சம்பழ சைஸுக்குப் புடைச்சுப் போச்சு. வலியில ரொம்ப அழுதா. தலையைத் தேய்ச்சு விடாம ஜாக்கிரதையா ஐஸ் வச்சு டைலனால் கொடுத்துக் கொஞ்ச நேரத்தில் சரியாயிட்டா. அப்புறம் அவ பாட்டுக்கு இருந்தா. மண்டையில புடைச்சதைப் பார்த்தா நமக்குத் தான் பயமாயிருந்துச்சே தவிர அவ சும்மா இருந்தா. மருத்துவருக்கு போன் தான் செஞ்சேன், போகவேயில்ல (அந்த அளவுக்கு தைரியம் வந்துருதுங்க 4 வருச அனுபவத்துல!) இந்தியால குடும்ப மருத்துவர், ஐஸ் வச்சு Thrombophob மருந்து தடவுங்க போதும்னு சொன்னார். அமெரிக்கா மருத்துவருக்கும் போன் செஞ்சேன். முதல் 24 மணிநேரம் தான் critical, அதைத் தாண்டிட்டா ஓகே, அதுக்குள்ள வாந்தி, delirious, கண்பார்வையில் பிரச்சினை இப்படி ஏதேனும் வந்தா கவனிக்கணும், இல்லன்னா ஐஸ் வச்சா மட்டும் போதும்னுட்டாங்க. எந்த மருத்துவரும் எக்ஸ்ரே, ஸ்கான் எல்லாம் எடுக்கச் சொல்லல. அப்புறம் ஒரு 3 - 4 நாள் ஐஸ் வச்சு மருந்து தடவி சரியாப்போச்சு. இங்கே வந்தப்புறம் என் கணவர் மருத்துவரை அவசியம் பார்க்கணும்னு சொன்னதால நேத்து தான் கூட்டிட்டுப் போனோம். எல்லாம் ஓகே.

அப்புறம்.. என்னை மேடம்னு கூப்பிடாதீங்க :-) இப்பத்தான் கொஞ்ச நாள் முன்னாடி கைப்பு கிட்ட சொல்லிவச்சிருக்கேன், இப்ப நீங்க வேற ஆரம்பிச்சிட்டீங்களா! :-D

Nakkiran said...

எதுக்குங்க கோவபடனும்,, நல்ல விஷயம் தான சொல்றீங்க... எனக்கு கூட சந்தேகம் வந்திடுச்சி.. ஒருவேள இவங்க டாக்டர் இல்லன டாக்டருக்கு நெருங்கன உறவா இருப்பாங்களோ.. ஏன்னா நிறைய விஷயம் சொல்றீங்க.. டாக்டருக்கு சப்போர்ட் வேற பண்ணுரீங்க....

பொறுமையா இவ்வளவு பெரிய விளக்கங்கள் அளித்தற்கு நன்றி.. பல தகவல்கள் பயனுள்ளதாய் இருந்தது

blog வச்சிருக்கிங்க ஆனா உங்க ப்லொக்ல பதிவுகளே இல்லையே.. பொரஃபல் பார்த்து போனேன்... எழுதறதில்லையா... பின்னூட்டத்திலியே கலக்குறீங்க.. பதிவு போடுங்க மேடம்... ஓஓஓ சாரி மேடம் சொல்லக் கூடாதில்ல.. :) பதிவு போடுங்க சேதுக்கரசி...

Anonymous said...

அனாவசியமாக மருந்து சாப்பிடக்கூடாது, எதிர்ப்பு சக்தி வளரவேண்டும் என்பதென்னவோ உண்மை. ஆனால் அமெரிக்காவில் உண்மையான நிலை என்னவென்றால் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் இன்சூரன்ஸ் கம்பனிகளின் கட்டுப்பட்டுக்குள்தான் செலவழிக்க முடியும். ஒரு மருத்துவர் நோயாளிகளை கவனிக்கிறேன் பேர்வழின்னு இன்சூரன்ஸ் கம்பனிக்கு செலவு வைத்தால், அவர்கள் மருத்துவருக்கு ஆப்பு வைப்பார்கள். அமெரிக்காவில் மருத்துவம் ஒரு தொழில் - மூலதனம் போடும் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு லாபம் சம்பாதித்துக்கொடுக்கும் தொழில். நம்மூரிலும் காசுக்காக எதுக்கெடுத்தாலும் வலது குதத்தில் ஒரு ஊசி இடது குதத்தில் ஒரு ஊசின்னு போடுவது தவறுதான்.

சமீபத்தில் எனக்கு 103 டிகிரி காய்ச்சல் வந்து பயங்கர உடல்வலியும் தொண்டை வலியுமாக, என் டாக்டருக்கு போன் செய்தால் நர்ஸ் இன்னும் ரெண்டு வாரத்துக்கு அப்பாயிண்ட்மெண்ட் இல்லையென்றார். சரிங்க அப்ப ரெண்டு வாரம் கழிச்சு எனக்கு காய்ச்சல் வரமாதிரி வழிபண்ணுங்க கண்டிப்பா காத்திருக்கேன்னேன் ;D

கால்கரி சிவா said...

சேதுக்கரசி அவர்களின் பதில் நல்ல பதில். இங்கே மருத்துவம் மெதுவாக பார்த்தாலும் தரமாக பார்க்கிறார்கள்.
இன்ஸூரன்ஸ் கம்பெனிகளில் முதலிலேயெ கேட்டு செய்தால் பல சர்ப்ரைஸ் பில்களிலிருந்து தப்பிக்கலாம்

சேதுக்கரசி said...

நன்றி கால்கரி சிவா.

நக்கீரன்...

//ஒருவேள இவங்க டாக்டர் இல்லன டாக்டருக்கு நெருங்கன உறவா இருப்பாங்களோ.. ஏன்னா நிறைய விஷயம் சொல்றீங்க..//

மருத்துவத் துறைல வேலை பார்க்கிற டெக்னீஷியன்கள் ரெண்டு மூணு பேர் என்னை இந்தக் கேள்வி கேட்டிருக்காங்க.. ஆனா நானோ எனக்கு நெருங்கினவங்களோ யாரும் மருத்துவர் இல்ல. சில வருசங்களுக்கு முந்தி இணையத்தில் சில குறிப்பிட்ட மருத்துவ விசயங்களைப் பத்தி எக்கச்சக்கமாப் படிப்பேன். 24 மணிநேரமும் அதுதான் மண்டையில ஓடும். அதனால கிடைச்ச அனுபவம் தான்.

//பின்னூட்டத்திலியே கலக்குறீங்க.. பதிவு போடுங்க//

பார்ப்போம்.. முந்தியெல்லாம் எனக்கு வலைப்பூ பக்கமே வரப் பிடிக்காது. இப்பத்தான் சில மாசங்களுக்கு முன்னாடி கொஞ்சம் வாசிக்க ஆர்வம் வந்துச்சு. அதுவும் நண்பர் கோபியின் பிருந்தாவனம் வலைப்பூவுல பின்னூட்டமிடப்போனதால வந்த வினை தான் இந்த பிளாக்கர் அக்கவுண்டு! பதிவு எழுத இப்போதைக்கு ஆர்வமில்ல.. நேரம் கிடைக்கிறப்ப அன்புடன் குழுமத்தில் பங்கேற்கிறேன். சுவாரசியமான யுனிகோடு தமிழ்க் குழுமம். வலைப்பூவுல நீங்கல்லாம் ஒரு குரூப்பா சுத்துற மாதிரி தான் அங்கேயும். பல நண்பர்கள் இருக்காங்க அங்கே.

சேதுக்கரசி said...

அனானி குறிப்பிட்ட மாதிரி இன்சூரன்ஸ் ஒரு காரணம் இங்கே இருக்கிற வைத்திய முறைக்கு.

ஆப்பு said...

அருமையான பயனுள்ள பதிவு. வலைப்பதிவில் நம்பர் ஒன் அரசியல் நகைச்சுவை, சமூக விழிப்புணர்வு வலைப்பூ நாளிதழ் படித்து விட்டீர்களா? இந்த வாரம்...

யார் அந்த இட்லி வடை?

அன்பு said...

மிக பயனுள்ள பதிவு மற்றும் பின்னூட்டங்கள். இங்கு சிங்கப்பூரிலும் (கிட்டத்தட்ட) அப்படியே இதே நிலைதான்.

சேது எழுதுனா விலாவாரியா எழுதுவாங்கதான் என்றாலும், மருத்துவத்துறை என்றால் கேட்கவே வேண்டாம்... :) நிறைய தெரிந்துகொள்ளலாம்.

நன்றி உங்களுக்கும், சேதுவுக்கும்.

என்ன (இப்பல்லாம்) எப்பவாது தமிழ்மணம் பக்கம் வர்ர என்னப்போலவங்களுக்கு கண்ல தட்டுப்படாம இதுபோன்ற பயனுள்ள பதிவுகளும் சடுதியில் காணாமல் போவதுதான் இழப்பு - அதை பூங்கா ஓரளவு சரிக்கட்டுகிறதுதான்!

நன்றி.

குமரன் (Kumaran) said...

நல்ல பதிவு. நல்ல பின்னூட்டங்கள். விரும்பிப் படித்தேன்.

Anonymous said...

பணம் கட்டாவிடாலும் மருத்துவமனை நிர்வாகம் ஒண்றும் செய்ய இயலாது. அவர்கள் பாட்டுக்கு பில் அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் கட்டவில்லை என்றாலும் உங்க்களது கிரடிட் ஒன்றும் பிலாக் லிஷ்ட் ஆகாது.

இங்கு பணம் இல்லை என்றாலும் மருத்துவமனை நம்மை நிராகிரிக்க இயலாது.

Anonymous said...

// FIFO கான்சப்ட் அர்ஜெண்ட் கேர்ல கடையாது //

நான் ஒருமுறை அர்ஜெண்ட் கேர் சென்றிருந்தபோது, ஒரு பத்து வயது பையன் மண்டையை பிளந்துகொண்டு வந்திருந்தான். தலையில் டவல் வைத்திருந்தும் ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. அந்த நிலையிலும், தயவுசெய்து உங்கள் பெயரை எழுதிவிட்டு இருக்கையில் அமருங்கள் என்று சொன்னார்!

அன்பு said...

இங்கு பணம் இல்லை என்றாலும் மருத்துவமனை நம்மை நிராகிரிக்க இயலாது.

ஆமாவா!? முதலில் அனுமதிப்பார்களா?

இங்கு கிடையாது. MediSave கணக்கில் இருப்பு எப்படி இருக்கிறது என்று பார்த்தபின்னர்தான் மருத்துவமனையில் அனுமதி. அந்த கணக்கு இல்லாத (இங்கு Employment Pass, Work Permit) வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் முன் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். அதனால் யார் எங்கிருந்தாலும் மக்களே, ஒரு காப்புறுதி(யாவது) குடும்பத்தில் அனைவருக்கும் வைத்துக்கொள்வது உசிதம். எப்போது தேவைப்படுமென்று யாருக்கும் தெரியாது:)

சேதுக்கரசி said...

ஆமாம் அன்பு. சுப்பு சொன்னது சரியே. நோயாளியால் பணம் கட்ட முடியாதுன்ற காரணத்துக்கோ நோயாளிக்கு இன்சூரன்ஸ் இல்லைன்ற காரணத்துக்கோ மருத்துவமனைகள் சிகிச்சையளிக்காம இருக்கமுடியாது. இது அமெரிக்க சட்டம். மருத்துவமனையிலேயே Patient's Bill of Rights-னு பெரிய போஸ்டர்ல இப்படி எழுதி ஒட்டியிருக்கும். ஆனா இது அவசர சிகிச்சைக்கு மட்டும் தான் பொருந்துமான்னு தெரியல. சுட்டி ஏதும் கிடைச்சா சொல்றேன்.