Showing posts with label வணிகம். Show all posts
Showing posts with label வணிகம். Show all posts

Wednesday, March 21, 2007

மருத்துவச் சுற்றுலா - 1

இந்தியா மென்பொருள் துறையில் ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கிறது. BPO துறையிலும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. என்னதான் சீனா மிரட்டிக் கொண்டிருந்தாலும் இத்துறைகளில் அது இந்தியாவை தோற்கடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல, தலையால் தண்ணி குடிக்க வேண்டியிருக்கும். இப்போது இந்தியாவின் அடுத்த இலக்கு மருத்துவச் சுற்றுலா. கடந்த 2005 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 500,000 அமெரிக்கர் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக வெளிநாடு சென்றுள்ளனர். இத்துறை மிகப்பிரமாண்டமான முறையில் முன்னேற்றம் காணப்போகிறது. இதிலும் முன்னணியில் இருப்பது இந்தியாதான். இத்துறையில் நமக்கு போட்டி சீனா அல்ல. சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற மற்ற சிறு ஆசிய நாடுகள் தான்.

அமெரிக்காவில் மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லதாவர் எண்ணிக்கை பல மில்லியன்களைத் தாண்டும். அவர்களுக்கெல்லாம் அமெரிக்காவில் அறுவை சிகிச்சையெல்லாம் கனவில் தான் நடக்கும். இணையத்தில் படித்த ஒரு எடுத்துக்காட்டு, அமெரிக்காவில் வாழும் 53 வயதான தச்சர் ஒருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய சுமார் 250,000 அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று கூறியுள்ளனர். அவருக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லை. அவரிடம் நிச்சயம் அவ்வளவு பணமில்லை. உடனே இந்தியாவிற்கு வந்து புதுடெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தங்கி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். டெல்லி மற்றும் தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்துவிட்டு ஊர் திரும்பினார். அவருக்கு அதற்கான செலவு 20,000 அமெரிக்க டாலர்கள். சுமார் 10 மடங்கு அமெரிக்க கட்டணத்தை விட குறைவு.
இதுவரை நிறைய அமெரிக்கர்கள் காஸ்மடிக் அறுவை சிகிச்சைகளுக்காக பிலிப்பைன்ஸ் மற்றும் பாங்காக் ஆகிய இடங்களுக்கு பறந்து கொண்டிருந்தார்கள். இனி மற்ற உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளுக்கும் அங்கு செல்வதற்குத் தயாராகிவிட்டார்கள்.

பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, சலுகையாக மெடிக்கல் இன்சூரன்ஸ்க்கான பிரீமியமும் அந்நிறுவனங்களே கட்டிவிடும். கடந்த ஆறு ஆண்டுகளில் இதற்காக அந்நிறுவனங்கள் செலுத்தும் தொகை சுமார் 85% உயர்ந்துள்ளதாம். இதன் மூலம் இன்சூரன்ஸ் கம்பெனிகள் கொள்ளை இலாபம் பார்த்து வருகின்றன. இதனால் சில நிறுவனங்கள் மருத்துவச் சுற்றுலாவை பணியாளர்களுக்கு முன்னிறுத்துகின்றனர். இந்த வகையை தேர்ந்தெடுக்கும் பணியாளர்கள், ஏதேனும் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தால் அவர்கள் இந்தியா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக அவர் குடும்பத்தில் ஒருவர் அவருடன் பயணிக்கலாம். இம்முறை தேர்ந்தெடுக்கும் பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையும், ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்கப்படுகிறது. இதனால் இந்நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பிரீமியத்தொகை கணிசமாக குறையும்.

இதுவரை மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லதாவர் மட்டுமே வெளிநாடுகளுக்குச் சென்று இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார்கள். இனி இது போல் பெரும் நிறுவனங்களில் வேலை செய்வோறும் மருத்துவச் சுற்றுலாவிற்காக வெளிநாடுகளுக்குச் செல்வார்கள். இப்பொழுதே ஆண்டிற்கு சுமார் 200,000 வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இது மேலும் பல மடங்காக பெருகும் என்பது நிபுணர்கள் கருத்து.

தொடரும்

Thursday, March 01, 2007

சென்னையில் ரியல் எஸ்டேட்

நான் 1999 மத்தியில் பொறியியல் படிப்பை முடித்து விட்டு எல்லோரையும் போலவே சென்னைக்கு வேலை தேடி வந்தேன். அப்போது தான் என் தந்தை அவரின் ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். அவருக்கு அப்பொழுது கிடைத்த மொத்த பணம் சுமார் 2 1/2 இலட்சம் ரூபாய். சரி வெறும் 5 அல்லது 6 % வட்டிக்கு வங்கியில் பணத்தை போட்டு வைப்பதை விட சென்னையில் எங்காவது வீட்டுமனை வாங்கலாமே என்று என் தந்தை எண்ணினார். சென்னையில் உள்ள ஒரு உறவினர் உதவியோடு வீட்டுமனை தேடினோம்.

சென்னை கொளத்தூரில் எங்கள் உறவினர் இருந்ததால் கொளத்தூரை சுற்றி தேடினோம். கையில் இருந்த பணத்திற்கு, பேரூந்து நிறுத்ததிலிருந்து 2 கி.மீ தூரம் வரை உள்ளே சென்றால் கூட இடம் எதுவும் கிடைக்கவில்லை. 4 இலட்சத்திற்கு குறைவாக ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. கடைசியாக குறைந்த பட்சமாக ஊரிலிருந்து அதிக தொலைவில் 3 1/2 இலட்சம் ரூபாய்க்கு ஒரு இடம் கிடைத்தது. ஆனால் தரகர் கட்டணம் மற்றும் இடம் பதிவு செய்யகட்டணம் என்று 4 இலட்சம் ஆகும் என்றதால் என் தந்தை நிலம் வாங்கும் ஆசையையே விட்டு விட்டார்.

2004ல் எனக்கு அமெரிக்கா வர வாய்ப்பு கிடைத்தது. அதற்கு ஒரிரு மாதங்கள் முன்பு மீண்டும் நிலம் வாங்கும் ஆசை எழுந்தது. போன தடவை சென்னை எல்லைக்குள்ளேயே பார்த்ததால் தான் நம்மால் முடியவில்லை என்றெண்ணி இந்த தடவை பார்த்தது சென்னையின் புற நகர் பகுதியான தாம்பரத்தில். தாம்பரம் பேரூந்து நிலையத்திலிருந்து முடிச்சூர் ரோடில் சுமார் 2லிருந்து 3 கி.மீ உள்ளே சென்று பார்த்தோம். விலை அப்போது 9 இலட்சம். எனக்கு தலைசுற்றியது. அமைதியாக விமானம் ஏறி அமெரிக்கா வந்து சேர்ந்தேன்.

கிட்டதட்ட 1 1/2 ஆண்டுகள் கழித்து 2005 ஆம் ஆண்டு இறுதியில் என் உறவினரிடம் தாம்பரத்தில் பார்த்த அதே வீட்டுமனையின் விலையைப் பற்றி விசாரித்தேன். அதன் விலை இப்போது 17 இலட்சம் என்றார். தாம்பரம்-வேளச்சேரி சாலை இப்பொழுது மிகவும் பிரபலமாக உள்ளது. அந்த சாலையில் விலை நிலவரம் என்ன என்று விசாரித்தேன். சேலையூரில் 16 முதல் 17 இலட்சம், மேடவாக்கத்தில் 18 முதல் 20 இலட்சம் என்றார். விக்கித்து போய் நின்றேன்.

கிட்டதட்ட 3 வருடங்களுக்கு பிறகு 2006 டிசம்பரில் (ஆம் இரண்டு மாதங்களுக்கு முன்னால் தான்) இந்தியாவிற்கு ஒரு மாத விடுப்பில் வந்தேன். பெற்றோர், உறவினர் ம்ற்றும் நண்பர்களுடன் இனிமையாய் 20 நாட்களை கழித்தேன். உண்மையிலேயே சென்னையில் வீட்டு மனை இந்த விலை விற்கிறதா? இல்லை நம் மக்கள் சும்மா சொல்கிறார்களா என என்க்கு சந்தேகம். ஏனென்றால் இவர்கள் சொல்லும் விலைக்கு பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் சாஃப்ட் வேர் இஞ்சினீயர்களாலே வாங்க முடியாதே. கடைசி பத்து நாட்களில் களத்தில் நேரடியாக குதித்து நான் அறிந்த உண்மை விலை நிலவரம்

ஒரு கிரவுண்ட் (2400 சதுர அடி) வீட்டு விலை

மதுரவாயல்- 35 இலட்சத்திற்கும் மேல்
மேடவாக்கம் - 30 இலட்சத்திற்கும் மேல்
தாம்பரம் - 30 இலட்சத்திற்கும் மேல்
கீழ்கட்டளை - 35 இலட்சத்திற்கும் மேல்
பள்ளிக்கரனை- 35 இலட்சத்திற்கும் மேல்
கூடுவாஞ்சேரி - 10 முதல் 12 இலட்சம்
இரும்புலியூர் - 28 இலட்சம்
பெருங்களத்தூர் - 25 இலட்சம்

இது 2006 டிசம்பர் நிலவரம் இப்பொழுது இன்னும் விலை ஏறி இருக்கலாம். உங்களுக்கு எப்படியோ... எனக்கு ஸ்..ஸ்..ஸ்... கண்ணை கட்டுதே...



இன்று மே, 04, 2007


கீழே உள்ள படம், இன்று தினமலரில் வந்துள்ளது


இந்த மேம்பாலம் அமைந்தால் இன்னும் விலை உயரும் அபாயம் உள்ளது. தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு கிரவுண்டின் இன்றைய விலை 45 இலட்சம்.

Wednesday, February 28, 2007

மென்பொருள் நிறுவனங்களின் மீது வரி

இந்தியாவில் இருக்கும் IT மற்றும் BPO நிறுவனங்களுக்கு இந்திய அரசாங்கம் 10 வருடம் வரிவிலக்கு அளித்திருந்தது. 2009 ஆம் ஆண்டோடு முடியும் இந்த வரிச்சலுகையை மேலும் சிறிது காலத்திற்கு நீட்டிக்க இந்தியாவிலுள்ள IT மற்றும் BPO நிறுவனங்கள் நமது பிரதமருக்கு மிக சமீபத்தில் NASSCOM நடத்திய ஒரு கருத்தரங்கில் கோரிக்கை வைத்தன. ஆனால் நமது நிதியமைச்சரோ இந்த ஆண்டு முதலே அனைத்து IT மற்றும் BPO நிறுவனங்களும் 11.22% Minimum Alternate Tax கட்ட வேண்டும் என்று 2007ஆம் ஆண்டுக்கான் பட்ஜெட்டில் அறிவித்துவிட்டார்.

இதற்கு சில நிறுவனங்கள் கவலை தெரிவித்திருந்தாலும், முன்னணி நிறுவனங்களான டாடா, இன்ஃபோசிஸ், விப்ரோ போன்றவை இதனால் பெரிய பாதிப்பில்லை என்றே தெரிவித்துள்ளன. ஆனால் NASSCOM, இந்த வரிவிதிப்பு IT மற்றும் BPO துறையின் முன்னேற்றத்திற்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு இது மிகப் பெரிய சுமை என்றும் அறிவித்துள்ளது. உலகில் சில நாடுகள் இன்னும் இது போன்ற துறைகளில் தங்கள் நாடுகளில் முதலீடு செய்ய வரிவிலக்கு அளித்துக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இத்தகய முடிவு வருந்தத்தக்கது என்றும் அறிவித்துள்ளது. இன்னும் சில IT மற்றும் BPO நிறுவனங்கள், அரசு 2009 வரை வரிவிலக்கு என்னும் உறுதிமொழியை காப்பாற்ற தவறி விட்டது என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.

நமக்கு பொருளாதாரம் பற்றி ஒன்றும் தெரியாது. ஏதாவது செய்து நன்றாக இருக்கும் IT மற்றும் BPO துறைகளின் முன்னேற்றத்தைக் கெடுக்காமல் இருந்தால் போதும் என்பதே என்னுடய வேண்டுதல்.