Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Wednesday, June 06, 2007

$17.00

சிவாஜி பட டிக்கெட் விற்பனை தமிழ்நாட்டில் ஆரம்பித்ததோ இல்லையோ அமெரிக்காவில் ஆரம்பித்துவிட்டது. இங்கு கலிஃபோர்னியா சாண்டியாகோ வில் ஜூன் 17ம் தேதி சிவாஜியை திரையிடுகிறார்கள். டிக்கெட் விலை தெரியுமா? 17 அமெரிக்க டாலர்கள் கிட்டதட்ட இன்றைய நிலவரத்துக்கு 700 ரூவா...too much...ம்ம்ம்ம்





பொதுவாக இந்திய திரைப்படங்களின் விலை இங்கு ஆங்கிலப்படங்களை விட கொஞ்சம் கூடுதலாக இருக்கும். ஆங்கிலப்படங்கள் 8 முதல் 10 டாலர் வரை இருக்கும். இந்திப்படங்கள் பொதுவாக $10.50 க்கும், தெலுங்கு மற்றும் தமிழ் படங்கள் $11 க்கும் விற்கப்படுவது வழக்கம். சந்திரமுகி கூட 11 டாலரில் தான் பார்த்தேன். ஆனால் சிவாஜி, இப்பொழுது 17 டாலருக்கு திரையிடப்படுகிறது.

இதுக்கெல்லாம் பயந்துடுவமா என்ன??? 51 டாலர் கொடுத்து 3 டிக்கெட் (பொண்டாட்டி புள்ளைய விட்டுட்டு சினிமாக்கு போனா வீடு திரும்ப முடியாது) வாங்கியாச்சில்ல.. மனசு கஷ்டமாதான் இருக்கு. என்ன பண்றது.. இப்பொல்லாம் ரஜினி படம் தவிர்க்கமுடியாததா போச்சு... ரஜினியை திட்டரவங்க கூட படம் பார்க்க மறக்கிறதில்லை....ம்ம்ம்ம்ம்

Tuesday, May 23, 2006

ஒரு தமிழ் சினிமா ரசிகனின் ஆதங்கம்...

நான் இந்த அமெரிக்கதேசம் வந்து இரண்டு ஆண்டுகள் ஆயிற்று. வந்த புதுதில் என் நண்பர் ஒருவர், பெரும்பான்மையான இந்தியப்படங்கள் எல்லாம் ஆங்கில படங்களின் பிரதியாக இருக்கும் இல்லையென்றால் ஆங்கில படங்களின் சாயலாவது இருக்கும் எனக் குற்றச்சாட்டை வைத்தார். அதிலும் குறிப்பாக நிறைய தமிழ்ப்படங்கள் ஆங்கிலப்படங்களின் பிரதி என்பது அவர் வாதம். நான் கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் ஆங்கில படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். அதுவும் எண்ணிக்கையில் மிகமிகக்குறைவு. அதனால் அன்று அவருடைய குற்றச்சாட்டு எனக்கு மிகுந்த அபத்தமாய் பட்டது.

இந்த இரண்டு வருடத்தில் கேபிள் டிவி, நூலகம், நெட்ஃப்ளிக்ஸ் உதவியால் குறைந்தது 250 ஆங்கிலப்படங்களாவது பார்த்து இருப்பேன். அவ்வப்போது திரையரங்கம் கூட செல்வதுண்டு. இப்போது என் நண்பரின் கூற்றில் ஓரளவு உண்மை இருப்பதாகவே கருதுகிறேன்.

அப்படியே முழுப்படத்தை(Man on Fire - ஆணை) பிரதி எடுப்பது ஒரு வகையென்றால், சில காட்சிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்வது இன்னொரு வகை. சமீபத்தில் பார்த்த கஜினி படத்தில், ஆங்கிலப்படத்திலிருந்த (Memento) கதாநாயகன் பாத்திரத்தை மட்டும் சுட்டு விட்டார்கள். இவர்களின் சுடும் திறனுக்கு முத்தாய்ப்பாய் 80 நிமிடம் ஒடுகிற ஒரு ஆங்கில படத்தின்(phone booth) முழுக்கதையை 20 நிமிட உச்சகட்ட காட்சியாக சமீபத்தில் வந்த சரத்குமார் படத்தில் பார்த்தேன். ஒரே ஆங்கில படத்தை இரண்டு மூன்று இயக்குநர்கள் ஓரே நேரத்தில் தமிழில் எடுத்த கூத்தெல்லாம் கூட உண்டு. இதில் என்னை மிகவும் பாதித்தது, நல்ல கலைஞன் என்று நாம் கருதும் கமலஹாசனின் சில படங்கள் (தெனாலி, அவ்வைசண்முகி) கூட ஆங்கிலப்படங்களின் பிரதியாக இருந்ததுதான்.

இதனால் எல்லா தமிழ்ப்படங்களின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகிறது. இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு நல்ல தமிழ் படம் பார்த்தாலும், இதே போல் ஏதாவது ஆங்கிலப்படம் வந்திருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது. இவர்கள் வெறும் ஆங்கிலப்படங்களை மட்டும் பிரதி எடுக்கிறார்களா இல்லை நமக்கு தெரியாத வேற்று மொழிப்படங்களையும் சுடுகிறார்களா என்ற சந்தேகமும் எழாமலில்லை.

இதுவும் ஒருவகையில் திருட்டுதான். திருட்டு விசிடிக்கு ஒருபுறம் போராடிக்கொண்டே இன்னொருபுறம் டிவிடியில் ஆங்கிலப்படங்களைப் பார்த்து காட்சி/கதை திருடுவது எந்த விதத்தில் நியாயம்? அடுத்தவனின் உழைப்பில் விளைந்ததை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனத் தன் பெயரைப் போட்டுக்கொள்வது அசல் ஏமாற்றுவேலை தானே? BIG எனும் ஆங்கிலப்படத்தை சுட்டு 'நியூ' எனும் படத்தை எடுத்தார் நம் எஸ்.ஜே. சூர்யா. ஆனால் அந்த திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே 'இது என் கற்பனையில் உருவான கதை' என்று கூசாமல் பொய் சொல்லியிருப்பார். கிரணின் குத்துப் பாட்டு வேண்டுமென்றால் அவரது கற்பனையில் உருவாகியிருக்கக்கூடும்

இதற்கான அவசியம் என்ன? நமக்கு திறமையில்லையா? நம்மில் திறமையானவர் இல்லையா? இல்லை வெள்ளைக்காரன் எங்கே தமிழ் படத்தைப் பார்க்கப்போகிறான் என்ற தைரியமா? வேண்டாமய்யா இந்த வேலை. உங்களை நம்புங்கள், உங்கள் திறமையை நம்புங்கள். உங்களால் நிச்சயம் உலகத்தரத்திற்கு திரைப்படங்களை எடுக்க முடியும். சொந்த உழைப்பில் நல்ல தரமான திரைப்படங்களை எடுத்து தமிழனின் திறமையை உலகத்துக்கு உணர்த்துங்களய்யா.