Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday, July 18, 2007

நேரு-எட்வினா-பமீலா

என்ன சொல்றதுனே தெரியல...

http://www.ibnlive.com/news/edwinanehru-affair-got-kashmir-deal-done/45181-3-single.html

அடபோங்கப்பா...நாட்டின் முக்கிய தலைவர்கள் முடிவெடுக்கும் முறைய பார்த்தா வருத்தமாதான் இருக்கு...அதிலேயும் இந்த மவுண்ட்பேட்டன் பிரபுவ??? நினைச்சா காமெடியாவும் இருக்கு, பரிதாபமாகவும் இருக்கு.

Monday, March 05, 2007

இன்னும் ஒரு வருடம் ஆகுமாம்...

காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வந்த போது, அட தீர்ப்பு சாதகமோ பாதகமோ எப்படியிருந்தாலும் சரி, முதலில் வந்த தீர்ப்பை நிறைவேற்றினால் போதும். சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று சொல்லுபவரிடம் இருந்து முதலில் 180TMC ஆவது வாங்கிடலாம், மிச்சத்தை அப்புறம் பார்த்துக்கலாம் என்று எண்ணினேன். அதற்கு முதலில் நடுவர் மன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டும் என்றார்கள். சரி அதற்கென்ன நம்மாட்கள் மத்திய அரசில் இருக்கிறார்களே சீக்கிரம் ஓரிரு மாதங்களில் முடித்து விடுவார்கள் என்று எண்ணினேன்.

இன்றைக்கு தினமலரில் வந்த செய்தியை பார்த்து அதிர்ந்து போனேன். நமது மத்திய நீர் வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ், நடுவர் மன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிட இன்னும் ஓராண்டிற்கு மேலாகும் என்று சொல்கிறார்.

முதலில் மேல்முறையீடு செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் 90 நாட்கள் அவகாசம் உள்ளதாம். இன்றைய தேதிக்கு தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களுமே மேல்முறையீடு செய்ய போவதாக அறிவித்துள்ளன. இவற்றின் மீது முடிவெடுக்க நடுவர் மன்றத்திற்கு ஓராண்டு வரை அவகாசம் உள்ளதாம். அதன் பிறகே, தீர்ப்பை கெஜட்டில் வெளியிடும் பிரச்சனை வருமாம். அதாவது அதன் பிறகு கூட இத்தீர்ப்பை கெஜட்டில் வெளியிடுவோம் என்று சொல்லவில்லை. 'கெஜட்டில் வெளியிடும் பிரச்சனை ' வரும் என்று தான் சொல்கிறார். சட்டப்படி தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை போலும்.

ஏற்கனவே 18 வருடங்களாக (ஏதோ இல்லாததை கண்டுபிடிப்பதை போல) ஆராய்ந்து ஏதோ தீர்ப்பை சொன்னார்கள். அதற்கு மேல் என்னய்யா மேல்முறையீடு.. ஒரு வருடம்... அப்படி 18 வருடங்களாக கண்டுபிடிக்காததை எப்படி இந்த ஒரு வருடத்தில் கண்டறிவீர்கள். சரி அப்படியே ஒரு வருடத்தில்(?) ஏதாவது முடிவெடுத்தால் அதை செயல்படுத்துவார்களா என்றால் அதற்கும் உத்தரவாதம் இல்லை. என்ன எழவு இது எனக்கும் ஒன்றும் புரியவில்லை. இன்னும் எத்தனை வருடம் தான் தமிழன் காத்துக்கிடப்பான். இதையெல்லாம் பார்த்தால் சில சமயம் நமது நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் மீது ஒருவிதமான வெறுப்புணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை.

Friday, September 29, 2006

தேசமா? மதமா?

கடந்த சில நாட்களாக கஷ்மீரில் பெரும் போராட்டம் நடந்து வருகிறது.
2001 ஆம் ஆண்டு நமது இந்திய நாட்டு பாராளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு முக்கிய காரணமாக கருதப்ப்டும் முகமது அஃப்சல் என்ற ஜெய்-ஷி-முகமது தீவிரவாத இயக்கத் தொடர்பு கொண்ட ஒரு தீவிரவாதியை இந்தியாவிலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் முறையாக விசாரித்து மரணதண்டனை அளித்துள்ளது

இதில் என்ன தவறு... இந்தியர் அனைவரும் வரவேற்க வேண்டிய விஷயம்தானே. ஆனால் கஷ்மீரில் நடப்பதை பார்த்தால் மிக வருத்தமாக உள்ளது...

http://www.hindu.com/thehindu/holnus/001200609291911.htm

ஒரு தீவிரவாதிக்காக இவ்வளவு போராட்டம்.. இவ்வளவு வன்முறை..
ஏனய்யா.. நீதிமன்றங்கள் முறையாக விசாரிக்கவில்லையா? இல்லையே.. அவன் ஒரு முஸ்லீம் என்பதால் தானே.. நான் பல இடங்களில் முஸ்லிம் தீவிரவாதி என முத்திரை குத்தப்படும் போது வருத்தப்பட்டிருக்கிறேன்.. சில தீவிரவாதிகளால் முஸ்லிம் மதத்திற்கே கெட்ட பெயர் என்று யோசித்திருக்கிறேன்...

ஆனால் இன்று நடப்பதை பார்த்தால் என் எண்ணத்தை நான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் போலுள்ளது.. இங்கு போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் பொதுமக்கள்...இந்தியர்கள்.. நியாயமாக சந்தோஷப் பட வேண்டிய விஷயத்திற்கு கொடி பிடிக்கிறார்கள்...ஏனென்றால் முகமது அஃப்சல் ஒரு முஸ்லீம்... தேசத்திற்கு பிறகுதான் மதம் என்பது உங்களுக்கு புரியவே புரியாதா? முகமது அஃப்சலால் கொல்லப்பட்ட 11 பேரின் குடும்பங்களுக்கு இந்த போராட்டக்காரர்கள் என்ன சமாதானம் சொல்வார்கள்...

இந்த வெட்கம் கெட்ட செயலுக்கு, கஷ்மீரின் இந்நாள் மற்றும் முன்னாள் முதல்வர்களின் ஆதரவு. மேலும் வெட்கங்கெட்டதனமாய் மத்தியில் ஆளும் காங்கிரஸின் பதில். நாங்கள் இவர்களின் கோரிக்கையை ஆதரிக்கவும் இல்லை மறுக்கவும் இல்லை என்று. எல்லாவற்றிற்கும் மேலாக குறைந்த பட்சம் புனித ரமலான் மாததில் தூக்கிலிடாமல் அடுத்த மாததிற்கு ஒத்தி வைக்க வேண்டுமாம். இந்த தீவிரவாதிக்கும் புனித மாததிற்கும் என்ன சம்பந்தம். 11 பேரை கொல்ல காரணமாயிருந்த ஒருவனை அல்லா ஏற்பாரா? அல்லது அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதைத்தான் அவர்களின் கடவுள் ஏற்பாரா?

இந்த செய்திகளை படித்து மிக மன உளைச்சலுக்குள்ளானேன். எந்த மதமாயிருந்தால் என்ன.. தவறு செய்தவன் தண்டனை அனுபவித்துதானே ஆகவேண்டும். கஷ்மீரில் முகமது அஃப்சலின் மரண தண்டனையை எதிர்க்கும் முஸ்லீம் மக்களுக்கு, தாம் முதலில் இந்தியர் என்பதை உணரும் நாள் என்று தான் வருமோ?

Friday, July 14, 2006

பகைவனுக்கு அருளுதல் அவசியமா?

இந்தியா 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிலநடுக்க நிவாரண நிதியாக பாகிஸ்தானுக்கு அளித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டது. உடனடியாக இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி உதவியது. அது மட்டுமில்லாமல் நிலநடுக்க நிவாரண நிதியாக 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளிப்பதாக உறுதியளித்தது. அதன்படி ஜூலை 11ம் தேதி, ஆம் ஜூலை 11ம் தேதி 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானுக்கு அளித்தது. அதே நாளில் 200க்கும் மேற்பட்ட இந்தியர்களை கொல்ல தீவிரவாதிகளுக்கு உதவி பாகிஸ்தான் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டது.

http://www.adnki.com/index_2Level_English.php?cat=Politics&loid=8.0.320012712&par=0

http://www.reliefweb.int/rw/RWB.NSF/db900SID/LSGZ-6RLGYM?OpenDocument

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

அதெல்லாம் சரி, நாம் ஏன் பாகிஸ்தானுக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளிக்கவேண்டும்?
பரஸ்பரம் உதவிக்கொள்ளும் அளவுக்கு நட்பு நாடா?
இல்லையே!!! ஏற்கனெவே மூன்று தடவை போர் புரிந்து பல்லாயிரம் ராணுவ வீரர்களை இழந்துள்ளோமே!!!
ஒரு வேளை பாகிஸ்தான் ஏழை நாடாக இருக்குமோ?
இருக்கலாம் என்று எண்ணும் வேளையில் ஒரு செய்தி கண்ணில் பட்டது.

http://www.jpost.com/servlet/Satellite?cid=1150885885707&pagename=JPost%2FJPArticle%2FShowFull

http://www.newsmax.com/archives/articles/2006/6/29/172920.shtml

ஜுன் 30ம் தேதி அமெரிக்க அரசாங்கம் 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு விற்க ஒப்புதல் அளித்துள்ளது. 18 F-16 ரக புதிய விமானங்களை பாகிஸ்தான் வாங்க போகிறது. இதில் மூன்று விஷயங்கள் மிகத்தெளிவாக புரிகிறது.

1) பாகிஸ்தான் ஒரு ஏழை நாடல்ல. 5 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து ராணுவ தளவாடங்களை வாங்கும் ஒரு நாடு ஏழை நாடாக இருக்க வாய்ப்பில்லை. வாங்கும் 18 விமானங்களில், 2 விமானத்தைக் குறைத்தாலும் நிவாரணப்பணிகளை மிகச் சிறப்பாகச் செய்யலாம்.

2) சரி, பாகிஸ்தான் ஏன் F-16 ரக விமானம் வாங்குகிறது. ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்கவோ? ரஷ்யாவில் குண்டு போடவோ? அணுகுண்டு தரச் சொல்லி சீனாவை மிரட்டவோ? இல்லையடா, அது உன் மீது போர்தொடுக்க வாங்கப்பட்டவை. உன்னை அழிக்க, உன்னை மண்ணோடு மண்ணாக்க வாங்கப்பட்டவை. இது இந்தியாவில் இருக்கும் கடைசி குடிமனுக்கும் தெரிந்த நிதர்சனமான உண்மை.

3) இந்திய உதவியால் மிச்சமடைந்த 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தான் என்ன செய்யும்? நாட்டு முன்னேற்றத்திற்கு பயன்படுத்த போகிறதா? ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பயன் படுத்த போகிறதா? இல்லையே? எல்லையில் இருக்கு தீவிரவாத கும்பல்களுக்கு பண உதவி செய்து இந்தியாவில் பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவ உதவ போகிறது

பிறகு ஏனய்யா பாகிஸ்தானுக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளிக்கவேண்டும்? நான் என் நாட்டிற்காக கட்டிய வரிப்பணம், என் சகோதரியை விதவையாக்கியவர்களுக்கு, என் சகோதரனை எல்லையில் கொல்லத்துடிப்பவனுக்கு ஏன் தர வேண்டும்? எவ்வளவு யோசித்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.

நம் பிரதமர் உலகம் போற்றும் பொருளாதார மேதை, அறிவுஜீவி, ஏன் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானுக்கு கொடுத்தார்?
உங்களுக்கு ஒருவேளை தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள், புரிந்து கொள்கிறேன்

Wednesday, May 31, 2006

இலாபம் தரும் பதவி

சட்டப்படி தவறு என்றால் அச்சட்டத்தையே மாற்றுவோம் என்கின்ற அவலம் இப்பொழுதெல்லாம் மிகச் சாதாரணமாக நடக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இலாபம் தரும் பதவியில் இருப்போர் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் போட்டியிடக்கூடாது என்று மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இது தெரிந்தும் இப்படிப்பட்ட பதவியில் இருக்கும் பெருந்தலைவர்கள் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டதே தவறு. இப்படி சட்டத்திற்கு புறம்பாக போட்டியிட்டு வென்றதோடு மட்டுமில்லாமல் மத்திய அரசில் மிகப் பெரும் பதவிகளில் வேறு இருக்கிறார்கள்.

இப்படி சட்டத்திற்கு புறம்பாக போட்டியிட்டு வென்ற 40க்கும் மேலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி நிச்சயம் பறிக்கப் பட வேண்டியது தான். இவர்கள் நிச்சயம் சட்ட விரோதமாகத்தான் பெரும் பதவிகளில் இருக்கிறார்கள். ஆனால் இவ்விஷயம் வெளியில் தெரிந்த பின் மத்திய அரசு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இப்பொழுது அவசரமாகச் சட்டம் இயற்றுகிறது. இவர்களுக்கு தேவையான வகையில், பாதகம் நேராத வகையில் இலாபம் தரும் பதவிகளில் இருந்து சில பதவிகளுக்கு விலக்கு அளிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. அதாவது சட்ட விரோதமாக பதவியில் இருக்கும் அந்த 40க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளைக் காப்பற்ற மத்திய அரசு இச்சட்டத்தை இயற்றுகிறது.

நமது மதிப்புக்குரிய குடியரசுத்தலைவர் இச்சட்டத்தை நன்றாக புரிந்து கொண்டு, இச்சட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு, இச்சட்டத்தில் 'இலாபம் தரும் பதவி' யில் இருந்து நீக்கப்பட்ட சில பதவிகளை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால் கொடுமை என்னவென்றால் மத்திய சட்ட அமைச்சகம் இச்சட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யாமல் மறுபடியும் குடியரசுத்தலைவருக்கு அனுப்பவுள்ளது. ஏனெனில் குடியரசுத்தலைவரின் பரிந்துரைகளை செயல்படுத்தினால், சில தலைவர்களின் பதிவிகளை அவர்களால் காப்பாற்ற இயலாது. மத்திய அரசு இவ்வாறு இரண்டாம் முறை அனுப்பினால், குடியரசுத்தலைவருக்கு அதை மறுக்கும் அதிகாரமில்லை. எனவே அவர் இச்சட்டத்தை அங்கீகரிப்பதைத் தவிர வேறுவழியில்லை.

இந்த அரசியல்வாதிகளால் 33% மகளிர் சட்டத்தை இயற்ற இயலாது, தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த எத்தனையோ நல்ல சீர்த்திருத்தங்களை சட்டமியற்றயிலாது. ஆனால் இவர்களுக்கு பாதகமென்றால் உடனே சட்டத்திருத்தம் கொண்டு வந்துவிடுவார்கள். ஆளும் அரசு என்ன நினைத்தாலும் சட்டமியற்றி சாதித்துக் கொள்ள முடியும் என்கிற வகையில் தான் நம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளதா? ஆம் என்றால் எங்கோ தவறு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

Monday, May 22, 2006

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?
Thursday May 11, 2006

இப்பதிவு வெளியாகும் வேளையில் தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டுகளின் தலையெழுத்தைத் தமிழக மக்கள் நிர்ணயத்திருப்பார்கள். தி.மு.க அணியோ அ.இ.அ.தி.மு.க அணியோ, கருணாநிதியோ ஜெயலலிதாவோ, அல்லது கூட்டணி ஆட்சியோ இன்னும் 5 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி இருக்கப் போகிறது.

இரண்டு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு சரமாரியாக இலவச சலுகைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் அள்ளித் தெளித்துள்ளன. மக்களும் இவர்களின் இலவச சலுகைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் நம்பி மிகுந்த எதிர்பார்ப்புடன் இவர்களுக்கு ஒட்டளித்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

தி.மு.க வின் தேர்தல் அறிக்கையைக் காண கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்
http://www.iamformylapore.com/content/emtamil.pdf
அ.இ.அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கையைக் காண கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்
http://www.aiadmkindia.org/manifesto%202006/Election%20Manifesto-%20English%20Tamil%20Nadu.pdf

இதைத் தவிர இந்த இரு கட்சிகளுமே அவர்களின் தேர்தல் அறிக்கையில் இல்லாத பல சலுகைகளைப் போகிறபோக்கில் இறைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். பற்றாக்குறைக்கு இவர்களின் கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் வாக்குறுதிகள் வேறு.

எங்கும் இலவசம் எதிலும் மானியம். தொலைக்காட்சிப்பெட்டி, தங்கத்தாலி, கணினி, எரிவாயு அடுப்பு, மிதிவண்டி என்று இன்னும் பல பொருட்கள் இலவச வரிசையிலுண்டு. திருமணத்திற்கு 15000, கர்ப்பிணிகளுக்கு மாதம் 1000, வேலையில்லாதோற்கு மாதம் 300 என்று பல நிதியுதவிகள். தமிழனை சோம்பேறியாக்கப் போட்டி போடுகின்றன கழகங்கள். எனக்குத் தெரிந்த வகையில் இத்தகைய இலவசத் திட்டங்களால் எந்த நாடோ சமுதாயமோ முன்னேறியதாக நினைவில்லை. மாறாக அது அச்சமுதாயத்தை அழிவுப்பாதைக்கே கொண்டுச் செல்லும். இதையெல்லாம் காணும் பொழுது 'வேட்டி சேலை கேக்காதீங்க, வேலை வெட்டி கேளுங்க வேட்டி சேலை நாமலே வாங்கிக்கலாம்' எனும் தமிழ்த்திரைப்பட வசனம் நினைவுக்கு வருகிறது.

இலவசம் குறித்த வாதங்கள் ஒரு புறம் இருக்க, இந்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்படும் என்பதுதான் இப்போதுள்ள மிகப் பெரிய கேள்வி. இப்பொழுதே பிரதமர் நிழலில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென தி.மு.க தலைவர் பிரதமரை துணைக்கழைக்கிறார். எவெரேனும் குறித்துக் கொண்டு, அ.தி.மு.க தலைவருக்குத் தேர்தலுக்குப்பின் நினைவுறுத்தினாலன்றி அவர் அளித்த வாக்குறுதிகள் அவருக்கு நினைவிருப்பது ஐயமே. தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் தேர்தல் அறிக்கைகள் கட்சிகளின் ஜனநாயக உரிமை அதில் தலையிட முடியாது என மறுத்து விட்டன. அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் எந்த வாக்குறுதியை வேண்டுமென்றாலும் அளிக்கலாம். அது நிறைவேற்றப்பட முடியாததாகினும் கவலையில்லை. வாக்குறுதிகளின் நம்பகத்தன்மைக் குறித்தும் கவலையில்லை. வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தபின் நிறைவேற்றவில்லையென்றாலும், யாரும் ஒன்றும் செய்ய இயலாது. இந்த விஷயத்தில் அரசியல் சட்டங்கள் மிகத்தெளிவாக அரசியல் கட்சிகளுக்குச் சாதகமாகத் தீட்டப்பட்டுள்ளன. அப்படியென்றால் யார் தான் இதை கண்காணிப்பது?

ஓட்டு போட்டவுடன் நம் வேலை முடியவில்லை மக்களே! வல்லாரை மூலிகை சாப்பிட்டாவது இவர்கள் அளித்த வாக்குறுதிகளை நினைவில் வைக்க வேண்டும். வெற்றிப் பெற்று வரும் அரசு, அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். குறைந்த பட்சம் வாக்குறுதிகளை நிறைவேற்ற நேர்மையான முயற்சிகளையாவது எடுக்க வேண்டும். அப்படி கொடுத்த வாக்குறுதிகளை மறுப்பவருக்கும், மறப்பவருக்கும் அல்லது நிறைவேற்றாமலிருக்க ஏதாவது சாக்கு சொல்வோருக்கும் தண்டனை கொடுக்க நாம் 5 ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் மூன்றாண்டுகளில் வரும். வேறு எதற்கும் பயப்படாத அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் பயப்படும் ஓரே ஆயுதம் ஓட்டு. அதிர்ஷ்டவசமாக ஜனநாயகம் அந்த ஆயுதத்தை மக்களிடம் அளித்துள்ளது. அதற்கு பயந்துதான் கோடீஸ்வரனும் குடிசைக்குள் நுழைந்து ஓட்டு கேட்கிறான். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபடும் கட்சிக்கே அடுத்த ஓட்டு என்பதை உணர்த்துவோம். இதனால் இரு பயன்கள். ஒன்று அரசியல் கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபடும். இரண்டு அடுத்த தேர்தலில் நியாமான வாக்குறுதிகளை அளிக்கும்.

தமிழா! உன் மறதியை மூலதனமாகக் கொண்டு இங்கு அரசியல் வியாபாரம் நடக்கிறது. நீ உறங்கும் வரை உன்னை உறிஞ்சி உயர்வடையும் இந்த அரசியல் கூட்டம்.

விழித்துக் கொள்.