Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Monday, March 19, 2007

உலகின் மிகப்பெரிய விமானம் - AirBus A380




பல காலமாக விமான தயாரிப்பில் முடிசூடா மன்னனாக விளங்கும் போயிங் நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரும் சவாலாக ஏர்பஸ் நிறுவனம் A380 எனும் உலகின் மிகப்பெரிய விமானத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது வரை போயிங் நிறுவனத்தின் 747 விமானமே உலகின் மிகப்பெரிய விமானமாக இருந்தது. ஆனால் இனி ஏர்பஸ் நிறுவனத்தின் A380 விமானமே(555 பயணிகள்) உலகின் மிகப்பெரிய விமானமாக இருக்கும். இந்த விமானம் 2005ஆம் ஆண்டிலேயே மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்று தான் அமெரிக்காவில் முதன் முதலாக தன் பயணசேவையை தொடங்கியது.






கிட்டதட்ட 13 வருடங்களாக உழைத்து இந்த புதிய விமானத்தை வடிவமைத்துள்ளார்கள்


Passenger: 555 (If three class)
853 (all-economy class)
Range: 8,000 nm./14,800 km (with max. passengers)
Max. weight: 562 tonnes
Max. take-off weight: 560 tonnes
Max. landing weight: 386 tonnes
Max. fuel capacity: 81,890 USg
310,000 litres
Typical operating weight empty: 278.8 tonnes
Typical volumetric payload: 66.4 tonnes
Speed: Max cruising speed: 652mph
Long range cruising speed :630mph
Length: 73m (239ft 3in)
Height: 24.1 m (79ft 7in)
Cabin lenght: 50.68m (166ft 3in)
Max. cabin width main deck: 6.58m (21ft 7in)
Max. cabin width upper deck: 5.92m (19ft 5in)
Wing span: 79.8m (261ft 8in)
Wing area: 845m sq (9,100 ft sq)
Wheelbase: 30.4m (99ft 8in)
Engine: Rolls-Royce Trent 900
Thrust Range: 70,000 lb slst
Cost: [June 06]US$295.6m - US$316m
[20/06/05]approx. US$295 million
[launch]approx. US$285 million


இவ்விமானத்தைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு http://en.wikipedia.org/wiki/Airbus_A380



இன்று முதல் A380 விமானம் LAவில் உள்ள LAX விமான நிலையத்தில் தரையிறங்கியது. இவ்வகை விமானங்களுக்கு தக்கவாறு LAX விமான நிலையத்தில் பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து தேவையான மாற்றங்கள் செய்தனாராம். சிறிது நிமிடங்களில் அடுத்த A380 விமானம் நியுயார்ர்கில் JFK விமான நிலையத்தில் தரையிறங்கியது. LAவில் இறங்கிய விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை. ஆனால் நியுயார்ர்கில் இறங்கிய விமானத்தில் 550 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இதெல்லாம் இருக்கட்டும், எனக்குள்ளதெல்லாம் ஒரே ஆசைதான். அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு ஒரு 10 - 12 மணி நேரத்தில் செல்லவேண்டும். இப்போதைய 24 மணி நேரம் எல்லாம் ரொம்ப அதிகம். உட்காரமுடியவில்லையப்பா...

Thursday, March 08, 2007

Obsessive-Compulsive Disorder (OCD)


அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு USA Netxwork தொலைக்காட்சியில் வரும் MONK தொடர் கண்டிப்பாக தெரிந்து இருக்கும். பார்க்காதவர்களுக்கு, மாங் என்னும் கதாபாத்திரம் ஒரு தனியார் துப்பறியும் நிபுணர். இவர் நம்ம ஊர் துப்பறியும் சாம்பு மாதிரி தான். வித்தியாசமா யோசித்து குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பார். ஆனால் இவருக்கு Obsessive-Compulsive Disorder (OCD)ன்னு (தமிழ்ல என்னன்னு சொல்றதுங்க) ஒரு குறைபாடு. அதாவது எதைக் கண்டாலும் பயம், சந்தேகம் அல்லது அறுவெறுப்பு. நம்ம தெனாலி கமல் தன்னோட வியாதி பத்தி சொல்லுவாரே அதே குறைபாடுதான்... கமல் படத்துல இலங்கைல நடந்த போர் மாட்டிக்கிட்டதால அந்த குறைபாடு வந்ததுன்னு சொல்லுவார். இந்த மாங் தொடரில் கூட மாங்கின் மனைவி இறந்ததால அவருக்க இந்த குறைபாடு வந்ததா சொல்வார்கள்.
.
உண்மையிலேயே இந்த குறைபாடு வருவதற்கான தெளிவான காரணங்கள் இன்னும் நிரூபிக்கப்படலன்னு இத்துறை நிபுணர்கள் சொல்கிறார்கள். இதற்கான ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டுள்ளது. மூளையின் முற்பகுதியில் இருந்து உட்பகுதிகளுக்கு விஷயங்களை கொண்டுசெல்வதில் உள்ள குறைபாடு தான் இதற்கு காரணம் என்று ஆராய்ச்சி ஒரு கருத்தை நிறுவுகிறது. இப்படி மூளையில் விஷயங்களை கொண்டு செல்ல பயன்படும் வேதிப்பொருள் செரொடொனின்(serotonin). இந்த செரொடொனின் குறைபாடு இந்த வியாதிக்கான காரணமாக இருக்ககூடும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். மூளையின் செயல்பாடுகளை படம் பிடித்து பார்த்ததில், செரொடொனின் அதிகரிக்க மருந்து கொடுத்த போதும், மற்றும் cognitive behavioral psychotherapy செய்த போதும் மூளையின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
.
இந்த குறைபாடு 9 வயது முதல் 40 வயது வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆண் பெண் இருபாலருக்கும் வரலாம். ஆனால் இதுவரை இதனால் பாதிக்கப்பட்டவர்களில் 33% பேருக்கு சிறுவயதிலேயே இக்குறைபாடி தோன்றிவிட்டதாம். இது ஒரு பரம்பரை வியாதி இல்லை என்றாலும் பெற்றோருக்கு இக்குறைபாடு இருந்தால் அது குழந்தைகளை தாக்குவதற்கான் வாய்ப்பு உண்டாம். இப்போதைய நிலவரப்படி சராசரியாக நான்கு மருத்துவர்களை பார்த்து, சராசரியாக 9 வருடம் மருத்துவம் செய்த பின்னர்தான் இக்குறைப்பாட்டை சரியாக கண்டு கொள்ள முடிகிறதாம்.


பக்கத்து படத்தில் இருப்பவர் பெயர் ஜெஃப் பெல் (Jeff Bell). அமெரிக்காவில் பே ஏரியாவில் இருக்கும் இவர் ஒரு வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர். இவருக்கு இக்குறைபாடு 7 வயதில் தோன்றியது என்கிறார். ஆனால் இளைஞனாக இருந்த போது நடந்த ஒரு படகு விபத்து இக்குறைப்பாடு வீரியத்துடன் வெளிக்கொணர்ந்ததாம். அதுவரை சகஜ வாழ்க்கையிலிருந்த அவரால் அதன் பின்னர் எந்த ஒரு வேலையும் செய்ய இயலாமல் எதற்கெடுத்தாலும் பயப்படுவாராம். பிறகு மனநலமருத்துவரிடம் சிகிச்சை பெற்ற பின் சகஜ் வாழ்க்கைக்கு திரும்பிய அவர் OCD பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
"Rewind, Replay, Repeat" என்பதே அவர் புத்தகத்தின் தலைப்பு. எல்லாருக்கும் பயம், சந்தேகம் என்பது உண்டு. எல்லோரும் கதவை பூட்டியபின் ஒரு முறைக்கு இருமுறை இழுத்து பார்க்கிறோம், ஒருதடவை பார்த்தாலே போதும் ஆனால் இரண்டுத்டவை சரி பார்க்கிறோம். வீட்டை விட்டு செல்லும் போது அடுப்பு அணைத்தோமா என்று சரிபார்க்கிறோம். ஒருதடவை சரி இருதடவை செய்தாலும் சரி, ஆனால் அதையே பலதடவை செய்தால் அதுதான் OCD என்கிறார் பெல். ஆராய்ச்சியாளர்கள் சொல்வது போல் இது நிச்சயம் biochemical பிரச்சனையே என்கிறார். இதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால் நிச்சயம் இக்குறைப்பாட்டை குணமாக்க முடியும் என்கிறார் இந்த தன்னம்பிக்கையாளர்.

Wednesday, November 22, 2006

ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...4

2003 மத்தியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி அமெரிக்காவில் சுமார் 400,000 எம்ப்ரையோஸ்கள்(embryos) உபரியாக உள்ளது இவை அனைத்தும் தனியார் கருத்தரிப்பு நிலையங்களில் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. முதலில் இவ்வளவு எம்ப்ரையோஸ் உபரியானதன் காரணம் என்னவென்று பார்ப்போம்.

இயற்கையாக கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பில்லாத தம்பதியினருக்காக செயற்கை முறையில் ஆய்வகத்தில் கருத்தரிக்க செய்து பின்னர் அதை பெண்ணின் உடலில் செலுத்தி குழந்தை பெற்றுக் கொள்ள உதவுவதே கருத்தரிப்பு நிலையங்களின் பணி. இதற்காக வரும் தம்பதியினரில், பெண்ணுக்கு சில மருத்துவ முறைகள் செய்து அவரிடம் இருந்து தரமான 24 சினை முட்டைகளை எடுப்பர். பின்னர் ஆணிடமிருந்த பெறப்பட்ட விந்தணுவின் மூலமாக ஆய்வகத்தில் அந்த 24 முட்டைகளையும் கருத்தரிக்கச் செய்வர். மூன்று நாட்களுக்கு பிறகு 24 எம்ப்ரையோஸ் ரெடி. அதிலிருந்து ஒரு 4 எம்ப்ரையோஸ்களை எடுத்து பெண்ணின் கருப்பைக்குச் செலுத்துவர். நான்கு எம்ப்ரையோஸ்களில் ஏதாவது ஒன்று குழந்தையாக அல்லது 2 இரட்டைக் குழந்தையாக மாறும். மிச்சமுள்ள எம்ப்ரையோஸ்களை எதிர்கால தேவைக்காக உடனடியாக திரவ நைட்ரஜனில் மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாப்பாக சேமிப்பர்.

அப்படி முதல்முறை செலுத்தப்பட்ட எம்ப்ரையோஸ்கள் சிலபல காரணங்களால் குழந்தையாக மாறாவிட்டாலோ, அல்லது இரண்டாவது குழந்தை வேண்டுமென்று நினைத்தாலோ, சேமித்து வைக்கப்பட்ட எம்ப்ரையோஸ்களிலிருந்து ஒரு 4 எடுத்து மறுபடியும் பெண்ணின் உடலில் செலுத்துவர். இந்த செய்முறைகளின் போது சில எம்ப்ரையோஸ்கள் அழிந்து போகும் வாய்ப்பும் உண்டு. எப்படி பார்த்தலும் 16 முதல் 20வது எம்ப்ரையோஸ்கள் வரை உபரியாகவிடுகின்றன. இப்படி உபரியாவதை சில கருத்தரிப்பு நிலையங்கள் பத்திரமாக பாதுகாக்காமல் முதலிலேயே அழித்துவிடுகின்றன. சில பெற்றோர் பத்திரமாக கருத்தரிப்பு நிலையங்களின் உதவியுடன் பாதுகாத்து வருகின்றனர்.

இப்படி மிச்சமடைந்த 400,000 எம்ப்ரையோஸ்கள் தான் இப்போது அமெரிக்காவின் தலைவலி.
இவ்வளவு எம்ப்ரையோஸ்களை அழிப்பதா? அல்லது ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு அளிப்பதா? இல்லை தத்து கொடுப்பதா? இது தான் மக்கள் முன்னுள்ள கேள்வி.
குழந்தையில்லா மற்ற பெற்றோருக்கு எம்ப்ரையோஸ்களை தத்து கொடுக்கலாமென்றால், அதை பெறுவதிற்கு மக்கள் மனதில் விருப்பமில்லை. தமக்கு சம்பந்தமே இல்லாத குழந்தையை சுமந்து பெற்றுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. தவிர அவர்கள் தன்னுடைய எம்ப்ரையோஸ்களை உருவாக்க வ்ழியிருக்கும்போது ஏன் அடுத்தவருடையதை நாட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். எனவே இதை அழிக்காமல் ஸ்டெம்செல் ஆராய்ச்சிக்கு அளிக்கலாம் என்று ஒரு பிரிவினர் கருதுகின்றனர்.

ஆனால் மனித நோய்களை குணப்படுத்த மனித கொல்லமுடியாது என்பது ஒரு பிரிவினரின் வாதம். அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் வாதமும் அதே. ஆம் எம்ப்ரையோஸ் என்பது எதிர்கால மனிதனே, எனவே அதை ஒரு மனித உயிர் போன்றே கருத வேண்டு என்கின்றனர் ஒரு பிரிவினர். ஒரு சிலரோ இது மனிதனுக்கு முந்தைய பருவம் இதை மனிதனாக கருதக்கூடாது, எனவே இதை ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். இதற்கு மட்டும் அரசாங்கம் உதவியளித்தால், எம்ப்ரையோஸ்களிடமிருந்து பெருமளவில் ஸ்டெம்செல்கள் பிரித்தெடுக்கப்பட்டு மிகப்பெரியளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்படும். ஆனால் ஏதோ ஒரு மாநில உயர்நீதிமன்றத்தில் எம்ப்ரையோஸ் மனிதனே என்று தீர்ப்பு கூட வந்ததாக கேள்வி.

அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், இது வரை எம்ப்ரையோஸ்களிடமிருந்து ஏற்கனவே பிரித்தெடுக்கப்பட்ட ஸ்டெம்செல்களை வேண்டுமானால் ஆராய்ச்சிக்குட்படுத்தலாம். ஆனால் இனி புதிதாக எம்ப்ரையோஸ்களை அழித்து ஸ்டெம் பிரித்தெடுக்க அனுமதியில்லை என்று சொல்லியுள்ளார். இந்த நிபந்தனையுடன் தான் ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு அவர் நிதிஉதவி அளித்துள்ளார். மக்க்ளே இதில் நம் பங்கு, ஆராய்ச்சி குறித்த முடிவுகளை அவ்வப்போது தெரிந்து கொள்வதோடு அரசாங்கத்திம் முடிவுக்கும் பொறுமையாக காத்திருப்பதே. இறைவனைத்தவிர அனைத்திற்கும் பதில் கொடுக்கும் வல்லமை பொருந்தியதாக இருப்பது அறிவியல் மட்டுமே.

Monday, November 20, 2006

ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...3

ஸ்டெம் செல்கள் குறித்து தேட தேட மிக ஆச்சரியமான பல விஷயங்கள் தெரிய வருகின்றன. ஸ்டெம் செல்கள் அதிக அடர்த்தியுடன் காணப்படும் மற்றொரு பொருள் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி இரத்தம். ஆம் குழந்தை பிறந்தவுடன் தேவையில்லையென்று அறுத்து அப்புறப்படுத்தபடும் தொப்புள்கொடியில் இருக்கும் இரத்ததிலிருந்து நிறைய ஸ்டெம்செல்களை பிரித்தெடுக்க இயலும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இவ்வகையான ஸ்டெம் செல்கள், எலும்பு மஜ்ஜை மற்றும் வழக்கமான இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கும் ஸ்டெம் செல்களை விட மிகச் சிறந்தது என்றும், இந்த வகை ஸ்டெம் செல்களை உபயோகிக்கும் போது நோயாளியின் செல்கள் பெரும்பாலும் இதை நிராகரிப்பதில்லை என்றும் கண்டறிந்துள்ளனர்.

இந்த செல்கள் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருப்பதால், நோயாளி உடலில் செலுத்தும் போது, நோய்வாய்ப்பட்ட செல்களால், இதனை அறிந்து கொள்ள இயலுவதில்லை. அதனால் நோய் இந்த செல்களுக்கு பரவுவதில்லை. அதேபோல் முழுவளர்ச்சியில்லாததால், இச்செல்களால் நோயாளிக்கு வேறு எந்த வகையான வியாதியையும் கொண்டு செல்ல இயலாது. எனவே இவ்வகையான செல்கள் மிகவும் பாதுகாப்பானவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதுபோன்ற தொப்புள்கொடி இரத்தத்தை பாதுகாக்க பல வங்கிகள் இப்போது அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தோன்றியுள்ளன. அந்நிறுவனங்களில் குழந்தை பிற்ப்பதற்கு 30 நாட்கள் முன்பு பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் குழந்தை பிறந்த உடன் செய்ய வேண்டிய செய்முறையை அவர்கள் நம்முடைய மருத்துவருக்கு அனுப்பிவைப்பார்கள். குழந்தை பிறந்தவுடன், நம் மருத்துவர் தொப்புள் கொடி இரத்தத்தை பாதுகாப்பான முறையில் சேகரித்து அந்நிறுவனத்திற்கு அனுப்புவார். குழந்தை பிறந்த 36லிருந்து 48 மணி நேரத்திற்குள் முறையாக பாதுகாக்கப்பட்ட இரத்தம் அவ்வங்கிக்குச் சென்றடைய வேண்டும். பிறகு அந்த இரத்தம் நீங்கள் விரும்பும் வரை பாதுகாக்கப் படும். இதற்கான செலவு ஆண்டுதோறும் 125 முதல் 150 அமெரிக்க டாலர். இதுதவிர முதல்முறை பதிவுக்கட்டணம் சுமார் 1000 அமெரிக்க டாலர்.

சரி, இப்படி சேகரித்து வைப்பதின் அவசியம் என்ன? உங்கள் குழந்தைக்கு எந்த வயதில் பிரச்சனை வந்தாலும் இந்த இரத்தத்திலிருந்து ஸ்டெம் செல் பிரித்தெடுத்து வைத்தியம் செய்யலாம். அதுமட்டுமன்றி உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் நோய்களையும் தீர்க்க இந்த செல்கள் பெரும்பாலும் உதவுமாம். ஏன் பல சமயங்களில் பெற்றோர்களின் நோய் தீர்க்கவும் இதை பயன்படுத்தலாம். அனைத்திற்கும் மேலாக, இன்னும் சில ஆண்டுகளில் ஸ்டெம் செல்கள் எல்லாவகையான உயிர்க்கொல்லி வியாதிகளுக்கும் நிவாரணம் அளிக்கப் போகிறது என்று ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல பொதுமக்களும் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். அதற்காக இப்பொழுதே அவர்களின் ஸ்டெம் செல்களை சேகரித்து பாதுகாக்க ஆயத்தமாகிவிட்டார்கள்.

இந்த தொப்புள் கொடி இரத்த ஸ்டெம்செல்களில் எந்த சர்ச்சையும் இல்லை. வீணாக குப்பைக்குப் போவதிலிருந்து இதை சேகரிப்பதால், எந்த எதிக்ஸ் மற்றும் மத நம்பிக்கை பிரச்சனையில்லை. மிகவும் எளிதில் சேகரித்து பாதுகாக்க முடியும். மற்றும் இவ்வகை செல்களின் வெர்சாலிடி ஆச்சரியபடும்படி உள்ளதால் இவ்வகை மருத்துவம் மிகவிரைவில் முன்னேற்றம் காணும் என்பது ஆராய்ச்சியாளர் எதிர்பார்ப்பு.

தொடரும்

Friday, November 17, 2006

ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...2

அமெரிக்காவில் விலங்குக்கான ஸ்டெம் செல் சிகிச்சையும் ஆரம்பித்து விட்டனர். இப்போதைக்கு குதிரைகளுக்கு மட்டும் ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் நாய்களுக்கும் இச்சிகிச்சையை ஆரம்பிக்கப் போகிறார்களாம். குதிரைகளில் முக்கியமாக பந்தயக் குதிரைகளுக்கு இச்சிகிச்சை மிகவும் பயனளிப்பதாக கூறுகின்றனர். மூட்டு தேய்தல், எலும்புமுறிவு போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வியப்பளிக்கும் வகையில் மிகச்சீக்கிரமாக குணமாகிறதாம்.

நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும், நோய்வாய்ப்பட்ட குதிரையை அருகிலுள்ள வெட்னரி டாக்டரிடம் கூட்டிச் சென்றால், அவர் குதிரைக்கு மயக்க மருந்து அளித்து, அதன் உடம்பிலிருந்து குறிப்பிட்ட அளவு கொழுப்பை எடுத்து, ஸ்டெம்செல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்புவார். நாட்டில் மிகச்சில ஆய்வுக்கூடங்களே இப்பணியை மேற்கொண்டுள்ளன. அங்கு குதிரையின் கொழுப்பிலிருந்து ஸ்டெம்செல் பிரித்தெடுக்கப்பட்டு மீண்டும் வெட்னரி டாக்டருக்கு அனுப்ப படுகிறது. அவர் அதை குதிரைக்கு சரியான இடத்தில் ஊசி மூலம் ஏற்றுவார். அவ்வளவு தான். குதிரை கொஞ்சநாட்களில் மீண்டும் பந்தயத்திற்கு ரெடி. இதற்கு சராசரியாக ஆகும் செலவு 2000 அமெரிக்க டாலர்கள்.

இதே போன்ற அடல்ட் ஸ்டெம் செல் முறையை மனிதர்களுக்கும் மருத்துவர்கள் அவ்வப்போது பயன்படுத்துகிறார்கள். இச்சிகிச்சை முறை எல்லா நோயளிகளுக்கும் பயனளிப்பதாக இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். இப்போதைக்கு, இரத்தம் மற்றும் எலும்பு சம்பந்தபட்ட வியாதிகளை குணப்படுத்த அடல்ட் ஸ்டெம் செல் முறையை பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் படித்த செய்தி ஜெர்மனியில் ஒருவர் மாடியிலிருந்து கீழே விழுந்ததாலோ/விபத்திலேயோ(சரியாக நினைவில்லை) அவருடை கபாலம் உடைந்து விட்டது. அடல்ட் ஸ்டெம் செல் முறையால் அவருடய கபாலத்தை மருத்துவர்கள் சரி செய்துள்ளனர். ஆனால் மிகப்பெரும் வியாதிகளான, மாரடைப்பு, கேன்சர், சிறுநீரக கோளாறு மற்றும் நீரிழிவு நோய் போன்ற வியாதிகளுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை முறை கட்டாயம் நிரந்தரமாக தீர்வளிக்கும் என்பதும் அதற்கு அடல்ட் ஸ்டெம் செல்களை விட எம்ப்ரையானிக் செல்களே மிகவும் பொருத்தமானது என்பதும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

எம்ப்ரையானிக் செல்களை ஆய்வகத்தில் எளிதாக மிகப் பெருமளவில் தயாரிக்க முடியும் என்பதாலும், மற்ற பல மனித உறுப்புகளின் செல்களுக்கு மாற்றாக இருப்பதும் (அடல்ட் செல்கள் சில மனித உறுப்புகளுக்கே மாற்றாக செயல்பட முடியுமாம்) ஆராய்ச்சியாளர்கள் எம்ப்ரையானிக் செல் ஆராய்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார்கள். இது குறித்த பல விவரங்கள் பல இணையதளங்களில் உள்ளது.

தொடரும்

ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...1

அமெரிக்க தேர்தல் நடந்த வாரம், ஒரு வேட்பாளர் தனக்கு எதிராக போட்டியிடுபவரைக் குறித்து வானொலியில் குறை சொல்லிக் கொண்டிருந்தார். அவர் மிகப்பெரும் குறையாகச் சொன்ன ஒன்று, எதிர் வேட்பாளர் ஸ்டெம் செல் ஆராய்ச்சியை எதிர்க்கிறார். மக்களே ஸ்டெம் செல் ஆராய்ச்சியை போய் எதிர்ப்பவரை ஆதரிக்கலாமா.. அது இது என்று குற்றம் சாட்டினார்.. சரி அப்படி என்ன தான் ஸ்டெம் செல் ஆராய்ச்சி நடக்கிறது என்று இணையத்தில் மேய்ந்த போது கிடைத்த விஷயங்கள்.

நாம் எல்லாருமே, ஒரே ஒரு செல்லாக இருந்து பல கோடி செல்களாக பிரிந்து முழுமனிதனாக மாறுகிறோம். ஒரு ஆரோக்கியமான மனிதனின் ஏதாவது ஒரு பாகம் பாதிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட செல்கள் அழிந்து ஆரோக்கியமான செல்கள் உருவாகி அப்பிரச்சனைய போக்குகின்றன. அப்படி நிகழாத போதுதான் மனிதன் நோயாளியாகிறான். எனவே மனிதனின் அனைத்து வியாதிகளுக்கும் பாதிக்கப்பட்ட செல்களே காரணம். அப்படியென்றால் வியாதியை குணப்படுத்த பாதிக்கப்பட்ட செல்களை சீர் செய்தாலோ, அல்லது அதற்கு பதிலாக ஆரோக்கியமான் செல்களை உருவாக்கினாலோ என்ன என்ற யோசனையின் விளைவு தான் இன்றைய ஆராய்ச்சியாளர்களின் ஸ்டெம் செல் ரிசர்ச்.

ஸ்டெம் செல்லுக்கு தன்னைத்தானே நீண்ட காலத்திற்குப் புதுப்பித்துக் கொள்ளும் தன்மையும், வேறு மனித உறுப்புகளின் செல்லாக மாற்றிக்கொள்ளும் தன்மையும் உண்டு. சரி இந்த ஸ்டெம் செல்கள் எங்கிருந்து கிடைக்கின்றன. முதலில் விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்கள் மனிதனின் எலும்பு மஜ்ஜையில் மட்டுமே இருக்கிறது என்று எண்ணினார்கள், ஆனால் பல வருட ஆராய்ச்சிக்குப்பிறகு, மனிதனின் பல பாகங்களில், பல தசைகளில் இந்த ஸ்டெம் செல்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். கடைசியாக மனித உடலில் உள்ள கொழுப்பில் அடர்வு மிக்க ஸ்டெம் செல்கள் உள்ளதாகவும், அதனை சுத்திகரித்து ஸ்டெம் செல்களை பிரித்தெடுத்தால் பல நோய்களை குணப்படுத்தலாம் என்பதை கண்டறிந்துள்ளார்கள். இப்படி மனித உடலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஸ்டெம் செல்களை அடல்ட் ஸ்டெம் செல்கள் என்பர்.

அப்படியென்றால் அடுத்த வகை ஸ்டெம்செல் என்ன?....மிகவும் பிரபலமாகவும், சர்ச்சைக்குரியதாகவும் இருக்கும் எம்ப்ரையானிக் (embryonic ) ஸ்டெம் செல். இந்த எம்ப்ரையானிக் ஸ்டெம் செல் மனிதக்கருவிலிருந்து கரு உருவான எட்டு நாட்களுக்குள் பிரித்தெடுக்கப்படுகிறது. கண்டிப்பாக மனித உடலில் கருத்தரித்த கருவிலிருந்து பிரித்தெடுக்கப்படுவதில்லை. வெளியே அதற்கென்று உள்ள கருத்தரிப்பு மையங்களில் கரு உருவாக்கப்பட்டு அதிலிருந்து ஸ்டெம் செல்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. இதுவரை அப்படி பிரித்தெடுக்கும்போது அம்மனித கரு அழிந்து போகின்றன. எனவே இவ்வாராய்ச்சிக்கு பலத்த எதிர்ப்பும் மக்களிடம் உள்ளது. விஞ்ஞானிகள் கருவிற்கு பாதகம் இல்லாமல், செல்லை பிரித்தெடுக்க இயலும் என்று முழுமையாக நம்புகிறார்கள். அவர்கள் அதற்கான ஆராய்ச்சியிலும் இறங்கியுள்ளனர். இத்தகய எம்ப்ரையானிக் ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்குத்தான் ஜார்ஜ் புஷ்ஷின் அரசாங்கம் பெருமளவில் நிதி ஒதுக்கியுள்ளது.

தொடரும்..

Tuesday, July 11, 2006

குளோபல் வார்மிங் - நான் என்ன செய்ய முடியும்?

சிறிது நாட்களுக்கு முன் The Day After Tomorrow படம் பார்த்த போது கொஞ்சம் பீதியாகத்தான் இருந்தது. சரி மனித இனத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. என்ன, நாம் நினைப்பதைவிட மிகச் சீக்கிரமாக இம்முடிவு ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளது. உலக நாடுகளும், உலக தலைவர்களும், ஐ.நா சபையும் ஒன்று சேர்ந்து யோசித்து இந்த குளோபல் வார்மிங் பிரச்சனையை சமாளிக்க வேண்டும். தனி மனிதனாய் நாம் என்ன செய்ய முடியும் என்று தான் இது நாள் வரை நான் எண்ணிக் கொண்டு இருந்தேன்.

ஆனால் இணையத்தில் இது குறித்து தேடும் போது கிடைத்த தகவல்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அதிக அளவு கரியமில வாயுவை(CO2 ) காற்று மண்டலத்தில் கலப்பதே இந்த குளோபல் வார்மிங்கிக்கான காரணம் என்பது நாம் அறிந்ததே. மின்சாரம் மற்றும் எரிபொருள் உபயோகத்தை முடிந்த வரை கட்டுப்படுத்தினால் காற்று மண்டலத்தில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் கட்டுப்படுத்தலாம். எனவே நீங்கள் மின்சாரம் மற்றும் எரிபொருள் உபயோகத்தை முடிந்த வரை சிக்கனப்படுத்தினாலே குளோபல் வார்மிங்கை தடுக்க உம்மால் இயன்றதை செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்.


  1. வேலை முடிந்ததும் கணினியை அணைப்பது.
  2. 10 நிமிடத்திற்கு மேல் கணினி செயல்படாமல் இருந்தால், கணினி திரை தானாகவே அணைவது போல் கணினியில் settings செய்தல்.
  3. நடந்து செல்ல முடிந்தால், எரிபொருள் வாகனங்களைத் தவிர்ப்பது
  4. துணி துவைக்கும் இயந்திரத்தில் வெந்நீர் ப்யன்படுத்துவதை தவிர்ப்பது
  5. தேவையற்ற இடங்களில் மின்விளக்குகளை அணைத்தல்.
  6. கதவு மற்றும் சன்னலை திறந்து வைத்து இயற்கை வெளிச்சம் பெறுவது
  7. Incandescent light bulbs பதிலாக Compact fluorescent light bulbs பயன்படுத்துதல்.
  8. நம் வாகனத்தில் சக்கரங்களின் காற்றழுத்தத்தை சரியான அளவில் வைத்திருத்தல்.
  9. நம் வாகனத்தை சரியான வேகத்தில் ஓட்டுதல்
  10. நம் வாகனத்திற்கு Emission Test செய்து சரிபார்த்தல்

இது போல் ஒரு தனிமனிதனால் குளோபல் வார்மிங்கை த்டுக்க என்னவெல்லாம் செய்யலாமெனெ சில இணையதளங்களில் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள், அதற்கான சுட்டி

http://www.fightglobalwarming.com/page.cfm?tagID=135

http://www.worldwildlife.org/climate/involved/individuals.cfm

இத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, உலகளவில் குளோபல் வார்மிங்கை எதிர் கொள்வதற்கு எடுக்கப்பட்டு வரும் விஷயங்கள் நம்பிக்கையூட்டுவனவாக உள்ளன. Greenhouse gases ( விலங்கு கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் வாயு ), Green Power (காற்று மின்சாரம், சூரியமின்சாரம்) , எத்தனால் என்று பல மாற்று எரிசக்திகள் குளோபல் வார்மிங்கை கட்டுபடுத்த உபயோகப்படுத்தப்பட போகிறது

இத்தளத்தில் குறிப்பிட்டுள்ள பல குறிப்புகளை நடைமுறைப்படுத்த நம்மால் இயலும். இதை செயல்படுத்துவதின் மூலம் நீங்கள் பணத்தையும் சேமிக்கலாம். உங்கள் கொள்ளுபேரன் விளையாட இவ்வுலகத்தையும் காப்பாற்றி வைக்கலாம். எல்லாம் மிக எளிய விடயங்கள். இதில் குறிப்பிட்டுள்ள விடயங்களை செயல்படுத்த அரசாங்கத்தின் தயவு தேவையில்லை, அரசியல்வாதிகளின் பரிந்துரை தேவையில்லை. இதற்குபின்னும் நான் ஏன் இதையெல்லாம் செய்ய வேண்டுமென்று தோன்றினால் ஒரேஒரு தடவை The Day After Tomorrow படம் பார்க்கவும்.